Thursday 10 September 2020

நேரத்தை வெறுத்தவன்

 நேரத்தை வெறுத்தவன்

அவன் என்னிடம் பணம் கேட்கப்போகிறான் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால், என்னுடைய உடை புதிதாக இருந்தது, அவனுடையது, பழையது. என் முன் இருந்த கோப்பை நிரம்பி இருந்தது. அவனுடையது காலியாக இருந்தது. எனக்கு அவனைப்பார்த்தால், பாவமாக இருந்தது. முன் பின் தெரியாதவரிடத்தில் பணம் கேட்கும் படி ஒரு நிலைமை எனக்கும் வராது என்பது என்ன நிச்சயம்? இன்னும் இருபது வருடங்களில், எனக்கும் அறுபது வயது ஆகி விடும். நானும் அவனைப்போல் ஒரு வயதானவனாகி இருப்பேன். இருபது வருடங்களில் என்னென்ன டக்குமோ? யார் கண்டார்கள்?

அவன் என் மேஜைக்கு வந்து, என் முன் உட்கார்ந்தான். தன் பாக்கெட்டியிருந்து ஒரு வாட்சை வெளியே எடுத்து, என் முன் வைத்தான். அது அழகான தங்க முட்களுடன் கூடிய வெள்ளியினாலான வாட்ச். இப்போதெல்லாம் இப்படிப்பட்ட வாட்ச்கள் கிடைப்பதே அரிது.

"இரண்டு பவுண்டுகள் கொடுத்தால், இது உங்களுடையதாகி விடும்" என்றான். "இது எனக்கு நியாயமாகக் கிடைத்தது. "

வேறு எதைப்பற்றியும் பேசாமல், நேராக விஷயத்துக்கு வந்ததில் இருந்து, அவனுக்கு இது புதிதல்ல என்பது புரிந்தது.

"எனக்கு வேண்டாம்" என்று சொன்னேன். ஆனாலும், அவனைப் பார்க்க, பாவமாக இருந்ததால், வாட்சை அவனை நோக்கி நகர்த்திய போது கூடவே ஒரு பத்து ஷில்லிங்க் நோட்டையும் வைத்து நகர்த்தினேன். அவனுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தில் அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவனுக்காக கொஞ்சம் உணவும், மதுவும் வரவழைத்தேன்.

அதை சாப்பிட்டுக்கொண்டே சொன்னான், "நீங்கள் அந்த வாட்சை வாங்கிக்கொண்டிருந்தால், எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். "

"அது முடியாது."

என்னிடம் அவன் ஏதோ சொல்ல விரும்புவது போல் இருந்தது.

"எனக்கு இந்த வாட்சுகளைக்கண்டாலே வெறுப்பு" எதையோ மறந்து விட்டு, அப்போது தான் நினைவுபடுத்திக் கொண்டவன் போல, திடீரென்று சத்தமாகச் சொன்னான். " இந்த வாட்சுகளால் தான் எல்லாம் ஆரம்பித்தது."

"எல்லாம், என்றால்?"

"இது" என்று தன் ஏழ்மையான உடைகளைச் சுட்டிக்காட்டி விட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. நான் ஒருவரைச் சந்திப்பதற்காக அங்கு வந்திருந்தேன். அவர் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது.

"அவன் பெயர் க்ரிஸ் செல்பி (Chris Selby)". அந்த வயதான மனிதன் சொல்லத்தொடங்கினான். அவன் லண்டனில் நடிகர்களை ஏற்பாடு செய்யும் ஒரு ஏஜண்ட். அவன் மிக முக்கியமான நடிகர்களுடன் சம்பந்தப்பட்டிருந்தான். அவன் ஒன்றும் ஏழையல்ல. ஆனால், இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிக்க வழி இருந்தால், அதை அவனால் விட்டு விட முடியாது. தனக்கு சம்பந்தமில்லாத தொழில் கூட செய்வான்."

அவன் சகஜமாக கதையைத் தொடர்ந்தான். அவன் சொன்ன விதத்திலிருந்து இந்தக் கதையைப் பலரிடம் சொல்லி அவனுக்குப் பழக்கம் என்பது புரிந்தது.

"இது முதல் உலகப்போர் முடிந்த சமயத்தில் நடந்தது.

