Friday, 7 August 2020

தொப்பி

 பல ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறுமிக்கு C B S E ஹிந்தி பாடம் எடுக்கும் போது இந்தக் கதையைச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

நடு நடுவே, அற்புதமான பழமொழிகளும், ரசிக்கும் படியான சொற்றொடர்களும், பாயசத்தில் வரும் முந்திரிப் பருப்பைப்போல் சுவை கூட்டும் விதமாக இந்தக்கதை சொல்லப்பட்டிருந்த அழகு என்னைக் கவர்ந்தது. சிறுவர்களுக்கான கதை தான் என்றாலும், இடையிடையே, நாட்டு நடப்பையும் கிண்டல் அடித்த விதம் நம்மை அறியாமல் புன்னகையை வரவழைக்கும். 'Topi' என்ற தலைப்புக்கொண்ட இந்தக்கதை ஸ்ருஞ்சய் (Srinjay) என்பவரால் எழுதப்பட்டு எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கீழே உள்ளது மொழிபெயர்ப்பு அல்ல. 90% மூலத்துக்கு உண்மையாக உள்ள, retold story எனலாம்.
தொப்பி
சிட்டுக்குருவிகள் இரண்டு, ஜோடியாக ஒரு மரத்தின் மேல் அன்புடன் வாழ்ந்து வந்தன. காலையில், சூரியன் உதித்தவுடன் இரண்டும், சேர்ந்தே, எழுந்திருக்கும், சேர்ந்தே, இரை தேடப்போகும், சேர்ந்தே, சிரிக்கும், சேர்ந்தே, எங்கும் திரியும். சூரியன் மறையும் நேரம் ஆனால், மீண்டும் அந்த மரக்கிளைக்கு வந்து ஓய்வெடுக்கும். நாள் முழுவதும், பார்த்தது, கேட்டது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் பெண்குருவி தன் இணையிடம் சொன்னது, " இந்த மனிதர்களைப் பார்த்தாயா? எவ்வளவு அழகாக உடை அணிகிறார்கள்! அது அவர்களுக்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது?"
ஆண்குருவி சொன்னது, " ஐயே! நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்! தங்கள் அழகை அவர்கள் உடையணிந்து மறைத்துக் கொள்கிறார்கள்! நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! நீ ஒரு புடவை கட்டிக்கொண்டால், நன்றாகவா இருக்கும்?"
"அதை விடு! அவர்கள் அழகுக்காக மட்டும் உடை அணிவதில்லை. குளிரிலிருந்தும், வெப்பத்திலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும் தான் உடை அணிகிறார்கள்."
"உனக்குப் புரிவதேயில்லை! இப்படி உடை அணிந்து பழகியதனால், அவர்களால், வெப்பம், குளிர் எதையுமே தாங்க முடிவதில்லை. அது மட்டுமா? உடையினாலேயே, அவர்களின் பணம், சமூக அந்தஸ்து எல்லாம் தெரிந்து விடுகிறதே! மனிதர்களுக்குள் வேற்றுமை தான் வளர்கிறது. வேலை செய்வதற்காக இருக்கும் கைகளையும், கால்களையும், கையுறைகளையும், காலுறைகளையும் அணிந்து ஒரு வேலையும் செய்ய முடியாதவைகளாகச் செய்து விடுகிறார்கள்! அழகான தலை முடியைக்கூட, தொப்பி அணிந்து மறைத்துக்கொண்டு விடுகிறார்கள்!"
படபடவென்று பேசி, ஆண்குருவி தன் அபிப்பிராயத்தை வலியுறுத்த முயற்சித்தது.
ஆனால், பெண்குருவி மசியவில்லை.
"அவர்கள் அணியும் தொப்பி தான் எவ்வளவு அழகாக இருக்கிறது? எனக்கும் ஒரு தொப்பி அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது!"
" இதென்ன, புதுப்பிரச்சினை! தொப்பி என்றால் சும்மாவா? ஒருவர் தலையில் இருக்கும் தொப்பிக்காக எவ்வளவு அல்லல் பட வேண்டி இருக்கிறது! எத்தனையோ பேர் தலைக்குத் தொப்பி போட்டால் தான் அவர்கள் தங்கள் தலையில் இருக்கும் முடியும்! நீ இந்த ஆசையெல்லாம் படாதே! சொல்லி விட்டேன்!"
