Friday 12 February 2021

நசிகேதன் NACHIKETHA

 


ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை குறிப்பிட்டார், “நசிகேதனைப்போன்ற திடமான நம்பிக்கையுள்ள ஒரு பத்துப் பன்னிரண்டு சிறுவர்கள் எனக்குக் கிடைத்தால், இந்தத் தேசத்தின் எண்ண ஓட்டத்தையும் செயல்பாடுகளையும் என்னால் ஒரு புதிய பாதையில் திருப்ப முடியும்.”

யார் அந்த நசிகேதன்?

மேலே படியுங்கள்!

ஓரு முறை, வாஜஸ்ரவா என்ற ஒரு ரிஷி ஒரு பெரிய வேள்வியை நடத்தி முடித்தபின் தானம் கொடுக்கத் துவங்கினார். அவர், தானம் கொடுத்தவை , வயதான, பால் கறவை நின்று போன பசுக்கள். அவற்றால் ஒரு பயனும் இல்லை. தானம் பெற்றவர்களுக்கோ, பெரிய ஏமாற்றம்.  ஆனால், வாஜஸ்ரவா பெரிய ரிஷி என்பதால், ஒன்றும் பேசாமல் தானத்தைப் பெற்றுச்சென்றார்கள்.

இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான் ரிஷியின் மகனாகிய நசிகேதன். வயதில் மிகச்சிறியவன்; ஆனாலும், கூர்மையான அறிவுள்ளவன்.

அவன் தந்தையிடம் சென்று, ‘தந்தையே! இப்படி, வயதான பசுக்களை நீங்கள் தானம் செய்கிறீர்களே! அது தவறில்லையா?” என்று கேட்டான்.

இதனால் கோபமுற்ற தந்தை, “ உனக்கு மிகவும் தெரியுமா, எப்படிப்பட்ட பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்று?” என்று கேட்டார்.

நசிகேதன் பணிவுடன் சொன்னான், “தந்தையே! நமக்கு மிகவும் பிடித்தவைகளையும், உபயோகமானவற்றையுமே தானம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்” என்றான்.

அதோடு நிற்கவில்லை. “உங்களுக்கு என்னைத்தானே மிகவும் பிடிக்கும். என்னை யாருக்கு தானம் செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டான்.

தந்தை அதைப்பொருட்படுத்தவில்லை. மீண்டும், மீண்டும் அதே கேள்வியை நசிகேதன் கேட்ட போது, ஆத்திரமடைந்த அவர், “உன்னை யமனுக்குத் தானமாகத் தந்தேன்” என்றார்.

ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், உடனே சமாளித்துக்கொண்ட நசிகேதன், “மிக்க மகிழ்ச்சி, தந்தையே! நான் இப்போதே யமலோகம் புறப்படுகிறேன்” என்றான்.

அப்போது தான் தந்தைக்குத் தன் தவறு புரிந்தது. மகனிடம்,  “தெரியாமல் சொல்லிவிட்டேன். நீ யமபுரத்திற்குப்போக வேண்டியதில்லை” என்றார். ஆனால், நசிகேதன் மசியவில்லை.

“தந்தையே! கொடுத்த வாக்கை மீறுவது பாவம்.  நான் போகிறேன்” என்று கூறித் தன்னந்தனியாக யமபுரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

பசி, தாகம், எதையும் பொருட்படுத்தாமல்  நடந்து சென்று யமபுரத்தை அடைந்தான். அங்கிருந்த காவலாளிகளிடம் தான் யார் என்பதையும் எதற்கு வந்திருக்கிறான் என்பதையும் தெரிவித்தான்.

ஆச்சரியப்பட்ட அவர்கள் சொன்னார்கள், “ அப்படியா! யமதர்மராஜா ஊரில் இல்லை. மூன்று நாட்கள் கழித்து வா!” என்று.

நசிகேதன், “அதனால் பரவாயில்லை. நான் இங்கேயே காத்திருக்கிறேன்” என்று கூறி, அங்கேயே இருந்தான்.

அவனுக்கு உணவு, நீர் முதலியனவற்றைக் காவலாளிகள் கொண்டு வந்தார்கள். ஆனால், “யமதர்மராஜாவைப் பார்க்காமல் எதையும் உண்ண மாட்டேன்” என்று சொல்லிவிட்டான் நசிகேதன்.

