Sunday 2 August 2020

முகத்தில் ஒரு சிவப்பு வடு -- சாமர்ஸெட் மாம்

சாமர்ஸெட் மாம் (Somerset Maugham)
எழுதிய சிறுகதைகளில் ஒன்று இது. ‘The man with the scar’ என்ற இந்தக்கதை, மேல் நிலை வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இருந்தது. மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். இந்தக்கதையைப்படித்து முடித்தவுடன் எழுந்த கேள்விகளும், சொல்லப்பட்ட பதில்களும், என் மாணவர்களுக்கும், நினைவில் இருக்கும். பிற மொழி இலக்கியங்களையும் தமிழுக்குக்கொண்டு வரவேண்டும் என்ற ஆசையில், இந்தக்கதையைத்தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். 90% மூலத்தோடு ஒத்துப்போகும். உங்கள் கருத்துக்களும், யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
முகத்தில் ஒரு சிவப்பு வடு
அந்த மனிதனின் முகத்தில் இருந்த அந்த வடுவைத்தான் நான் முதன்முதலில் கவனித்தேன். நீண்டு, அகன்று, செக்கச்செவேலென்ற அந்த வடு, அவனுடைய நெற்றிப்பொட்டில் இருந்து தாடை வரை இறங்கி, ஒருஅரிவாள் போல் வளைந்து இருந்தது. ஏதாவது பெரிய கத்தியாலோ அல்லது ஏதாவது குண்டு வெடித்து அதன் பகுதிகள் அவன் முகத்தில் பட்டு, பயங்கரமான காயம் ஆகி, அது வடுவாக மாறியிருக்குமோ? அந்த வட்டமான, பூசினாற்போன்ற, நட்பு நிறைந்த முகத்தில், அதை எதிர்பார்க்கவே முடியாது தான். மற்றபடி அவனுடைய முகத்தில் குறிப்பிடும் படியாக எதுவும் இல்லை. சாதாரணத்துக்கும் அதிகமான உயரத்துடன், வலிமை நிறைந்த அவனுடைய உடலமைப்புக்கு, அந்த முகம் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.
அவன் எப்போதும் ஒரு கசங்கிய சாம்பல் நிற சூட்டும், காக்கி சட்டையும், கிழிந்த அகன்ற தொப்பியும், அணிந்திருந்தான். ஒவ்வொரு நாளும், குவாடமாலாவில் இருந்த அந்த பாலஸ் ஹோட்டலுக்கு, காக்டெயில் அருந்தும் நேரத்தில் வந்து, நிதானமாக ஒவ்வொரு மேஜையாகப்போய், லாட்டரி சீட்டுகளை விற்க முயல்வான். இப்படித்தான் அவன் சம்பாதித்தான் என்றால், அவன் மிகவும் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், நான் பார்த்தவரை, யாருமே, அவனிடம் லாட்டரி சீட்டுகளை வாங்கியதில்லை. ஆனால், சிலர், அவனுக்கு, ஏதாவது குடிக்க வாங்கிக்கொடுப்பார்கள். அவன் எப்போதும் அதை மறுத்ததில்லை. நீண்ட தூரங்கள் நடந்து பழகியவன் போல், அந்த மேஜைகளிடையே நடந்து, அங்கே அமர்ந்திருப்பவர்களிடம் தன்னிடம் இருந்த லாட்டரிச் சீட்டுகளின் எண்களைச்சொல்லி, “வாங்கிக்கொள்கிறீர்களா?” என்று கேட்பான். 'வேண்டாம்' என்றால், ஒரு புன்னகையுடன் அடுத்த மேஜைக்கு நகர்ந்து விடுவான்.
ஒரு நாள் நான் என் நண்பன் ஒருவனுடன் அந்த பாலஸ் ஹோட்டலில் பாருக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த சிவப்பு வடுவுள்ள மனிதன், உள்ளே நுழைந்தான்.
என்னிடம் லாட்டரி சீட்டுகளை அவன் காட்டிய போது, நான் 'வேண்டாம்' என்று தலையசைத்தேன். ஆனால், என் நண்பன் அவனைப்பார்த்து, நட்புடன் தலையாட்டியது மட்டுமன்றி," ஹலோ ஜெனரல்! எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு அவன்," வியாபாரம் நன்றாக இல்லை தான். ஆனால், நிலைமை இதை விட கூட மோசமாக இருக்கலாமில்லயா?" என்றான்.
அடுத்து, என் நண்பன், " என்ன சாப்பிடுகிறீர்கள், ஜெனரல்?" என்று கேட்டான்.