ஆண் குருவி கொஞ்சம் அறிவாளி! ஆகவே அதில் உள்ள பிரச்சினைகளைப் பார்த்தது. ஆனால், பெண்குருவிக்குப் பிடிவாதம் அதிகம். தனக்கென்று ஒரு தொப்பியைப் பெற்று விடவேண்டும் என்பதே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று நினைக்கத் தொடங்கியது.
மறு நாள், இரண்டும் இரை தேடக்கிளம்பின. குப்பைகளைக் கிளறிக்கொண்டிருந்த போது, பெண் குருவி ஒரு பருத்தி
உருண்டையைப் பார்த்தது. அதற்கு ஒரே ஆனந்தம்! " கிடைத்து விட்டது! கிடைத்து விட்டது!" என்று கூவிக்கொண்டே ஆண் குருவியை நோக்கிப் பறந்து வந்தது. அதன் மூக்கில் ஒரு பருத்தி உருண்டை!
" என்ன கிடைத்து விட்டது?" என்றது ஆண் குருவி. அந்தப் பருத்தி உருண்டையைக்காட்டி, "தொப்பியின் ஒரு பகுதி கிடைத்து விட்டது! " என்றது பெண்குருவி.
கல கலவென்று சிரித்த ஆண்குருவி, " இப்படித்தான் ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவனுக்கு, குதிரைவண்டிக்காரன் கையில் இருந்து விழுந்து விட்ட சவுக்கு கிடைத்ததாம். "சவுக்கு கிடைத்தாயிற்று. இனி, குதிரையும், வண்டியும் தான் பாக்கி!" என்றானாம், என்றது.
பெண் குருவிக்கு சிரிப்பு வரவில்லை.
"பார்த்துக்கொண்டே இரு! நான் எப்படி தொப்பிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று பார்!" என்றது.
அந்தப்பருத்தி உருண்டையை எடுத்துக்கொண்டு குருவி பருத்தியை சுத்தம் செய்பவனிடம் பறந்து சென்றது.
"பருத்தியை சுத்தம் செய்யும் அண்ணா! பருத்தியை சுத்தம் செய்யும் அண்ணா! இந்தப்பருத்தியில் இருந்து கொட்டைகளை நீக்கிக் கொடேன்!" என்று கேட்டது.
பருத்தியை சுத்தம் செய்பவனோ வயதானவன். குளிர் காலம் வேறு! கிழிந்து போன கம்பளியைப் போர்த்திக்கொண்டு, நடுங்கிக் கொண்டே கத்தினான், " நீ இங்கிருந்து போகிறாயா, இல்லையா! நான் ராஜாவுக்கு வேண்டி, புது ரஜாய்க்காக பருத்தியை சுத்தம் செய்ய வேண்டும். உனக்கு ஓசியில் வேலை செய்யவெல்லாம் முடியாது."
"கோபித்துக்கொள்ளாதே அண்ணா! நான் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிக்கொள்ள மாட்டேன். இந்தப் பருத்தியை சுத்தம் செய்த பின் கிடைக்கும் பஞ்சில் பாதி உனக்கு, பாதி எனக்கு!" என்றது.
அவன் சந்தோஷமாக அந்தப்பருத்தியை நன்றாக சுத்தம் செய்து, பாதியைத் தான் எடுத்துக்கொண்டு, மீதியைக் குருவிக்குக் கொடுத்தான்.
அதை வாங்கிக்கொண்டு நூல் நூற்பவனிடம் குருவி செல்ல விரும்பியது. இப்போது ஆண் குருவிக்கும் நம்பிக்கை வந்து, அதுவும், தன் இணையுடன் சேர்ந்து நூல் நூற்பவனின் வீட்டுக்குச்சென்றது.
நூல் நூற்பவனுக்கு மிகவும் வயதாகி, முதுகு வளைந்து போய் இருந்தது. " நூல் நூற்கும் அண்ணா! நூல் நூற்கும் அண்ணா! இந்த சுத்தம் செய்த பஞ்சை நூலாக நூற்றுத் தருகிறாயா?" என்று கேட்டது, பெண் குருவி.
