Friday 12 February 2021

ஸ்வேதகேது (Shvetaketu)

 


 

 (சாந்தோக்யஉபநிஷதத்தில் (Chaandhogya Upanishad) காணப்படும் 'தத்வமஸி' - ('Tat-Tvam-Asi') என்னும் மகாவாக்கியம் தோன்றியகதை இது. அந்தக்காலத்தில், கல்வி என்பது பரம்பொருளைப்பற்றிய அறிவே என்று கருதப்பட்டது. அது மட்டும் அல்ல;  பிறகலைகள் எத்தனை கற்றாலும், அந்த ஒரு அறிவு இல்லையேல், ஒரு பயனும் இல்லை என்ற எண்ணமும் பரவலாகக் காணப்பட்டது. ஆகவேதான், பலவிதமான கலைகளை கற்றுத் தேர்ந்த தன்மகனுக்கு, எளிமையான எடுத்துக்காட்டுக்கள் மூலம் பிரம்மஞானத்தைப் புகட்டும் ஒரு மகத்தான தந்தையின் அன்பையும் ஆற்றலையும் வெளிக்கொணரும் விதமாக இந்தக்கதையில் வரும் உரையாடல் அமைந்துள்ளது.)

 

உத்தாலக ஆருணி (Uddaalaka Aaruni) என்று ஒரு ரிஷி இருந்தார். அவருக்கு ஸ்வேதகேது என்று ஒருமகன். தானே சிறந்த ஆசிரியராக இருந்த போதிலும், தன் மகன் வேறொரு குருவிடம் சென்று குருகுலவாசம் செய்து கல்வி பெறவேண்டும் என்று ரிஷி ஆருணி விரும்பினார். ஒரு நல்ல குருவிடம் அவனை ஒப்படைத்தார். ஸ்வேதகேதுவும் ஆர்வத்துடன் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான்.

12 ஆண்டுகள் கழிந்தபின், குருவின் பாராட்டையும், ஆசியையும் பெற்றுத் தன் வீடு திரும்பினான்.

மகன் திரும்ப வந்ததில் ரிஷி ஆருணிக்கு மிக்க மகிழ்ச்சி தான். கூடவே வருத்தமும். ஏனென்றால்,  அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவன் உள்ளத்தில் தான் நிறையக் கற்று விட்டோம் என்ற செருக்கு இருப்பது அவருக்குப்புரிந்து விட்டது. எனவே, தன் மகனுக்குச் சரியான ஞானத்தைப் புகட்ட வேண்டும் என்று தீர்மானித்து, அவனைத் தன்னிடம் வருமாறு பணித்தார்.

தன்னிடம் வந்து வணங்கி நின்ற மகனிடம் கேட்டார், "மகனே! எதைக் கற்பதனால், கேட்காதவற்றைக் கேட்பதற்கும், பார்க்காதவற்றைப் பார்ப்பதற்கும், அறிய முடியாதவற்றை அறிவதற்கும் முடியுமோ, அந்தக் கல்வியைக்கற்றாயா?"

"அது என்ன தந்தையே?  என் ஆசிரியர் அதை எனக்குக் கற்பிக்கவில்லையே!" என்றான் ஸ்வேதகேது.

" அது தான் ப்ரம்மம். அது தான் எங்கும் இருப்பது. அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார் தந்தை.

"அது எப்படி இருக்கும், தந்தையே?"

"அனைத்துப் பொருட்களின் ஆதாரம் அது தான். பொன்னால் ஆன ஆபரணங்கள், அந்தப் பொன்னில்லாமல் இருக்க முடியாது இல்லையா? மண்பாண்டங்கள் மண் இல்லாமல் இருக்க முடியாது இல்லையா? அது போலத்தான், இவ்வுலகில் உள்ள எதுவுமே ப்ரம்மம் இல்லாமல் இருக்க முடியாது".

"அப்படியானால், அந்த ப்ரம்மத்தின் உருவம் எப்படி இருக்கும், என்று கூறுங்கள், தந்தையே!"

