‘தில்லானா மோகனாம்பாள்’ படம் பார்த்தவர்களுக்கு இந்தக்காட்சி நினைவிருக்கும். மேல் நாட்டவர் சிலர் சிக்கல் ஷண்முக சுந்தரத்திடம் அவரால் நாகஸ்வரத்தில், மேல் நாட்டு இசையை வாசிக்க முடியுமா என்று கேட்கும் போது அவர் 'கா மக ரிகபா ரிகஸா' என்று துவங்கும் ஒரு துள்ளல் இசையை வாசித்து மேல் நாட்டவரிடம் அப்ளாஸ் வாங்குவார்.
அவர் அப்போது வாசித்தது , 'மதுரை மணி நோட்' என்று புகழ் பெற்ற ஒரு ஸ்வரக்கோவை. இதை இயற்றியவர் மதுரை மணி ஐயருடைய குருவாகிய ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர். அவரிடம் இதைக் கற்ற மதுரை மணி ஐயர் தன் கச்சேரிகளில் இதை அடிக்கடி பாடியதில், இதற்கு 'மதுரை மணி நோட்' என்ற பெயரே வந்து விட்டது.
முத்தையா பாகவதர் இந்த மாதிரி சாஹித்யமே இல்லாத ஸ்வரக்கோர்வையை ஏன் உருவாக்கினார்?
பாகவதர் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற வாக்கேயக்காரர். அதாவது தானே பாடல்கள் இயற்றி, அவற்றைப் பாடவும் செய்வார். அது மட்டுமன்றி, ஹரிகதை சொல்வதிலும் தேர்ந்தவர். தன் கதைகளுக்கு இடையில் பாடவேண்டிய பாட்டுக்களை அவரே இயற்றி, இசையமைத்துப் பாடுவார்.
ஒரு சமயம், ராமாயண ஹரி கதையின் நடுவே, ராம சீதா கல்யாண ஊர்வலத்தை விரிவாக வர்ணித்த போது, அங்கே பாண்ட் வாத்தியம் கூட வாசித்தார்கள் என்று சொல்லி, இந்த ஸ்வரக்கோர்வையைப் பாடினாராம். அது மக்களை மிகவும் கவர்ந்ததாம்.
உண்மையில், மேற்கத்திய இசை அவர் காலத்துக்கு முன்பே, கர் நாடக சங்கீதத்திற்குள் நுழைந்து விட்டது. 18ம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட அரசர் இரண்டாம் துளஜா மற்றும் அவருடைய மகன் ராஜா சரபோஜி ஆகியோர், மேற்கத்திய இசையின் ரசிகர்களாக இருந்து அதை வெகுவாக ஆதரித்திருக்கிறார்கள். ராஜா சரபோஜி அவ்வப்போது தன் படையுடன் திருவையாற்றுக்குப் போவாராம். அப்போது பாண்ட் வாசிப்போரும் அவருடன் செல்வார்கள். இவர்கள் வாசித்ததை சிறு வயதில் தியாகராஜ ஸ்வாமிகள் கேட்டிருக்கக்கூடும். அவருடைய கீர்த்தனங்களில் ஒரு சில மேற்கத்திய இசையை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளன.
இவற்றில் பிரபலமானவை, சங்கராபரணத்தில் அமைந்துள்ள
'வர லீல கான லோலா' மற்றும் சுபோஷிணி ( Suposhini) ராகத்தில் அமைந்துள்ள ' ரமிஞ்சுவாரெவருரா ரகோத்தமா நின்னுவினா' ஆகிய க்ருதிகள். 'வர லீல கான லோலா' வார்த்தைகளின் சொல்லழகுக்கும், பொருளழகுக்கும் பெயர் பெற்றது. சுபோஷிணியில் அமைந்துள்ள க்ருதியின் மெட்டு, படை வீரர்களின் அணிவகுப்பை நினைவூட்டக்கூடியத
முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நோட்டு ஸ்வரங்கள் மேற்கத்திய இசையின் தாக்கத்துக்கு நல்ல சாட்சியாக விளங்குகின்றன. அவருக்கு எப்படி மேற்கத்திய இசை அறிமுகம் ஆயிற்று?