இந்தக் குருவியின் வேண்டுகோளைக் கேட்ட நூல் நூற்பவனுக்கு மிகவும் கோபம் வந்தது. " போங்கள், இங்கிருந்து! எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் ராஜாவுக்கு ஒரு புது அங்கிக்காக நூல் நூற்க வேண்டும். எனக்கு இலவசமாக வேலை செய்ய நேரம் இல்லை." என்று சொல்லி, அவைகளைத் துரத்தினான்.
" இங்கு எல்லாருமே ராஜாவுக்காகத்தான் வேலை செய்வீர்களா?" என்று கேட்டது, பெண்குருவி.
" நீ எந்த தேசத்திலிருந்து வருகிறாய்? இது கூடத் தெரியாதா? இங்கு எல்லாரும் ராஜாவுக்காகத்தான் உழைக்க வேண்டும். அவருக்கு வேண்டியவர்களுக்காகவும் தான்."
" கோபித்துக்கொள்ளாதே, அண்ணா! நாங்கள் கூலி கொடுக்காமல் வேலை வாங்க மாட்டோம். நீ இதில் இருந்து நூற்கும் நூலில் பாதியை எடுத்துக்கொள். மீதியை எங்களுக்குக் கொடு" என்றது அந்தக்குருவி.
"அட! இந்த அளவு கூலியை யாருமே கொடுத்ததில்லையே!" என்று மகிழ்ந்து, நூல் நூற்பவன் மிகவும் நேர்த்தியாக, சர்க்காவில் நூல் நூற்றுத் தந்தான்.அடுத்து இரண்டும் நெசவு நெய்பவனிடம் சென்றன. " நெசவு நெய்யும் அண்ணா! நெசவு நெய்யும் அண்ணா! என்னிடம் இருக்கும் நூலைத் துணியாக நெய்து தருகிறாயா? என்று கேட்டது, பெண் குருவி.
" நான் ராஜாவுக்காக, ஒரு புது உடைக்கு வேண்டித் துணி நெய்ய வேண்டும். இப்போது ராஜாவின் ஆட்கள் வந்து விடுவார்கள். என்னால் முடியாது" என்று சொல்லிவிட்டுத்தன் வேலையைத்தொடர்ந்தான் நெசவாளி.
"நாங்கள் ஒன்றும் சும்மா வேலை செய்யச்சொல்லவில்லை, அண்ணா! நெய்த துணியில் பாதியை நீ எடுத்துக்கொள். மீதியைக் கொடுத்தால் போதும்" என்றன குருவிகள்.
உடனே, நெசவாளி, அந்த நூலில், அழகாகத்துணி நெய்து கொடுத்தான்.
முக்கால் தூரம் கடந்தாகி விட்டது. அடுத்து, தையல்காரனிடம் போக வேண்டும்.
தையல்காரன் மிகவும் களைத்திருந்தான்.
"தையல் கார அண்ணா! தையல் கார அண்ணா! கொஞ்சம் இந்தத் துணியில் ஒரு தொப்பி தைத்துக்கொடேன்" என்றன குருவிகள்.
அவனுக்குச் சரியான கோபம் வந்தது. " இங்கே பாருங்கள்! அரசருடைய ஏழாவது ராணிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு நான் நிறைய புது உடைகள் தைக்க வேண்டும்' என்றான். மேலும்,
"எல்லாரும் வேலை தான் வாங்கிக்கொள்கிறார்கள். கூலி ஒருவரும் கொடுப்பதில்லை" என்று சலித்துக்கொண்டான்.
" நாங்கள் கூலி கொடுக்காமல் ஏமாற்ற மாட்டோம், அண்ணா! இந்தத் துணியில் இரண்டு தொப்பி தைத்து ஒன்றை நீ வைத்துக்கொள். ஒன்றை மட்டும் எங்களுக்குக் கொடு" என்றன.
தையல்காரனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி! உடனே கத்தரிக்கோலை எடுத்து, அந்தத்துணியை அளந்து வெட்டினான். ஊசி நூலை எடுத்து, அழகாக இரண்டு தொப்பிகள் தைத்தான். அது மட்டுமல்ல. அதன் மேல் ஐந்து குஞ்சலங்களையும் பொருத்தினான்.