'ஒரு ப்ராண்டி" என்றான் அவன். அது வந்ததும், அதை ஒரே மூச்சில் குடித்து விட்டு, கிளாஸை மேஜை மேல் வைத்து விட்டு, "தாங்க்ஸ். பின்னர் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பி, அருகில் இருந்த மற்றவர்களிடம் லாட்டரி சீட்டுகளைக் காட்ட ஆரம்பித்தான்.
அவன் சற்று தூரம் சென்ற பின்னர், என் நண்பனிடம், "யாரப்பா அந்த உன் நண்பன்? அவன் முகத்தில், பயங்கரமான வடு இருக்கிறதே!" என்றேன்.
என் நண்பன் சொன்னான்:
"அவன் நிகாராகுவாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவன். முரடன் தான்; கொள்ளைக்காரன் தான்; ஆனால், மோசமானவன் இல்லை. புரட்சியாளர்களின் தலைவனாக இருந்தான். அவனிடம் இருந்த வெடி மருந்துகள் மட்டும் தீர்ந்து போயிருக்காவிட்டால், அவன் தன் நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு, புதிய அரசாங்கத்தின் போர் அமைச்சர் ஆகி இருப்பான். இப்படி குவாட்டமாலாவில் ஒரு ஹோட்டலில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருக்க மாட்டான்.
அவனையும், அவனுடைய சகாக்களையும் பிடித்து கோர்ட் மார்ஷல் செய்தார்கள். மறு நாள் காலையில் அவர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு ஆயிற்று. இரவு முழுதும் அவன் லாக் அப்பில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
மறு நாள் காலையில், படைவீரர்கள், அவனையும், அவனது சகாக்களையும் வந்து அழைத்துச் சென்றார்கள். ஒரு சுவற்றின் முன் அவர்கள் ஐந்து பேரையும் வரிசையாக நிற்க வைத்தார்கள். அவர்களின் எதிரே, அவர்களைச் சுடுவதற்குப் படை வீரர்கள் துப்பாக்கியுடன் தயாராக நின்றிருந்தார்கள்.
சிறிது நேரம் கழிந்தது. அவன் பொறுமையிழந்து, “எதற்காக எங்களைக் காக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கத்தினான்.
“அரசின் படைத்தளபதி உங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுவதைப் பார்க்க விரும்புகிறார். அவருடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற பதில் வந்தது.
“அப்படியென்றால், எனக்கு இன்னும் ஒரு சிகரெட் பிடிப்பதற்கு நேரம் இருக்கிறது. அவர் எப்போதுமே நேரத்தை மதிப்பவர் இல்லை” என்று சொல்லி, அவன் சிகரெட்டைப்பற்ற வைக்கவும், தன் உதவி அலுவலர்களுடன் அரசின் படைத்தளபதி ( அவர் பெயர் ஸான் டியாகோ. நீங்கள் அவரைச் சந்தித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை) அங்கே வந்து சேரவும், சரியாக இருந்தது.
வழக்கமான சம்பிரதாயங்களுக்குப்பின்னர், அவர் தண்டனைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்களைக் கேட்டார், “ உங்களுக்கு ஏதாவது கடைசி ஆசை இருக்கிறதா?”
மற்ற நால்வரும் இல்லை என்று தலையசைத்தார்கள்.
ஆனால், நம் நண்பன் வாயைத்திறந்தான், “ ஆமாம்! நான் என் மனைவியிடம் விடை பெற விரும்புகிறேன்.”
“சரி!” எனக்கு அதில் ஆட்சேபணை ஒன்றும் இல்லை. உங்கள் மனைவி எங்கிருக்கிறார்?
“இந்த சிறை வாசலிலேயே காத்துக்கொண்டிருக்கிறார்.”
“அப்படியென்றால், ஒரு ஐந்து நிமிடம் தான் தாமதம் ஆகும்”
“அது கூட ஆகாது, ஜெனரல்”.
“அவரைத் தனியாக அழைத்துச்செல்லுங்கள்” என்று அந்தத் தளபதி உத்தரவிடவும், இரண்டு படைவீரர்கள் அவரை அழைத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினார்கள்.
பின்னர் தளபதி தலையசைத்தவுடன், அந்த நான்கு பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொருவராகக் கீழே விழுந்து, துடித்து, அடங்கினார்கள்
நம் நண்பன், ஒரு சிகரெட்டை, புகைத்து விட்டு, மீதமிருந்த துண்டை வீசி எறிந்தான்.
வாசலில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பெண் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு, அவசர அவசரமாக உள்ளே ஓடி வந்தாள். நம் நண்பனைப் பார்த்தவுடன், திடீரென்று நினறாள். ஓ வென்று கத்திக்கொண்டு கைகளை நீட்டிக்கொண்டு, முன்னால் ஓடினாள்.