"அது மிகவும் நுண்மையானது."

"அப்படியென்றால்?"

" அது இருப்பது கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அது தான் எங்கும் இருக்கிறது."

"புரியவில்லை, தந்தையே!"

"இரு. உனக்கு விளக்குகிறேன். ஒரு ஆலம்பழத்தைக் கொண்டுவா."

"இதோ, கொண்டுவந்து விட்டேன்,  தந்தையே."

"அதில் இருந்து ஒரு விதையைத் தனியாக எடு."

"மிகச் சிறியதாக இருக்கிறது. ஆனாலும், எடுத்து விட்டேன். இந்தாருங்கள்."

"அதை உடை."

"உடைத்தாயிற்று."

அதற்குள் என்ன இருக்கிறது?

"அதில் ஒன்றுமே இல்லை."

"அப்படியென்றால், இந்த ஆலமரம் எதிலிருந்து வந்தது?"

"இந்த ஆலம் விதையில் இருந்து தான்."

"இவ்வளவு பெரியமரம், அந்த விதையை உடைத்துப் பார்த்தபோது கண்ணுக்குத் தெரிந்ததா?"

" இல்லை, தந்தையே!"

" ஆனாலும், அதற்குள்தான் இத்தனை பெரிய ஆலமரம் உருவாகி, வளர்ந்து, வாழ்வதற்கான கரு இருக்கிறது. புரிகிறதா?"

"ஆம், தந்தையே! இதை நான் உணரும்படி விளக்குங்களேன்."

"சரி. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வா."

"இதோ! எடுத்து வந்துவிட்டேன்."

"அதில் கொஞ்சம் உப்பைப் போட்டு வை. சிறிது நேரம் கழித்துவா."

சிறிது நேரம் கழித்து வந்த ஸ்வேதகேது, "தந்தையே! பாத்திரத்தில் போட்ட உப்பைக் காணவில்லை."

"அப்படியா! நீரில் உப்பு கரைந்து போயிருக்கும். அந்தப் பாத்திரத்தின் மேல் பகுதியில் உள்ள நீரைக் குடி. அதன் சுவை எப்படிஇருக்கிறது?"

"உப்பாக இருக்கிறது."

"சரி. நடுப் பகுதியில் உள்ள நீரைக் குடித்துப்பார்."

" தந்தையே! அதுவும் உப்பாகத்தான் இருக்கிறது."

"அடியில் உள்ள பகுதி?"

"அதுவும் தான் தந்தையே!"

இந்த நீரில் உப்பை நீ பார்க்க முடியவில்லை. ஆனால் சுவைத்தவுடன் அதன் இருப்பை உணர்ந்து கொண்டாய். இதே போல் தான் அந்த ப்ரம்மம் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் காண முடியாது; ஆனால், அதன் இருப்பை உணர முடியும்.  நீயும் அந்த ப்ரம்மமாகவே இருக்கிறாய்! ‘தத் த்வம் அஸி’ ('Tat Tvam Asi')!.

 

(Tat என்றால் 'அது'. Tvam என்றால் 'நீ'. Asi என்றால் 'இருக்கிறாய்'  அது நீயாக இருக்கிறது அல்லது, நீ அதுவாக இருக்கிறாய்). உன்னில் நிறைந்திருப்பது அந்த ப்ரம்மம் தான். அதை அறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், அதை நன்றாக உணரலாம். இப்போது புரிந்ததா? அந்தப் ப்ரம்மத்தை நீ உணர்ந்தால் தான், கேட்க முடியாததைக் கேட்கலாம், பார்க்க முடியாததைப் பார்க்கலாம், அறிய முடியாததை அறியலாம்."

" புரிந்து கொண்டேன்,  தந்தையே! " என்று சொன்ன ஸ்வேதகேதுவின் அகந்தை முற்றுமாக அழிந்துவிட்டிருந்தது.

( Originally published in the Bharatiya Vidya Bhavan's bulletin - April -2020)

No comments:

Post a Comment