Tuesday, 4 August 2020

மூன்று கேள்விகள் - Three Questions - Count Leo Tolstoy

கவுண்ட் லியோ டால்ஸ்டாயின் (Count Leo Tolstoy)கதைகள் ஆழமாக சிந்திக்க வைப்பவை! எக்காலத்துக்கும் பொருந்துபவை! அவருடைய புதினங்களைப்போலவே அவருடைய சிறுகதைகளும் மிகவும் பிரபலமானவை. இந்தக்கதையில் இந்திய மணம் வீசுவது போல் எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும் தானா?
மூன்று கேள்விகள்
ஒரு ஊரில் ஒரு மன்னர் இருந்தார். அவர் மிகவும் புத்திசாலி. ஒரு நாள் அவர் தனியே யோசித்துக்கொண்டிருந்த போது அவர் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. அவர் எடுத்த எந்த ஒரு செயலிலும் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்றால், அவருக்கு இந்த மூன்று கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும் ------
1. ஒரு செயலைத்தொடங்குவதற்கான சரியான நேரம் எது?
2. யார் சொல்லும் பேச்சைக் கேட்க வேண்டும்?
3. எது மிகவும் முக்கியமான வேலை?
இந்த எண்ணம் தோன்றியவுடனே, மன்னர் இந்தக்கேள்விகளுக்கு சரியான விடையளிப்பவருக்கு சிறந்த வெகுமதி அளிக்கப்படும்
என்று தன் நாட்டு மக்களுக்கு முரசறைந்து தெரியப்படுத்தினார். இதைக்கேள்விப்பட்டவுடன், கல்வி கேள்விகளிற் சிறந்த அறிஞர்கள் அவருடைய சபையை முற்றுகையிடத் துவங்கினர். மன்னர் ஆவலுடன் அவர்களிடம் இந்தக் கேள்விகளைக்கேட்டார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பதில் அளித்தனர்.
ஒருவர் , "முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் எல்லாச் செயல்களுமே சரியாக வரும்" என்றார். வேறொருவர் சொன்னார்,
" எல்லாச் செயல்களையும் எப்படி முன் கூட்டியே திட்டமிட முடியும்? எதிர்பாராமல் சில செயல்கள் செய்ய நேரிடலாம் அல்லவா?" என்றார். இன்னொருவர், "வேண்டாத கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காமல் இருந்தால், எல்லாச் செயல்களையும் சரியான நேரத்தில் முடிக்கலாம்" என்றார்.
இவையனைத்தும், சரியான பதில்கள் போலத் தோன்றினாலும், எல்லாச் சூழ் நிலைகளுக்கும் சரியாக இருக்காது என்பதால், மன்னருக்குத் திருப்தி உண்டாகவில்லை.
மற்ற கேள்விகளுக்கு வந்த பதில்களும் இவ்வாறாகத்தான் இருந்தன.
இரண்டாவதான "யார் சொல்லும் பேச்சைக் கேட்க வேண்டும்?" என்ற கேள்விக்கு, ஒருவர் சொன்னார், "ஒருவர் எப்போதும் அறிவாளிகளின் பேச்சைக்கேட்க வேண்டும்" என்று. இன்னொருவர், "புரோகிதரின் பேச்சைக்கேட்டு நடக்க வேண்டும்" என்றார். மூன்றாமவர், "மருத்துவர்கள் பேச்சைத்தான் கேட்க வேண்டும்" என்றார். மன்னருக்கு எந்தப் பதிலும் சரியாகப்படவில்லை.
மூன்றாவதான, "எது மிகவும் முக்கியமான வேலை?" என்ற கேள்விக்கு ஒருவர் சொன்னார், " அறிவியல் தான் உலகிலேயே மிகவும் முக்கியமானது" என்று. மற்றவர்கள், போர்த்திறமை, தெய்வ வழிபாடு போன்றவற்றைக் குறிப்பிட்டார்கள்.