அந்தத் தொப்பி கைக்குக் கிடைத்ததும், பெண் குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. " என் தொப்பியைப்பார்! அதில் உள்ள குஞ்சலங்களைப்பார்!" என்று கூத்தாட ஆரம்பித்தது.
"உண்மையில், நீ ராணி மாதிரி தான் இருக்கிறாய்" என்று புகழ்ந்தது ஆண் குருவி.
" ராஜா மாதிரி என்று சொல், என் ராஜாவே! எனக்கு ஈடாக ஒரு ராஜா உண்டா?" என்று பெருமிதத்துடன் பேசிய பெண் குருவிக்கு திடீரென்று, அந்த தேசத்து ராஜாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது.
குருவி அரண்மனையைச் சென்றடைந்த போது, ராஜா திறந்த வெளியில் உடம்புக்கு எண்ணெய் தடவி மாலிஷ் செய்து கொண்டிருந்தான். ஒரு சேவகன் அவனுடைய தலைக்கு எண்ணெய் தடவித் தேய்த்துக் கொண்டிருந்தான். ஒருவன் அவன் கை விரல்களுக்கு சொடக்கு எடுத்துக்கொண்டிருந்தான். ஒருவன் ராஜாவின் கால்களுக்கு எண்ணெய் தடவி நீவி விட்டுக் கொண்டிருந்தான். ராஜாவுக்கு சற்று தூரத்தில் போய் உட்கார்ந்த குருவி, " ஐயே! ராஜாவுக்குத் தொப்பியே இல்லை! எனக்குக் குஞ்சலத்தொப்பி இருக்கிறதே! என்று கூவியது.
சத்தம் கேட்டுத் திரும்பிய ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்! இதென்ன! குருவியின் தலையில் தொப்பி இருக்கிறதே!
குருவியோ, "ராஜாவுக்குத் தொப்பியே இல்லை! எனக்குக் குஞ்சலத்தொப்பி இருக்கிறதே! என்று கூவிக்கொண்டே இருந்தது.
அதைக்கேட்ட ராஜா, " யாராவது சீக்கிரம் என்னுடைய தொப்பியைக்கொண்டு வாருங்கள்" என ஆணையிடவும், அடுத்த நிமிடம், அவருடைய தொப்பி வந்தது. தொப்பியைத் தலையில் அணிந்து கொண்ட ராஜா, குருவியைப்பார்த்து, " இதோ, பார்! என்னிடமும் தொப்பி இருக்கிறதே!" என்றான்.
' ஐயே! அது வெறும் தொப்பி! என் தொப்பியில் ஐந்து குஞ்சலங்கள் இருக்கின்றனவே!" என்றது குருவி.
ராஜாவுக்கு மிகவும் கோபம் வந்தது. " என்னைப்போய் ஒரு குருவி கிண்டல் செய்வதாவது! அந்தக்குருவியைப்பிடித்து அதன் கழுத்தை நெறித்து அதைத்தூர எறியுங்கள்! அந்தத்தொப்பியை என்னிடம் கொடுங்கள். அதைக்காலால் எட்டி உதைக்கிறேன்." என்றான் ராஜா.
அங்கிருந்த மந்திரி மிகவும் பணிவுடன் சொன்னார், " அதைக் கொன்று நம் கையை அழுக்காக்கிக் கொள்வானேன், மகாராஜா! அதன் தொப்பியை மட்டும் பிடுங்கி விடலாம்" என்றார். மன்னர் "சரி" என்று சொல்லவே ஒரே பாய்ச்சலில் அதன் தொப்பியைப் பிடுங்கி ராஜாவிடம் கொடுத்தான், ஒரு சேவகன்.
அதைக்காலால் நசுக்கி எறியத்தான் நினைத்தான் ராஜா. அதற்குள் அதன் தரமும், அழகும், நேர்த்தியான வேலைப்பாடும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன.
" இவ்வளவு அழகான தொப்பியை என் ராஜ்ஜியத்தில் யார் தைத்தது? என்று கேட்டான்.