அந்த க்ரிஸ் செல்பி பழகுவதற்கு இனிமையான ஒரு மனிதன். மென்மையான குரலும், கவர்ச்சியான புன்னகையும் கொண்ட அவன், தான் பணம் சம்பாதிக்கும் வழியில் குறுக்கிடுபவர்களுக்கு என்ன கெடுதல் வேண்டுமானாலும் செய்வான். இதை அறியாத பலரும் அவனை மிகவும் விரும்பினார்கள்.

ஒவ்வொரு வருடமும் லண்டனிலிருந்து பாரிஸுக்கு ஆறு முறை வருவான். நல்ல நாடகங்களையும், இசை நிகழ்ச்சிகளையும் பார்ப்பான். பாரிஸில் அவனுக்கு நிறைய பேரைத்தெரியும்.

வருடத்தில் இரண்டு முறை அவனுடைய காரை எடுத்துச்செல்வான்--- டோவர் (Dover) இல் இருந்து கேலய்க்கும்,(Calais) கேலய்லிருந்து டோவருக்கும் . ( Dover ப்ரிட்டனிலும், Calais ஃரான்ஸிலும் இருந்தாலும், இரண்டும், ஒரு ஜலசந்தியால் இணைக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் அல்லது படகு மூலம் ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்துக்குச் செல்ல முடியும். ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்துக்குப் பொருட்களைக் கடத்துவது குற்றம்.)

கஸ்டம்ஸில் இருந்த பெரும்பாலோருக்கு அவனைத்தெரியும்; பிடிக்கவும் செய்யும். ஒரு வருடத்தில் ஆறு முறை, பத்து பத்து நிமிடங்கள் மட்டும் பார்த்தால், அவனை விரும்புவது சுலபம் தான். அவனை நன்கு அறியத் தொடங்கியவர்களுக்குத்தான் அவனைப்பிடிக்காமல் போயிற்று. அதுவுமல்லாமல், அந்த கஸ்டம்ஸில் இருந்தவர்களுக்கு, அவன் லண்டனில் நடக்கும் நாடகங்களுக்கான இலவச டிக்கெட்டுகளும் கொடுப்பது வழக்கம். அவனுக்கு கஸ்டம்ஸில் யாருடனும், எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. வருடத்துக்கு இரண்டு முறை காரை எடுத்துக்கொண்டு வரும் போது தவிர, அவன் எதையும் கடத்தியதில்லை. ஆனால், அவன் காரை எடுத்துக்கொண்டு வரும் போது, கதையே, வேறு! வருடத்துக்கு இரண்டு முறை கிட்டத்தட்ட 5000 வாட்சுகளை அவன் காரில் கடத்திக்கொண்டு வருவான்.

'இவ்வளவா' என்று உங்களுக்குத் தோன்றலாம். காரின் தளத்தையும் பெட்ரோல் டாங்கையும், வாட்சுகளை அடுக்க ஏதுவாக அவன் மாற்றி அமைத்திருந்தான். அடிக்கடி பெட்ரோல் போடுவதற்காகக் காரை நிறுத்த வேண்டி வரும். ஆனாலும், ஒவ்வொரு ட்ரிப்பிலும் கிடைக்கும் 1000 டாலரைப் பார்க்கையில் அது பெரிய சிரமம் இல்லை.

நாமானால், இப்படி ஒரு காரியத்தைச் செய்தோமானால், பயங்கர பதட்டத்தில் இருப்போம். ஆனால், க்ரிஸ் செல்பிக்கு வாட்சுகளை எப்படிக் கடத்துவது என்று தெரியும். அவன் பதட்டமே பட மாட்டான்.

நவம்பர் மாதத்தில், ஒரு நாள், க்ரிஸ் செல்பி லண்டனை விட்டு அவனுடைய காரில் கோபமாகப் புறப்பட்டான். சென்ற முறை அவன் கடத்திக்கொண்டு வந்த வாட்சுகளில் அவன் எதிர் பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. அந்த கடிகாரக் கடைக்காரனிடத்தில் இதைப்பற்றிப் பேசி விட வேண்டும் என்று தீர்மானித்தான்.

ஆனாலும் டோவர் துறைமுகத்துக்குப் போகும் போதெல்லாம், அவன் தன் கோபத்தை யாரிடமும் காட்டவில்லை. கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ஒரு புதிய நாடகத்துக்கான டிக்கெட்டைக் கொடுத்தான். இரண்டு மணி நேரத்தில், பாரிஸை அடைந்து அந்த ரோடுகளில் காரை ஓட்டிக் கொண்டிருந்த போதும், தன் கோபத்தை அடக்கிக்கொண்டு தான் இருந்தான்.