அவள் கருப்பு உடையணிந்திருந்தாள். தலைக்கு மேல் முக்காடிட்டிருந்தாள். அவள் முகம் சுண்ணாம்பு போல் வெளுத்திருந்தது.
அவள் சிறிய பெண்ணாக இருந்தாள். அழகான முகத்தில் மிகப்பெரிய கண்களுடன். ஆனால், அவை வேதனையால் நிரம்பி இருந்தன.
சற்றே திறந்த வாயுடன், துன்பம் மேலிட்டு அவள் அவனை நோக்கி ஓடிய போது எதற்கும் அசராத அந்தப்படை வீரர்களைக் கூட அவளுடைய பேரழகு அதிர்ச்சி அடையச்செய்தது.
நம் நண்பன் ஓரிரு அடிகள் அவளை நோக்கி நடந்து வந்தான். இவள் பாய்ந்து சென்று அவனைத் தழுவிக்கொண்டாள்.
“என் இதயத்தின் ஆத்மாவே!” என்று சொல்லிக்கொண்டே, அவன் அவளுடைய இதழ்களில், மென்மையாக முத்தமிட்டான். அதே நேரம், தனது முரட்டு சட்டையில் இருந்து ஒரு கத்தியை எடுத்து (அவனிடம் கத்தி எப்படி வந்தது என்று புரியவில்லை) அவளுடைய கழுத்தில் குத்தினான். அறுபட்ட இரத்தக் குழாயில் இருந்து பொங்கிய ரத்தம் அவனுடைய சட்டையை நனைத்தது. அவன் மீண்டும் அவளை ஆரத்தழுவி, அவளுடைய இதழ்களில் முத்தமிட்டான்.
இதெல்லாம் கண நேரத்தில் நடந்து விட்டது. என்ன நடந்தது என்று புரிந்த போது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் கூக்குரலிட்டார்கள். பாய்ந்து சென்று அவனைப் பிடித்தார்கள். அவன் கை விட்டவுடன், அந்தப்பெண் கீழே விழுந்திருப்பாள், நல்ல வேளை, ஒரு துணை அதிகாரி அவளைப் பிடித்துக்கொண்டார். அவள் நினைவிழந்திருந்தாள். அவளைக்கீழே கிடத்திக் கவலையுடன் மற்றவர்கள் அவளைச்சூழ்ந்து கொண்டார்கள்.
“அவள் இறந்து விட்டாள்” என்றார் அந்த அதிகாரி.
நம் நண்பன் சிலுவைக்குறி இட்டுக்கொண்டான்.
“ஏன் அப்படிச்செய்தாய்?” என்று கேட்டார் அரசின் தளபதி
”நான் அவளை மிகவும் நேசித்தேன்.” என்றான், அவன்.
அங்கிருந்தவர்களிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது. அவனை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த தளபதி சொன்னார்,
“நீங்கள் செய்தது மிகவும் மேன்மையான செய்கை! “
மீண்டும் சொன்னார், “என்னால் இவருக்கு மரண தண்டனை வழங்க முடியாது. என்னுடைய காரை எடுத்துக்கொண்டு, இவரை அழைத்துக்கொண்டு போய், எல்லையில் விட்டுவிடுங்கள்."
பின், அவனை நோக்கித்திரும்பி சொன்னார், " ஐயா! ஒரு வீரன் இன்னொரு வீரனுக்கு
வழங்க வேண்டிய மரியாதையை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.”
அங்கிருந்த படைவீரர்களிடமிருந்து அதை ஆமோதிக்கும் ஒலி எழுந்தது.
துணை அதிகாரி, அவன் தோளை மெதுவாகத் தொட்டார். மறு பேச்சின்றி, இரண்டு படைவீரர்களுக்கு மத்தியில், நடந்து காத்திருந்த காரை நோக்கி அவன் நடந்தான்.”
என் நண்பன் சொல்லி முடித்தான். நான் சிறிது நேரம் பேச முடியாமல் அமைதியாக இருந்தேன்.
“அது சரி! அந்த சிவப்பு வடு. அவனுக்கு எப்படி ஏற்பட்டது?”
“ஓ! அதுவா! அது ஏதோ ஒரு ஜிஞ்சர் ஏல் (ஓரு வகை மது) பாட்டிலைத்திறக்கும் போது, அது வெடித்து விட்டது.”
“எனக்கு அதைப்பார்க்கவே பிடிக்கவில்லை” என்றேன், நான்.
Image: W. Somerset Maugham
Courtesy: Internet
,

No comments:

Post a Comment