மூன்று நாட்கள் கழித்து யமதர்மராஜா வந்தார். ஒரு சிறுவன் தன் வாயிலில் அமர்ந்திருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டார். அவன் மூன்று நாட்களாக உணவும் நீரும் இன்றி, அவருக்காகக் காத்திருப்பதை அறிந்த அவர், மிகவும் வருந்தினார். பின்னர், “குழந்தாய்! உன் திடசித்தத்தை மெச்சுகிறேன். நீ உன் நாட்டிற்கே திரும்பிப்போ. உன்னை மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக, உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். எது வேண்டுமோ, கேள்!” என்றார்.

இதனால் மிகவும் மகிழ்ந்த நசிகேதன், “என் தந்தையார் என் மீது கோபமாக இருக்கிறார். அவர் முன் போலவே என் மீது அன்பு செலுத்த வேண்டும்” என்றான்.

“அப்படியே ஆகட்டும். உனது இரண்டாவது வரமாக என்ன வேண்டும்?” என்றார் யமதர்மராஜா.

“சொர்க்கத்தை ஒருவன் அடைவதற்கான வழிமுறைகள் என்ன என்று எனக்குத்தெரிவிக்க வேண்டும்” என்றான்.

இதைக்கேட்ட யமதர்மராஜா அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் தான் கொடுத்த வாக்கை மீற முடியாமல், அவன் கேட்டதையெல்லாம் விளக்கிக்கூறினார். அவன் மிகவும் கவனத்துடன் அவர் சொன்னதைக்கேட்டு நன்றாகப்புரிந்து கொண்டதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.

“குழந்தாய்! உனது மூன்றாவது வரத்தைக்கேள்!” என்றார்.

சற்றே யோசித்த நசிகேதன்,”ப்ரபோ! மரணம் என்றால் என்ன? மரணத்திற்குப்பின் ஆத்மாவுக்கு என்ன நேரிடுகிறது? எனக்கு இவற்றை விளக்க வேண்டும்” என்றான்.

இதைக்கேட்ட யமதர்மராஜாவின் திகைப்புக்கு அளவே இல்லை. ஒரு சிறுவன் கேட்கும் கேள்வியா இது?

 “குழந்தாய்! வேறு ஏதாவது கேள்! நாடு வேண்டுமா? செல்வம் வேண்டுமா? அதிகாரம் வேண்டுமா? எதுவாயினும் கேள். தருகிறேன். உன் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது,” என்றார்.

“அது இல்லையென்றால், எனக்கு வேறெதுவும் வேண்டாம். நீங்கள் தான் வரம் கேட்கச்சொன்னீர்கள். பரவாயில்லை. நான் போகிறேன்” என்றான்.

யமதர்மராஜாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல், இது வரை யாருக்கும் தெரியாத,  மரணத்தைப்பற்றிய ரகசியங்களை அவனுக்கு விளக்கினார்.

மிகவும் நன்றியுடன் அவரை வணங்கி விடைபெற்றுத் தன் நாட்டை அடைந்த நசிகேதன், தன் தந்தையின் அன்பை மீண்டும் பெற்று, கல்வி கேள்விகளில் சிறந்து, மிகுந்த புகழுடன் வாழ்ந்தான்.

மூலம்: ‘கடோபனிஷதம்’ (katthopanishad)

ஹிந்தியில் உள்ள கதையைத்தழுவித் தமிழில், ரமாதேவி

( Originally published in the Bharatiya Vidya Bhavan's bulletin - February -2020)

உத்தாலக ஆருணி


‘உத்தாலக ஆருணி’ என்னும் மகரிஷி, கி. மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த தத்துவஞானி ஆவார். இவருடைய கருத்துக்கள் ப்ருஹதாரண்ய உபநிஷதத்திலும், சாமவேதத்தின் ஒரு பகுதியாகிய சாந்தோக்ய உபநிஷதத்திலும் காணப்படுகின்றன. இவர் தான் முதன் முதலில் இந்தப் பிரபஞ்சம் வெப்பம் மற்றும் ஒளி, நீர் உணவு ஆகிய மூலக்கூறுகளால் ஆனது என்று கண்டறிந்தார். ‘மிகச்சிறிய துகள்கள் ஒன்றிணைந்து பொருட்களை உருவாக்குகின்றன’ என்னும் இவருடைய கருத்துக்கள் தான் இந்தியாவின் அணுவியலுக்கு வித்திட்டன. பாஞ்சால தேசத்தில் தோன்றியதால், இவர் ‘பாஞ்சாலத்து ஆருணி’ என்றும் சொல்லப்படுகிறார்.