உடனே அவனது ஆட்கள் தேடிப்போய் அந்தத்தையற்காரனை அழைத்து வந்தார்கள்.
" மன்னியுங்கள், மகாராஜா!" என்று கெஞ்சிக்கொண்டே வந்தான் தையற்காரன்.
"மன்னிப்பெல்லாம், அப்புறம்! எப்படி நீ இவ்வளவு அழகான தொப்பியைத் தைத்தாய்?" என்று கேட்டான், ராஜா.
" மகாராஜா! குருவி கொடுத்த துணி மிகவும் அருமையாக நெய்யப்பட்டிருந்தது" என்றான்.
" யார் இதற்கான துணியை நெய்தது?" என்று கத்தினான்.
சிறிது நேரத்தில் நெசவாளி பயந்து கொண்டே வந்து சேர்ந்தான்.
அவனிடம் "எப்படி இவ்வளவு நன்றாகத் துணி நெய்தாய்?" என்று கேட்ட போது, " மகாராஜா! குருவி கொண்டு வந்த நூலின் தரம் அப்படி" என்றான்.
இதே மாதிரி, நூல் நூற்றவனை அழைத்துக்கேட்ட போது அவன், குருவி கொடுத்த பஞ்சு மிக நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது"
என்றான்.
பருத்தியைச் சுத்தம் செய்தவனைக் கூப்பிட்டுக்கேட்டால், " எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தால், நான் காரணத்தைச் சொல்கிறேன்" என்றான்.
" பிழைத்துப்போ! உண்மையைச்சொல்!" என்றான், ராஜா.
"பிரபோ! அந்தக்குருவி மிக நல்ல கூலி கொடுத்தது. உடனேயும் கொடுத்தது. கூலி உடனுக்குடன் கிடைத்தால், எந்தத் தொழிலாளியும் மனமார வேலை செய்வான்!" என்று கூறினான்.
" பார்த்துக்கொள், ராஜா! நான், கூலி கொடுத்து இந்தத் தொப்பியைச் செய்வித்திருக்கிறேன், சும்மா இல்லை!" என்று கொக்கரித்தது, குருவி. போதாததற்கு, " இந்த ராஜாவிடம் பணமே இல்லை, ஒரு தொப்பி கூட செய்து கொள்ள முடியாமல், என்னிடம் இருந்து, என் தொப்பியைப் பிடுங்கிக்கொண்டு விட்டான்" என்று கூச்சலிட்டது.
ராஜாவுக்கு பகீரென்றது. தன் கஜானா காலியாக இருப்பது இந்தக்குருவிக்கு எப்படித் தெரிந்தது? எவ்வளவு தான் கடுமையாக வரி வசூல் செய்தாலும், ஆடம்பரமான வாழ்க்கைக்கே எல்லாம் போதவில்லை. கஜானா எப்போதும் காலி தான்.
அதற்குள், இங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, அனேகம் பேர் அங்கே கூடி விட்டனர்.
மந்திரி சொன்னார், " இந்தக்குருவி மகாராஜாவின் மானத்தை வாங்காமல் விடாது போல் இருக்கிறதே!"
ராஜாவுக்கும் அந்த பயம் வந்து விட்டது. "அந்தத்தொப்பியை அந்தக்குருவிக்குத் திருப்பிக்கொடுத்து விடுங்கள்!" என்று ஆணையிட்டான்.
உடனே ஒரு சேவகன், அந்தத் தொப்பியைக் குருவியை நோக்கி எறிந்தான்.
அதைக் கப்பென்று பிடித்து, மீண்டும் அணிந்து கொண்ட குருவி கத்தியது, " இந்த ராஜா, சரியான பயந்தாங்கொள்ளி! என்னைப் பார்த்து பயந்து போய்த் தொப்பியைத் திருப்பித் தந்து விட்டான்" என்று.
"ஐயோ! இந்த வாயாடிக்குருவியின் வாயில் யார் விழுவார்கள்?" என்று கேட்ட ராஜா, தன் தொப்பியைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டான்.
Image : Author - Srinjay
Courtesy: Internet
Image may contain: 1 person, eyeglasses

No comments:

Post a Comment