அங்கே தான் எப்போதும் வாட்சுகள் ஆர்டர் செய்யும் டீலரைப்போய்ப் பார்த்தான். அவர் பெயர் மஸ்யூர் ஆடியட். அவருடைய இரண்டு சகோதரர்கள் அவருக்கு உதவி செய்து வந்தார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை. மஸ்யூர் ஆடியட் மிகவும் பணிவுடனும் எச்சரிக்கையுடனும் பேசினார். கடத்தலில் அவருக்கு செல்பி மட்டும் தான் ஒரே வாடிக்கையாளர். சிறிய லாபத்துக்காக அடிக்கடி பிரச்சினையில் மாட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை.

கடைக்குப்போனவுடனே, மரியாதைக்காகக் கூட நலம் விசாரிக்காமல், சென்ற முறை கொடுத்த வாட்சுகள் சரியில்லை என்று புகார் சொன்னான், செல்பி. "ஒரு ஆயிரம் வாட்சுகள் வேலை செய்யவில்லை; மற்றவை நன்றாக இல்லை; பாக்கிங்கும் சரியில்லை. எனவே, சென்ற முறை லண்டன் போகும் வழியிலேயே பல உடைந்து விட்டன." என்று சொல்லிக் கோபத்துடன், ஆடியட்டின் பரம்பரையை மட்டுமன்றி, ஃப்ரான்ஸ் நாட்டையே திட்டித் தீர்த்தான்.

ஆடியட்டுக்கு மிகவும் கோபம் வந்தது. க்ரிஸ் செல்பியைக்கொன்று விட வேண்டும் என்று கூட நினைத்தான். ஆனால், அவன் மூலமாகக்கிடைக்கும் அந்த லாபத்தை நினைத்து அமைதியாக இருந்தான். சென்ற முறை ஸ்விட்ஜர்லாண்டில் இருந்து தருவித்த வாட்சுகளை சரியாக இருக்கின்றனவா என்று பார்க்க அவனுக்கு நேரமில்லாமல் போய்விட்டது என்றான். மறு நாள் வரும் வாட்சுகள் நிச்சயம் நல்லவையாக இருக்கும் என்று உறுதியளித்தான்.

ஆனால், அடுத்த நாள் வாட்சுகள் வரவில்லை. அதற்கு அடுத்த நாள் காலை, வாட்சுகளைத் தன் காரில் பாக் செய்வதற்காக செல்பி அந்தக் கடைக்கு முன் வண்டியைக்கொண்டு சென்ற போதும் அவை வந்திருக்கவில்லை.

அன்று இரவு அவன் படகில், காரை எடுத்துக்கொண்டு போகும் போது, வாட்சுகள் தயாராக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அடுத்த நாள், லண்டனில் நடக்கும் புது நாடகத்தைப் பார்க்க அவன் அங்கு இருந்தாக வேண்டும். அன்று இரவுக்குள் வாட்சுகள் வரவில்லை என்றால், இனி அவன் வேறு ஆளைப்பார்த்துக் கொள்வதாகக் கூறி விட்டான்.

நாள் முழுவதும் எப்படியோ கடத்தினான். அடிக்கடி வாட்சுகள் வந்து விட்டனவா என்று ஃபோன் செய்து விசாரித்தான். ஒரு வழியாக மாலை 6 மணிக்கு வாட்சுகள் வந்தன. உடனே செல்பி தன் காரை எடுத்துக்கொண்டு கடிகாரக்கடையின் காரேஜுக்குச் சென்றான்.

வாட்சுகளை எப்படி பாக் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தான். ஆடியட் பணிவுடன், 'தன் சகோதரர்கள் ஒவ்வொரு வாட்சையும், அது வேலை செய்கிறதா என்று சோதனை செய்த பின்னர் தான் பாக் செய்வார்கள்' என்று உறுதியளித்தான். 'மறு நாள் காலை 4 மணிக்குள் வாட்சுகள் எல்லாம் பாக் செய்யப்பட்டு, கார் தயாராக இருக்கும்' என்று கூறினான். 'செல்பி, காலையில் காலய் வரை காரை ஓட்டிச்சென்று அங்கிருந்து முதல் படகைப்பிடித்து லண்டன் போய்விட முடியும்' என்றான். 'மத்தியானத்துக்குள் லண்டனை அடைந்து அன்று மாலை நாடகத்தைப்பார்க்க முடியும்' என்றான்.