 

இவருடைய ஆசிரமத்தில் கற்ற மாணவர்கள் பலர் மிகச்சிறந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்களில், யாக்ஞவல்க்யர் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். ஆருணியின் மகன் தான் ஸ்வேதகேது. தன் மகனுடன் ஆருணி நடத்திய உரையாடலில் தான் முதன் முதலில் ‘தத்வமஸி’ என்ற மகாவாக்கியத்தை மகரிஷி ஆருணி உபயோகித்தார்.

இவர் நிறைய வேள்விகளை சிறப்புற நடத்தியமையால், 'வாஜஸ்ரவா' என்று புகழப்பட்டார். இவருக்கு நசிகேதன் என்ற மகனும் உண்டு. (சென்ற இதழில் நசிகேதனைப்பற்றிப் படித்திருப்பீர்கள்).

 

 

இவரைப்பற்றிய குறிப்பு மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில் காணப்படுகிறது. ஒரு மாணவன் எவ்வளவு குருபக்தியுடன் இருக்க வேண்டும் என்பதற்கும், குருவின் வார்த்தையே வேதவாக்காகக் கொள்ள வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக ஆருணியின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

 

அந்தக் காலத்தில் குருகுல வாசம் செய்து தான் அனைவரும் கல்வி பெற வேண்டும். பசுமையான சூழலில், எந்த விதமான குறுக்கீடும் இன்றி, மாணவர்கள் அமைதியான மன நிலையுடன் கல்வி கற்றனர். தன் மாணவர்களைத் தங்கள் மகன்களைப் போல் தான் ஆசிரியர்கள் நடத்தி வந்தனர்.

சிறுவன் ஆருணி தௌம்யர் என்ற ரிஷியின் மாணவனாக குருகுல வாசம் செய்து வந்தான். அது மழைக்காலம். இடைவிடாது பெய்த மழையால் தன் வயல் வரப்புகள் பாதிப்படையாமல் இருக்கின்றனவா என்று பார்த்து வருமாறு ஆருணியை குரு தௌம்யர் அனுப்பினார். வயலுக்குச் சென்று பார்த்த போது, அதிக விசையுடன் பாய்ந்த நீரால், வயலின் வரப்புகளில் விரிசல் ஏற்பட்டு, வெளியில் இருந்து அதிவேகமாக  நீர் வயலினுள்ளே வந்து கொண்டிருந்ததை ஆருணி கண்டான். இப்படியே விட்டால், நீரில் பயிர்கள் மூழ்கி அழிந்து விடும் என்பதை உணர்ந்து கொண்டான். உடனே அந்த விரிசலை அடைக்க முயன்றான்.

எவ்வளவோ முயன்றும், ஆருணியால் அந்த விரிசலை அடைக்க முடியவில்லை. தனது குரு நாதரின் பயிர்களை எவ்வாறேனும் காப்பாற்றி விடவேண்டும் என்ற உறுதியில், வேறு வழியின்றி அந்த விரிசலின் மேலேயே படுத்துக்கொண்டு, தன் உடலாலேயே நீரை உள்ளே வராமல் தடுத்தான், ஆருணி. இரவு முழுவதும் அப்படியே படுத்திருந்தான்.

அதிகாலையில், ஆருணி ஆசிரமத்துக்குத் திரும்பவில்லை என்பதைக் கவனித்த தௌம்யரிஷி, தன் பிற சீடர்களுடன் ஆருணியைத்தேடிப் புறப்பட்டார். வயல் இருந்த இடத்தில் ஆருணியைக் காணவில்லை. அவர் உரக்க, “மகனே ஆருணி! நீ எங்கேயிருந்தாலும், உடனே இங்கே வா!” என்று குரல் கொடுத்தார்.

வெகுதொலைவில் இருந்து ஆருணி பதில் குரல் கொடுத்தான். “குருவே! நம் நிலத்தின் வரப்பில் ஏற்பட்ட விரிசலால் நீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது. அதை நிறுத்த முடியாததால் நான் இங்கே படுத்துக்கொண்டு, நீரை உள்ளே வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எழுந்து வந்தேன் என்றால், நீர் பாய்ந்து வயலில் உள்ள பயிர்கள் வீணாகி விடும். ஆகவே என்னால் அங்கு வர முடியாது. என்னை மன்னியுங்கள்.”

அந்தக் குரலைக்கேட்ட தௌம்யர் ஆருணி இருந்த இடத்துக்கு ஓடினார். அங்கே, இரவு முழுவதும், நடுக்கும் குளிரில், இரவின் தனிமையில், தனது வயலைக் காத்துக்கிடந்த தன் அன்புக்குரிய மாணவனைப் பார்த்தார். அவர் உள்ளம் நெகிழ்ந்தது.