மன்னர் யார் பதிலையும் ஏற்றுக்கொள்ளாமல், அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார். இறுதியில், அருகில் இருந்த ஆசிரமத்தில் வசித்து வந்த ஒரு சாதுவிடம் இந்தக்கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்று பார்க்கத் தீர்மானித்தார்.
அந்த சாது சிறந்த ஞானி என்ற புகழ் பெற்றவர். அவர் காட்டிடையே, ஒரு குடிசையில் வசித்து வந்தார். எளிய மனிதர்களை மட்டுமே சந்தித்து வந்தார். பணக்காரர்களையோ, அதிகாரத்தில் இருப்பவர்களையோ அவர் சந்திப்பதில்லை.
இதை அறிந்த மன்னர் , எளிய உடைகளை அணிந்து கொண்டு, ஆசிரமத்துக்குச் சற்றுத்தொலைவிலேயே தன் குதிரையை விட்டு இறங்கித் தன் மெய்க்காப்பாளரையும் அங்கேயே விட்டு விட்டு , சாதுவை சந்திக்கத் தனியாக நடந்து சென்றார்.
மன்னர் குடிசையை நெருங்கிய போது அந்த சாது தன் குடிசைக்கு முன்னால் இருந்த நிலத்தைக் கொத்திக்கொண்டிருந்தார். வந்தவரை வரவேற்று விட்டுத்தன் வேலையைத் தொடர்ந்தார். மிகவும் இளைத்து, பலவீனமாக இருந்த சாது, ஒவ்வொரு முறை நிலத்தைக்கொத்திக் கொஞ்சம் மண்ணை எடுக்கும் போதும் திணறித்திணறி மூச்சு விட்டார்.
மன்னர் அவரிடம் சென்று, " ஐயா! உங்களிடம் மூன்று கேள்விகளுக்குப் பதில் தேடி வந்திருக்கிறேன். சரியான நேரத்தில் சரியான வேலையை எப்படி செய்வது? யார் எனக்கு மிகவும் வேண்டியவர்கள்? ஆகவே, நான் யார் பேச்சைக்கேட்க வேண்டும்? எவை உண்மையிலேயே முக்கியமான வேலைகள்? நான் முதலில் எதைச்செய்ய வேண்டும்?"
மன்னர் சொன்னதை அந்த சாது கவனமாகக்கேட்டார். ஆனால், பதில் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் கொத்துவதைத் தொடர்ந்தார்.
மன்னர் சொன்னார், " ஐயா! நீங்கள் களைத்து விட்டீர்கள். அந்த மண்வெட்டியைத்தாருங்கள். நான் சிறிது நேரம் கொத்துகிறேன்."
"மிக்க நன்றி" என்று சொல்லி, மண்வெட்டியை மன்னரிடம் கொடுத்து விட்டு அந்த சாது நிலத்தில் அமர்ந்து கொண்டார்.
இரண்டு பாத்திகள் கொத்திய பிறகு மன்னர் அந்தக் கேள்விகளை மீண்டும் சாதுவிடம் கேட்டார். இப்போதும் சாது பதில் சொல்லவில்லை. எழுந்து கைகளை நீட்டி சோம்பல் முறித்து விட்டு, " இப்போது நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்" என்று சொல்லி, மண்வெட்டிக்காகக் கையை நீட்டினார்.
ஆனால், மன்னர் சாதுவிடம் மண்வெட்டியைத் தரவில்லை. தொடர்ந்து கொத்திக்கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் ஆயிற்று, இரண்டு மணி நேரம் ஆயிற்று, சூரியன் மரங்களுக்கிடையே இறங்கத்தொடங்கினான்.
அப்போது, மண்வெட்டியைக் கீழே போட்ட மன்னர் " ஐயா! நான் என் கேள்விகளுக்கு பதில் தேடி உங்களிடம் வந்தேன். என் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையென்றால் சொல்லி விடுங்கள். நான் வீட்டிற்குத் திரும்பிப் போகிறேன்." என்றார்.
" யாரோ ஓடி வருகிறார்கள். யாரென்று பார்ப்போம்" என்றார் சாது.