காலை 4 மணி சுமாருக்கு, சந்தோஷமாகப்பாடிக்கொண்டே செல்பி காரை ஓட்டிக்கொண்டிருந்தான். ஒரே குளிராக இருந்தது. ஃப்ரெஞ்ச் கஸ்டம்ஸில், பிரச்சினையில்லாமல் வெளிவந்துவிட்டான். பிறகு ஆட்களை விட்டுக் காரைப்படகில் ஏற்றியபின், கீழே காப்பி குடிக்கச்சென்றான்.

டோவரில், அவனுடைய பைகளை எல்லாம் கஸ்டம்ஸில் சோதனையிட்டார்கள். அவனுடைய காரைச் சோதனையிட்டவர் அவனுக்குத் தெரிந்தவர் தான். எப்போதும் கேட்கும் கேள்விகளுக்குப் புன்னகையுடன் பதில் சொல்லி விட்டு, அடுத்த நாடகத்துக்கு டிக்கெட் அனுப்புவதாக வாக்களித்து விட்டு, காருக்குள்ளே நுழைந்து, வண்டியைக் கிளப்பத் தயாரானான்.

திடீரென்று தொடர்ந்து பலமான விசில் சத்தம். பின்னர் ஒரே அமைதி. எல்லாமே நின்று விட்டன.

அன்று போர் நிறுத்த நினைவு நாள்! (Armistice Day) முதலாம் உலகப்போர் அப்போது தான் முடிந்திருந்ததாகையால், போரில் உயிரிழந்தவர்கள் நினைவாய், இரண்டு நிமிடம் மௌனம் காக்க வேண்டும். உண்மையிலேயே பயங்கர அமைதி. பறவைகள் கூட அமைதியாகி விட்டன. க்ரிஸ் செல்பியும் அந்த கஸ்டம்ஸ் அதிகாரியும் தலையைக் குனிந்து கொண்டு அமைதியாக நின்றார்கள். கரையின் மேல் கடலலைகள் மோதும் ஓசையைத்தவிர, ஏறெதுவும் கேட்கவில்லை.

இல்லை, இல்லை! அப்படிச்சொல்ல முடியாது. வேரொரு ஒலியும் கேட்டது. காருக்குள்ளிருந்து 5000 வாட்சுகளின் 'டிக்' 'டிக்' ஒலி, வேறு எவருக்கும் கேட்கவில்லை என்றாலும், அந்த கஸ்டம்ஸ் அதிகாரிக்குத் தெளிவாகக் கேட்டது. அந்த ஆடியட் சகோதரர்கள் செல்பியைத் திருப்திப் படுத்துவதற்காக, ஒவ்வொரு வாட்சையும், சோதித்து, சாவி கொடுத்து, ஓடச் செய்திருந்தார்கள். "

இப்போது, அந்த வயதான மனிதன் கதையை முடித்து, சாப்பிட்டும் முடித்தான்.

எனக்கு இன்னும் ஒன்று தெரிய வேண்டியிருந்தது.

"நீங்கள் தான் க்ரிஸ் செல்பி என்று சொல்லுங்கள். அந்த வாட்சை நான் இரண்டு பவுண்டுக்கு வாங்கிக் கொள்கிறேன்."

அந்த வயதான மனிதன் 'இல்லை' என்று தலையை ஆட்டினான். "நான் தான் அந்த கஸ்டம்ஸ் அதிகாரி. அன்றைக்கு, தன் புன்னகையினாலும், பேச்சுத்திறமையாலும், நான் அந்த கடிகாரங்களின் ஓசையைக்கேட்கவே இல்லை' என்று நம்பச்செய்தான், செல்பி. நானும், அப்போது அவனைச் சும்மா விட்டது மட்டும் அல்லாமல், வருடம் இரண்டு முறை அவன் வாட்சுகளைக் கடத்துவதற்கும் உதவி செய்கிறேன் என்றும் உறுதியளித்தேன்.

இரண்டு வருடங்கள் கழித்து, நாங்கள் இருவருமே பிடிபட்டோம்".