“மகனே! எழுந்திரு! இனி நான் பார்த்துக் கொள்கிறேன். இன்றிலிருந்து நீ ‘உத்தாலக ஆருணி’ என்று அழைக்கப்படுவாய் (‘உத்தாலகன்’ என்றால் ‘எழுப்பப்பட்டவன்’ என்று பொருள்.) உன்னுடைய திடமான குருபக்தியால் என் மனதை நெகிழ்த்தி விட்டாய். அனைத்து வேதங்களும், சாஸ்திரங்களும், உன் வாக்கில் ஒளிரும். உனக்கு அளவற்ற செல்வமும், மரியாதையும், பெரும்புகழும் இவ்வுலகில் கிடைக்கும்” என்று ஆசீர்வதித்து, அன்புடன் ஆருணியைத் தழுவிக்கொண்டார்.

குருவின் வார்த்தை பொய்க்குமா என்ன? ஆருணி பிற்காலத்தில் பல நல்ல மாணாக்கர்களை உருவாக்கி, மிகவும் புகழுடன் வாழ்ந்தார். 

( Originally published in the Bharatiya Vidya Bhavan's bulletin - March -2020)

சத்யகாம ஜாபாலா (Sathya Kaama Jaabaalaa)

 ஒரு ஊரில் ஜாபாலா என்றொரு ஏழைப்பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு மகன். எப்போதும் உண்மையே பேசுவது என்ற கொள்கையில் திடமாக இருந்த அவள் தன் மகனுக்கு 'சத்ய காமன்' என்று பெயரிட்டு, அன்புடன் வளர்த்து வந்தாள். 'சத்ய காமன்' என்றால் 'உண்மையின் மேல் பற்றுக் கொண்டவன்' என்று பொருள்.

 

அவனுக்கு எட்டு வயதானபோது அவன் தன் தாயிடம் வந்து, 'அம்மா! எனக்கு பிரம்ம வித்யை கற்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நான் ஒரு குருவைத் தேடிச் செல்கிறேன்' என்று கூறினான்.

 

'அப்படியா, குழந்தாய்! குரு எதைக்கேட்டாலும் உண்மையையே சொல்' என்று கூறி, ஆசீர்வதித்து அனுப்பினாள், ஜாபாலா.

 

சத்யகாமன் பல நாட்கள் நடந்து 'ஹரித்ருமத கௌதமர்' (Haridrumata Gautama) என்ற பெயர் கொண்ட ரிஷியிடம் வந்து சேர்ந்தான். அவரை வணங்கி, 'குருவே! நான் பிரம்ம வித்யை கற்க வேண்டும். என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு அருள் புரிய வேண்டும்' என்றான்.

 

கௌதமர் அவனிடம், 'மிக்க மகிழ்ச்சி, குழந்தாய்! உன் கோத்திரம் எது? உன் தந்தையார் பெயர் என்ன?' என்று கேட்டார்.

 

சத்யகாமன் குருவை வணங்கி, 'குருவே! என் தாயாரின் பெயர் ஜாபாலா. அவரிடம் என் தந்தையாரைப் பற்றிக் கேட்ட பொழுது, 'நான் பல வீடுகளில் வேலை செய்திருக்கிறேன். நீ உருவானதற்குக் காரணம் யார் என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியாது' என்று சொன்னார்' என்றான்.

 

இந்தப் பதிலால் சற்று துணுக்குற்றாலும், உடனே சமாளித்துக் கொண்டு கௌதமர் கூறினார், 'இப்படித் தயங்காமல் உண்மை பேசும் உனக்கு, நிச்சயம் ப்ரம்ம வித்யை கற்கும் தகுதி இருக்கிறது. நான் உன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். இன்றிலிருந்து உன் பெயர் 'சத்யகாம ஜாபாலா!' என்று கூறி ஆசிரமத்துக்குள்ளே அழைத்துச்சென்றார்.

 

அவனுக்கு முதலில் தியானம் செய்யும் முறையைக் கற்றுக்கொடுத்தார். சத்யகாமனும்  ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, மிகுந்த ஈடுபாட்டுடன் தியானம் பயில ஆரம்பித்தான்.

 

சில நாட்கள் கழித்து, குரு அவனை அழைத்து, பலவீனமாக இருந்த 400 பசு மாடுகளைக் கொடுத்து, இவற்றை ஓட்டிக்கொண்டு காட்டுக்குப்போ. அங்கேயே அவைகளுக்குப் புல்லும், உனக்குக் கனி கிழங்குகளும் கிடைக்கும். இவை நாளடைவில் எண்ணிக்கையில் பெருகும். இவற்றின் எண்ணிக்கை 1000 ஆனவுடன் திரும்பி வா' என்றார்.