இதற்கான ஆதாரபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், நம்பக்கூடிய வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த துபாஷ் முத்துக்ருஷ்ண முதலியார் சென்னைக்கு அருகில் உள்ள மணலியில் வசித்து வந்தார். அவருடைய வேண்டுகோளின் பேரில், முத்துஸ்வாமி தீக்ஷிதருடைய தந்தையார், மணலிக்குத் தன் குடும்பத்துடன் வந்துவிட்டார். துபாஷின் மகன் சின்னஸ்வாமி என்கிற வெங்கட க்ருஷ்ண முதலியாரும் தன் தந்தையாரைப் போலவே இசையை ஆதரித்து வந்தார்.
அப்போது தான் கிழக்கிந்தியக்கம்பெனி மெது மெதுவாக இந்தியாவில் காலூற ஆரம்பித்திருந்தது. இங்கிருந்த சட்ட ஒழுங்கு பராமரிப்பு சரியாக இல்லை என்று எண்ணிய ஆங்கிலேய அதிகாரிகள், வேல்ஸ், ஸ்காட்லாண்ட் மற்றும் அயர்லாந்திலிருந்து படையை வரவழைத்தனர். அப்படைகளுடனே, படைவீரர்களுக்கு, வழிகாட்டவும், மன மகிழ்ச்சி அளிக்கவும் பாண்ட் வாசிப்பவரின் குழுவும் வந்தது. சின்னஸ்வாமிக்கு, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குப் போகும் வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைத்தன. அவர் முத்துஸ்வாமியையும் தன்னுடனே அழைத்துக்கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறாக, இந்த இரண்டு இளைஞர்களுக்கும், பிரிட்டிஷாருடைய பாண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் வாசித்த மேற்கத்திய இசையைக்கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
மிகுந்த இனிமையும், லயமும் நிறைந்த இந்த அயல் நாட்டு இசை அவர்களை மிகவும் கவர்ந்தது. முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கோ அதன் தாக்கம் மகத்தானதாக அமைந்தது. முத்துஸ்வாமி இந்த பிரிட்டிஷ் நாட்டுப்புற இசையின் மெட்டுக்களில் பாடக்கூடிய ஏறக்குறைய 40 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை இயற்றியுள்ளார். இவைகள் தீக்ஷிதரின் நோட்டு ஸ்வர சாஹித்யங்கள் அல்லது ‘European Airs’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் எல்லாம் தீக்ஷிதரின் முத்திரையான 'குருகுஹ' என்ற வார்த்தையும் காணப்படுகிறது
' சக்தி ஸஹித கணபதிம்', 'ஷ்யாமளே மீனாக்ஷி', ' ராம ஜனார்த்தன', 'கமலாஸன வந்தித, ' ஜகதீஷ குருகுஹ', ' பாஹிமாம் ஜானகீவல்லப', ' ராமசந்த்ரம் ராஜீவாக்ஷம்', 'வந்தே மீனாக்ஷி' ஆகியவை மிகவும் பிரபலமானவை.
இவருடனே இருந்த இவருடைய சகோதரர் பாலுஸ்வாமி தீக்ஷிதர் மேற்கத்திய வயலின் இசையால் கவரப்பட்டு வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார். அது மட்டுமன்று. கர்நாடக இசையில், வயலின் இசையை நுழைக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்தார். பின்னர், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் சீடரும், தஞ்சை நால்வர் என்று பெயர் பெற்ற சங்கீத மேதைகளில் ஒருவருமான வடிவேலு அவர்கள், வயலின் இசையில் மிகச்சிறந்த மேதைமை பெற்றது மட்டுமன்றி, கர்நாடக இசை மேடைகளில், வயலின் இசையை இடம் பெறச்செய்யப் பெரிதும் முயன்றார்.
அவருடைய முயற்சி எவ்வளவு பெரிய வெற்றி என்பதை இன்றைய கர்நாடக சங்கீதக்கச்சேரி மேடைகளில் பார்க்கலாம் . வயலின் துணையாக இல்லாத வாய்ப்பாட்டுக்கச்சேரியே இன்று இல்லை எனலாம்.
Muthaiah Bhagavathar
Thyagaraja Swamy
Muthuswamy Dikshithar
References:
(<https://indianraga.wordpress.com/2007/10/25/british-raj-and-indian-classical-music/>)
<http://maddy06.blogspot.in/2010/09/nottuswara-muthuswamy-dikshitars.html>
No comments:
Post a Comment