The Man Who Hated Time - Victor Canning




கர்நாடக இசையில் மேற்கத்திய இசையின் தாக்கம்


 

‘தில்லானா மோகனாம்பாள்’ படம் பார்த்தவர்களுக்கு  இந்தக்காட்சி நினைவிருக்கும். மேல் நாட்டவர் சிலர் சிக்கல் ஷண்முக சுந்தரத்திடம் அவரால் நாகஸ்வரத்தில், மேல் நாட்டு இசையை வாசிக்க முடியுமா என்று கேட்கும் போது அவர் 'கா மக ரிகபா ரிகஸா' என்று துவங்கும் ஒரு துள்ளல் இசையை வாசித்து மேல் நாட்டவரிடம் அப்ளாஸ் வாங்குவார்.

அவர் அப்போது வாசித்தது , 'மதுரை மணி நோட்' என்று புகழ் பெற்ற ஒரு ஸ்வரக்கோவை. இதை இயற்றியவர் மதுரை மணி ஐயருடைய குருவாகிய ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர். அவரிடம் இதைக் கற்ற மதுரை மணி ஐயர் தன் கச்சேரிகளில் இதை அடிக்கடி பாடியதில், இதற்கு 'மதுரை மணி நோட்' என்ற பெயரே வந்து விட்டது.

முத்தையா பாகவதர் இந்த மாதிரி சாஹித்யமே இல்லாத ஸ்வரக்கோர்வையை ஏன் உருவாக்கினார்?

பாகவதர் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற வாக்கேயக்காரர். அதாவது தானே பாடல்கள் இயற்றி, அவற்றைப் பாடவும் செய்வார். அது மட்டுமன்றி, ஹரிகதை சொல்வதிலும் தேர்ந்தவர். தன் கதைகளுக்கு இடையில் பாடவேண்டிய பாட்டுக்களை அவரே இயற்றி, இசையமைத்துப் பாடுவார்.

ஒரு சமயம், ராமாயண ஹரி கதையின் நடுவே, ராம சீதா கல்யாண ஊர்வலத்தை விரிவாக வர்ணித்த போது, அங்கே பாண்ட் வாத்தியம் கூட வாசித்தார்கள் என்று சொல்லி, இந்த ஸ்வரக்கோர்வையைப் பாடினாராம். அது மக்களை மிகவும் கவர்ந்ததாம்.

உண்மையில், மேற்கத்திய இசை அவர் காலத்துக்கு முன்பே, கர் நாடக சங்கீதத்திற்குள் நுழைந்து விட்டது. 18ம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட அரசர் இரண்டாம் துளஜா மற்றும் அவருடைய மகன் ராஜா சரபோஜி ஆகியோர், மேற்கத்திய இசையின் ரசிகர்களாக இருந்து அதை வெகுவாக ஆதரித்திருக்கிறார்கள். ராஜா சரபோஜி அவ்வப்போது தன் படையுடன் திருவையாற்றுக்குப் போவாராம். அப்போது பாண்ட் வாசிப்போரும் அவருடன் செல்வார்கள். இவர்கள் வாசித்ததை சிறு வயதில் தியாகராஜ ஸ்வாமிகள் கேட்டிருக்கக்கூடும். அவருடைய கீர்த்தனங்களில் ஒரு சில மேற்கத்திய இசையை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளன.

இவற்றில் பிரபலமானவை, சங்கராபரணத்தில் அமைந்துள்ள 

'வர லீல கான லோலா' மற்றும் சுபோஷிணி ( Suposhini)  ராகத்தில் அமைந்துள்ள ' ரமிஞ்சுவாரெவருரா ரகோத்தமா நின்னுவினா' ஆகிய க்ருதிகள். 'வர லீல கான லோலா'  வார்த்தைகளின் சொல்லழகுக்கும், பொருளழகுக்கும் பெயர் பெற்றது. சுபோஷிணியில் அமைந்துள்ள க்ருதிின் மெட்டு, படை வீரர்களின் அணிவகுப்பை நினைவூட்டக்கூடியத

   முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நோட்டு ஸ்வரங்கள் மேற்கத்திய இசையின் தாக்கத்துக்கு நல்ல சாட்சியாக விளங்குகின்றன. அவருக்கு எப்படி மேற்கத்திய இசை அறிமுகம் ஆயிற்று?

