Sunday, 19 April 2020

இவ்வளவு குளிர்ச்சியை எப்படி பொறுத்துக்கொண்டாய், சிவனே?


நமது பக்த கவிகள் தங்கள் பக்தியை எப்படி அழகில் குழைத்துக்கொடுத்திருக்கிறார்கள்!
16ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த அப்பய்ய தீக்ஷிதர் என்ற மகாஞானியின் அழகு சொட்டும் ஸ்லோகம் இது. இன்று இந்த ஸ்லோகத்தை விருத்தமாகக்கேட்ட போது அதன் அழகில் மெய்ம்மறந்து, அந்த ஆனந்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
मौलौ गङ्गाशशाङ्कौ करचरणतले शीतलाङ्गा भुजाङ्गाः
वामेभागे दयाद्री हिमगिरिदुहिता चन्दनं सर्वगात्रे ।
इत्थं शीतं प्रभूतं तव कनकसभानाथ सोढुं क्वशक्तिः
चित्ते निर्वेदतप्ते यदि भवति न ते नित्यवासो मदीये ॥
கனகசபையின் தலைவனான சிவபெருமானே! உன் சிரத்தில் கங்கையையும், சந்திரனையும் வைத்திருக்கிறாய்! கைகளிலும், கால்களிலும் குளிர்ச்சியான உடலுடைய பாம்புகளைச்சுற்றிக்கொண்டிருக்கிறாய்! இடது பக்கத்திலோ, பனி நிறைந்த இமயமலையின் மகளாகிய, கருணையால் நனைந்திருக்கும் மனதுடைய பார்வதியைவைத்திருக்கிறாய்! உடல் முழுவதும் குளிர்ச்சி தரும் சந்தனத்தைப்பூசியிருக்கிறாய்! இவ்வளவு குளிர்ச்சியையும் தாங்கும் வல்லமை உனக்கு எப்படி வந்தது? இன்னும் உன்னை அடையாத ஏக்கத்தில் எப்போதும் தகித்துக்கொண்டிருக்கும் என் உள்ளத்தில் நிரந்தரமாக நீ வசிப்பதனால் அன்றோ?
பக்தன் தன்னை உயர்த்திக்கொள்வதாய் பொருள் கொள்ளக்கூடாது! அந்தப்பரம்பொருளே, பக்தர்களின் இதயத்தில் குடி கொண்டு அவர்களின் அன்பிற்கு அடிமையாக உள்ளான் என்ற பொருளில் எழுதப்பட்டுள்ள ஸ்லோகம் இது.