 

மறு பேச்சின்றி, சத்யகாமன் மாடுகளை ஓட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றான். 

 

முதலில் காட்டில் தனியே இருப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. போகப்போக, அதுவே பழகி விட்டது. நிம்மதியான வாழ்க்கை. நல்ல பசும்புல்லை உண்டு மாடுகள் வலிமையடைந்தன. அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போயிற்று. சத்யகாமன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. எப்போதும் தியானித்துக்கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும், காலம் கழித்தான்.

 

பல மாதங்கள் சென்றன.

 

ஒரு நாள் ஒரு காளை அவனருகே வந்து, 'சத்யகாமா! எங்கள் எண்ணிக்கை 1000 ஆக ஆகி விட்டது. எங்களை உனது குருவின் ஆசிரமத்துக்கு அழைத்துப்போ. அதற்குள் நான் ப்ரம்ம வித்யையில் நாலில் ஒரு பகுதியை உனக்கு உபதேசிக்கிறேன்' என்று கூறி, 'ப்ரம்மம் தான் கிழக்கிலிருந்து மேற்கிலும், வடக்கிலிருந்து தெற்கிலுமாக எங்கும் நிறைந்து ஒளிர்கிறது.  இதை நீ அறிந்து கொள். இன்னொரு பகுதியை அக்னி உனக்கு உபதேசிப்பார்' என்றது.

 

காளையை வணங்கி உபதேசத்தை ஏற்றுக்கொண்ட சத்யகாமன், மாடுகளை ஆசிரமத்தை நோக்கி ஓட்டிக்கொண்டு சென்றான். மாலை ஆனவுடன் ஒரு இடத்தில் தங்கி, மாடுகளுக்கிடையே அமர்ந்து, குளிருக்காகத் தீயை மூட்டினான்.

 

உடனே, அக்னி அவன் முன் வந்தார், 'சத்யகாமா! நானும் ப்ரம்ம வித்யையின் இன்னொரு பகுதியை உனக்கு உபதேசிக்கிறேன். இந்தப்பூமியும், அதன் சுற்றுப்புறமும், இந்த வானமும், கடலும், எல்லாமே ப்ரம்மம் தான். ப்ரம்மம் என்பது எல்லையும் முடிவும் அற்றது. அடுத்த பகுதியை ஒரு அன்னப்பறவை உனக்கு உபதேசிக்கும்' என்று சொல்லி மறைந்தார்.

 

மறு நாள், மீண்டும் மாடுகளுடன் ஆசிரமத்தை நோக்கி நடந்த சத்யகாமன் மாலை ஆனவுடன் ஓரிடத்தில் தங்கி, குளிருக்காகத் தீ மூட்டினான்.

 

அப்போது ஒரு அழகான அன்னப்பறவை பறந்து வந்து அவன் முன் வந்து அமர்ந்தது.

 

'சத்யகாமா! ப்ரம்மம் தான் சூரியன். ப்ரம்மம் தான் சந்திரன், ப்ரம்மம் தான் வாழ்வின் ஒளி. இதை நீ உணர்ந்து கொள். மீதமுள்ள பகுதியை ஒரு பறவை உனக்கு உபதேசிக்கும்' என்று கூறி அது பறந்து விட்டது.

 

அதே போல், மறு நாள் மாலை, தீ மூட்டியவுடன் ஒரு ஊதா நிறப்பறவை அவன் முன்னே வந்து அமர்ந்தது,

'சத்யகாமா! ப்ரம்மவித்யையின் முடிவுப்பகுதியை நான் உபதேசிக்கிறேன். ப்ரம்மம் தான் மூச்சு. ப்ரம்மம் தான் கண். ப்ரம்மம் தான் காது. ப்ரம்மம் தான் மனம். ப்ரம்மம் இவற்றில் தான் நிலை கொள்கிறது.' எல்லாவற்றிலும் நிலத்திருப்பது ப்ரம்மம் தான்.' என்று சொல்லிப்பறந்து சென்று விட்டது.

 சத்யகாமன் மாடுகளை ஓட்டிக்கொண்டு குருவின் ஆசிரமத்தை அடைந்தான்.