இதற்கான  ஆதாரபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், நம்பக்கூடிய வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த துபாஷ் முத்துக்ருஷ்ண முதலியார் சென்னைக்கு அருகில் உள்ள மணலியில் வசித்து வந்தார். அவருடைய வேண்டுகோளின் பேரில், முத்துஸ்வாமி தீக்ஷிதருடைய தந்தையார், மணலிக்குத் தன் குடும்பத்துடன் வந்துவிட்டார். துபாஷின் மகன் சின்னஸ்வாி என்கிற வெங்கட க்ருஷ்ண முதலியாரும் தன் தந்தையாரைப் போலவே இசையை ஆதரித்து வந்தார்.

அப்போது தான் கிழக்கிந்தியக்கம்பெனி மெது மெதுவாக இந்தியாவில் காலூற ஆரம்பித்திருந்தது. இங்கிருந்த சட்ட ஒழுங்கு பராமரிப்பு சரியாக இல்லை என்று எண்ணிய ஆங்கிலேய அதிகாரிகள், வேல்ஸ், ஸ்காட்லாண்ட் மற்றும் அயர்லாந்திலிருந்து படையை வரவழைத்தனர். அப்படைகளுடனே, படைவீரர்களுக்கு, வழிகாட்டவும், மன மகிழ்ச்சி அளிக்கவும் பாண்ட் வாசிப்பவரின் குழுவும் வந்தது. சின்னஸ்வாமிக்கு, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குப் போகும் வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைத்தன. அவர் முத்துஸ்வாமியையும் தன்னுடனே அழைத்துக்கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறாக, இந்த இரண்டு இளைஞர்களுக்கும், பிரிட்டிஷாருடைய பாண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் வாசித்த மேற்கத்திய இசையைக்கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.  

 

மிகுந்த இனிமையும், லயமும் நிறைந்த இந்த அயல் நாட்டு இசை அவர்களை மிகவும் கவர்ந்தது. முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கோ அதன் தாக்கம் மகத்தானதாக அமைந்தது. முத்துஸ்வாமி இந்த பிரிட்டிஷ் நாட்டுப்புற இசையின் மெட்டுக்களில் பாடக்கூடிய  ஏறக்குறைய 40 சம்ஸ்க்ருத  ஸ்லோகங்களை இயற்றியுள்ளார்.  இவைகள் தீக்ஷிதரின் நோட்டு ஸ்வர சாஹித்யங்கள் அல்லது ‘European Airs’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் எல்லாம் தீக்ஷிதரின் முத்திரையான 'குருகுஹ' என்ற வார்த்தையும் காணப்படுகிறது

' சக்தி ஸஹித கணபதிம்', 'ஷ்யாமளே மீனாக்ஷி', ' ராம ஜனார்த்தன', 'கமலாஸன வந்தித, ' ஜகதீஷ குருகுஹ', ' பாஹிமாம் ஜானகீவல்லப', ' ராமசந்த்ரம் ராஜீவாக்ஷம்', 'வந்தே மீனாக்ஷி' ஆகியவை மிகவும் பிரபலமானவை.

இவருடனே இருந்த இவருடைய சகோதரர் பாலுஸ்வாமி தீக்ஷிதர் மேற்கத்திய வயலின் இசையால் கவரப்பட்டு வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார். அது மட்டுமன்று. கர்நாடக இசையில், வயலின் இசையை நுழைக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்தார். ின்னர், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் சீடரும், தஞ்சை நால்வர் என்று பெயர் பெற்ற சங்கீத மேதைகளில் ஒருவருமான வடிவேலு அவர்கள், வயலின் இசையில் மிகச்சிறந்த மேதைமை பெற்றது மட்டுமன்றி, கர்நாடக இசை மேடைகளில், வயலின் இசையை இடம் பெறச்செய்யப் பெரிதும் முயன்றார்.

அவருடைய முயற்சி எவ்வளவு பெரிய வெற்றி என்பதை இன்றைய கர்நாடக சங்கீதக்கச்சேரி மேடைகளில் பார்க்கலாம் . வயலின் துணையாக இல்லாத வாய்ப்பாட்டுக்கச்சேரியே இன்று இல்லை எனலாம்.

 

Muthaiah Bhagavathar

Thyagaraja Swamy

Muthuswamy Dikshithar


References:

(<https://indianraga.wordpress.com/2007/10/25/british-raj-and-indian-classical-music/>)

<http://maddy06.blogspot.in/2010/09/nottuswara-muthuswamy-dikshitars.html>