 அவனை வரவேற்ற குரு சொன்னார், 'குழந்தாய்! உன் அமைதியானமுகத்தையும், உன் ஆனந்தமான புன்னகையையும், உன் கவலையில்லாத மன நிலையையும், உனது  தீர்க்கமான பார்வையையும் பார்த்தால், நீ ப்ரம்ம வித்யையைக் கற்றுக்கொண்டு விட்டாய் என்பது தெளிவாகத்தெரிகிறது.'

 

அவரை வணங்கிய சத்யகாமன், 'குருவே! தங்கள் மூலமாகவும் நான் ப்ரம்மத்தை அறிய விரும்புகிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று வேண்டினான்.

 

'ஆகட்டும், குழந்தாய்!' என்று கூறி, குரு ப்ரம்மத்தைப் பற்றி, முழுவதுமாக உபதேசித்தார். 'தன்னை முழுமையாக அறிபவனே ப்ரம்மத்தை அறிந்தவன். நீ எல்லையற்றவன், ஒளி மயமானவன், நீ எங்குமிருப்பவன்' என்பதை உணர்ந்து கொள்வது தான், மிகவும் உன்னதமான ப்ரம்மவித்யை' அது உனக்குக்கிட்டி விட்டது.' என்று கூறி சத்யகாமனை ஆசீர்வதித்தார்.

 

பின்னாட்களில், சத்யகாம ஜாபாலா, மிகவும் புகழ் பெற்ற ரிஷியாக விளங்கிப் பலருக்கும், ஞானம் கிடைக்க உதவினார்.

 

(சத்ய காமா ஜாபாலாவின் வரலாறு, சாந்தோக்ய (Chhaandhogya)உபநிஷதத்தில் காணப்படுகிறது. இந்த வரலாறு, உண்மையில் தீவிர நாட்டம் இருந்தால், பரம்பொருளைக் கூட உணரலாம் என்பதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு.)


ஸ்வேதகேது (Shvetaketu)

 


 

 (சாந்தோக்யஉபநிஷதத்தில் (Chaandhogya Upanishad) காணப்படும் 'தத்வமஸி' - ('Tat-Tvam-Asi') என்னும் மகாவாக்கியம் தோன்றியகதை இது. அந்தக்காலத்தில், கல்வி என்பது பரம்பொருளைப்பற்றிய அறிவே என்று கருதப்பட்டது. அது மட்டும் அல்ல;  பிறகலைகள் எத்தனை கற்றாலும், அந்த ஒரு அறிவு இல்லையேல், ஒரு பயனும் இல்லை என்ற எண்ணமும் பரவலாகக் காணப்பட்டது. ஆகவேதான், பலவிதமான கலைகளை கற்றுத் தேர்ந்த தன்மகனுக்கு, எளிமையான எடுத்துக்காட்டுக்கள் மூலம் பிரம்மஞானத்தைப் புகட்டும் ஒரு மகத்தான தந்தையின் அன்பையும் ஆற்றலையும் வெளிக்கொணரும் விதமாக இந்தக்கதையில் வரும் உரையாடல் அமைந்துள்ளது.)

 

உத்தாலக ஆருணி (Uddaalaka Aaruni) என்று ஒரு ரிஷி இருந்தார். அவருக்கு ஸ்வேதகேது என்று ஒருமகன். தானே சிறந்த ஆசிரியராக இருந்த போதிலும், தன் மகன் வேறொரு குருவிடம் சென்று குருகுலவாசம் செய்து கல்வி பெறவேண்டும் என்று ரிஷி ஆருணி விரும்பினார். ஒரு நல்ல குருவிடம் அவனை ஒப்படைத்தார். ஸ்வேதகேதுவும் ஆர்வத்துடன் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான்.

12 ஆண்டுகள் கழிந்தபின், குருவின் பாராட்டையும், ஆசியையும் பெற்றுத் தன் வீடு திரும்பினான்.

மகன் திரும்ப வந்ததில் ரிஷி ஆருணிக்கு மிக்க மகிழ்ச்சி தான். கூடவே வருத்தமும். ஏனென்றால்,  அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவன் உள்ளத்தில் தான் நிறையக் கற்று விட்டோம் என்ற செருக்கு இருப்பது அவருக்குப்புரிந்து விட்டது. எனவே, தன் மகனுக்குச் சரியான ஞானத்தைப் புகட்ட வேண்டும் என்று தீர்மானித்து, அவனைத் தன்னிடம் வருமாறு பணித்தார்.

தன்னிடம் வந்து வணங்கி நின்ற மகனிடம் கேட்டார், "மகனே! எதைக் கற்பதனால், கேட்காதவற்றைக் கேட்பதற்கும், பார்க்காதவற்றைப் பார்ப்பதற்கும், அறிய முடியாதவற்றை அறிவதற்கும் முடியுமோ, அந்தக் கல்வியைக்கற்றாயா?"

"அது என்ன தந்தையே?  என் ஆசிரியர் அதை எனக்குக் கற்பிக்கவில்லையே!" என்றான் ஸ்வேதகேது.

" அது தான் ப்ரம்மம். அது தான் எங்கும் இருப்பது. அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார் தந்தை.

"அது எப்படி இருக்கும், தந்தையே?"

"அனைத்துப் பொருட்களின் ஆதாரம் அது தான். பொன்னால் ஆன ஆபரணங்கள், அந்தப் பொன்னில்லாமல் இருக்க முடியாது இல்லையா? மண்பாண்டங்கள் மண் இல்லாமல் இருக்க முடியாது இல்லையா? அது போலத்தான், இவ்வுலகில் உள்ள எதுவுமே ப்ரம்மம் இல்லாமல் இருக்க முடியாது".

"அப்படியானால், அந்த ப்ரம்மத்தின் உருவம் எப்படி இருக்கும், என்று கூறுங்கள், தந்தையே!"

"அது மிகவும் நுண்மையானது."

"அப்படியென்றால்?"

" அது இருப்பது கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அது தான் எங்கும் இருக்கிறது."

"புரியவில்லை, தந்தையே!"

"இரு. உனக்கு விளக்குகிறேன். ஒரு ஆலம்பழத்தைக் கொண்டுவா."

"இதோ, கொண்டுவந்து விட்டேன்,  தந்தையே."

"அதில் இருந்து ஒரு விதையைத் தனியாக எடு."

"மிகச் சிறியதாக இருக்கிறது. ஆனாலும், எடுத்து விட்டேன். இந்தாருங்கள்."

"அதை உடை."

"உடைத்தாயிற்று."

அதற்குள் என்ன இருக்கிறது?

"அதில் ஒன்றுமே இல்லை."

"அப்படியென்றால், இந்த ஆலமரம் எதிலிருந்து வந்தது?"

"இந்த ஆலம் விதையில் இருந்து தான்."

"இவ்வளவு பெரியமரம், அந்த விதையை உடைத்துப் பார்த்தபோது கண்ணுக்குத் தெரிந்ததா?"

" இல்லை, தந்தையே!"

" ஆனாலும், அதற்குள்தான் இத்தனை பெரிய ஆலமரம் உருவாகி, வளர்ந்து, வாழ்வதற்கான கரு இருக்கிறது. புரிகிறதா?"

"ஆம், தந்தையே! இதை நான் உணரும்படி விளக்குங்களேன்."

"சரி. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வா."

"இதோ! எடுத்து வந்துவிட்டேன்."

"அதில் கொஞ்சம் உப்பைப் போட்டு வை. சிறிது நேரம் கழித்துவா."

சிறிது நேரம் கழித்து வந்த ஸ்வேதகேது, "தந்தையே! பாத்திரத்தில் போட்ட உப்பைக் காணவில்லை."

"அப்படியா! நீரில் உப்பு கரைந்து போயிருக்கும். அந்தப் பாத்திரத்தின் மேல் பகுதியில் உள்ள நீரைக் குடி. அதன் சுவை எப்படிஇருக்கிறது?"

"உப்பாக இருக்கிறது."

"சரி. நடுப் பகுதியில் உள்ள நீரைக் குடித்துப்பார்."

" தந்தையே! அதுவும் உப்பாகத்தான் இருக்கிறது."

"அடியில் உள்ள பகுதி?"

"அதுவும் தான் தந்தையே!"

இந்த நீரில் உப்பை நீ பார்க்க முடியவில்லை. ஆனால் சுவைத்தவுடன் அதன் இருப்பை உணர்ந்து கொண்டாய். இதே போல் தான் அந்த ப்ரம்மம் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் காண முடியாது; ஆனால், அதன் இருப்பை உணர முடியும்.  நீயும் அந்த ப்ரம்மமாகவே இருக்கிறாய்! ‘தத் த்வம் அஸி’ ('Tat Tvam Asi')!.

 

(Tat என்றால் 'அது'. Tvam என்றால் 'நீ'. Asi என்றால் 'இருக்கிறாய்'  அது நீயாக இருக்கிறது அல்லது, நீ அதுவாக இருக்கிறாய்). உன்னில் நிறைந்திருப்பது அந்த ப்ரம்மம் தான். அதை அறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், அதை நன்றாக உணரலாம். இப்போது புரிந்ததா? அந்தப் ப்ரம்மத்தை நீ உணர்ந்தால் தான், கேட்க முடியாததைக் கேட்கலாம், பார்க்க முடியாததைப் பார்க்கலாம், அறிய முடியாததை அறியலாம்."

" புரிந்து கொண்டேன்,  தந்தையே! " என்று சொன்ன ஸ்வேதகேதுவின் அகந்தை முற்றுமாக அழிந்துவிட்டிருந்தது.

( Originally published in the Bharatiya Vidya Bhavan's bulletin - April -2020)

Svetaketu

  Shvetaketu 

 

Shvetaketu’s story is also the story of the Mahavakya ––‘Tatvamasi’ ('Tat-Tvam-Asi'). This story, found in the Chaandhogya Upanishad, is in the form of a conversation between a father and son and effectively narrates the process of imparting ‘true’ knowledge to a well-educated young man.  

Shvetaketu was the son of Uddaalaka Aaruni. Though a popular teacher himself, Uddaalaka Aaruni sent his son to be trained by another guru. Shvetaketu was a sharp learner. After twelve years, he returned to his father’s hermitage, having learnt all that was there to learn. Or, at least, he thought so.  


Uddaalaka Aaruni was delighted to have his son back. But, as his son walked towards him, he noticed a swagger in Shvetaketu’s gait. That set him worried. He realized that Shvetaketu had not acquired the knowledge of the Brahman.  

Shvetaketu came near his father and offered his respects. After giving his blessings, Uddaalaka Aaruni asked him, “Son, have you received that education that helps you see what cannot be seen, hear what cannot be heard and know what cannot be known?”  

Shvetaketu was surprised. He had never heard of anything like this. He said, “Father! What is that? My guru has not taught me that.”  


Uddaalaka Aaruni said, “That is the knowledge of all–pervading Brahman.” 

“Father! Please tell me more about that Brahman.” 

“My child! The Brahman is the basis of everything. For example, when you see an ornament made of gold, you know that gold pervades it. That ornament cannot exist without gold. If you see a mud pot, you know that mud pervades it. It cannot exist without mud. Like that, the creation cannot exist without Brahman.” 

“Oh! What does Brahman look like, father?” 

“It cannot be described, my son. It is the smallest of the small and the largest of the large. It cannot be seen with our eyes. But it is there everywhere.” 

“I don’t understand, father!” 

“Wait! I will explain. Get me a fruit of the banyan tree.” 

“Here, father!” 

“Just take out one seed from it.” 

“I have taken it. It is very small.” 

“Okay, now split it.” 

“I have done it, father.” 

“What do you find inside the seed?” 

“There is nothing there.” 

“Is that so? Then, where did this huge banyan tree come from?” 

“From this seed, only.” 

“Could you see this huge tree when you split the seed and looked into it?” 

“No, father!” 

“But this little seed only contains the embryo for this huge tree with all its branches and leaves. Do you agree?” 

“Yes, father. I seem to understand. Can you give me more examples?” 

“Sure! Bring water in a container.” 

“Here! I have brought it, father!” 

“Put some salt in it and leave it there. Come after some time.” 

Shvetaketu came after some time and looked into the container. He said,  

“Father! I can’t see the salt I put into this container.” 

“Oh! It would have dissolved into it. Now drink the water from the upper portion of the container." 

“It tastes salty, father!” 

“Now, drink from the middle portion.” 

“That is also salty, father!” 

“How about the water from the bottom portion?” 

“That also has the same taste.” 


“Now, you are not able to see the salt in this water. It has permeated the water in the container. But, by tasting it, you have realized its presence. In the same way, the Brahman that pervades everything, cannot be seen. But we can feel its presence. Everything that you see around is that Brahman. You are that Brahman. Tat Tvam Asi.” (‘Tatvamasi’ – is one of the Mahavakyas that conveys the essence of advaita) (Tat – that , tvam – you, asi – are). 

Uddaalaka Aaruni continued, “It is that Brahman that is in you. If you make sincere efforts, you will be able to feel its presence and realize that you are the same as that. Once you get that realization, you will be able to see what cannot be seen, hear what cannot be heard and know what cannot be known.” 

“I understood, father!” Shvetaketu prostrated in front of his father. He was a changed man. Humility had replaced his arrogance. 

Later, this Shvetaketu grew into a great seeker and became a great guru too.  


B. Ramadevi is a teacher of English and a freelance reviewer of music and dance. Being a polyglot, she gets inputs from various sources and loves to share it with interested people. She contributes articles for Verandha Club on characters from Indian scriptures and classics.