மன்னர் திரும்பிப்பார்த்தார். தாடியுடன், ஒரு மனிதன் காட்டிலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தான். தன் வயிற்றில் கையை வைத்து அழுத்திக்கொண்டிருந்தான். அங்கிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. மன்னரை நெருங்கிய அவன் மயங்கிக்கீழே விழுந்து விட்டான். அவன் வாயில் இருந்து வலி மிகுதியால் முனகல் மட்டும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. மன்னரும் சாதுவும், அந்த மனிதனின் உடைகளைத் தளர்த்திப் பார்த்தார்கள். அவனுடைய வயிற்றில் மிகப்பெரிய காயம் இருந்தது. அந்தக் காயத்தை முடிந்த வரை கழுவித் தன் கைக்குட்டையாலும், சாதுவிடம் இருந்த துண்டாலும் இறுக்கக் கட்டினார் மன்னர் . ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை. மீண்டும் மீண்டும் ரத்தத்தால் நனைந்த துணிகளைப்பிழிந்து அலசி, அந்தப் புண்ணைச் சுற்றிக் கட்டிக்கொண்டே இருந்தார் மன்னர் . ஒரு வழியாக ரத்தம் வடிவது நின்றது. அந்த மனிதனுக்கு நினைவு திரும்பியது. 'ஏதாவது குடிக்க வேண்டும்' என்று கேட்டான். மன்னர் , தண்ணீர் கொண்டு வந்து அவனுக்குக்கொடுத்தார்.
இதற்குள், சூரியன் மறைந்து இரவு வந்தது. மன்னரும் சாதுவும் அவனை உள்ளே தூக்கிச்சென்று, படுக்கையில் படுக்க வைத்தனர். அந்த மனிதன் படுக்கையில் படுத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான். நாள் முழுவதும் செய்த கடின உழைப்பாலும், இந்த காயப்பட்ட மனிதனைப்பார்த்துக் கொண்டதாலும், மிகவும் களைத்திருந்த மன்னர் , அந்தக்குடிசையின் வாசற்படியிலேயே அமர்ந்தபடி அந்த இரவு முழுவதும் தூங்கினார்.
மறு நாள் கண் விழித்த போது, தான் எங்கிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே மன்னருக்குச் சிறிது நேரம் ஆயிற்று. படுக்கையில் படுத்துக்கொண்டு, கண்ணீர் பளபளக்கும் கண்களால், அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தாடிக்கார மனிதன் யார் என்று யோசித்தார்.
மன்னர் விழித்துக் கொண்டதைக் கண்ட அந்த மனிதன், " என்னை மன்னித்து விடுங்கள்" என்று பலவீனமான குரலில் வேண்டினான்.
"எனக்கு நீங்கள் யாரென்றே தெரியாதே! நான் உங்களை எதற்கு மன்னிக்க வேண்டும்?" என்றார், மன்னர்.
"உங்களுக்கு என்னைத் தெரியாது; ஆனால், எனக்கு உங்களைத் தெரியும். நான் உங்கள் விரோதி. நீங்கள் என் சகோதரனுக்கு மரண தண்டனை வழங்கி, அவனுடைய சொத்துக்களை அரசுடைமையாக்கிக் கொண்டீர்கள். அப்போதிருந்து உங்களைப்பழி வாங்க வேண்டும் என்று சபதம் செய்திருந்தேன். நீங்கள் இந்த சாதுவைப் பார்ப்பதற்காகத்
தனியே வந்திருக்கிறீர்கள் என்று அறிந்து, நீங்கள் திரும்பிப் போகும் போது உங்களைக் கொல்வதற்காகக் காத்திருந்தேன். நாள் முழுவதும், நீங்கள் திரும்பி வரவில்லை. ஆகவே, நான் மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தேன். உங்கள் மெய்க்காப்பாளன் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு என்னைத் தாக்கினான். அவனிடமிருந்து தப்பி ஓடி வந்தேன். நீங்கள் மட்டும், என் காயத்துக்குக் கட்டுப் போடாமல் இருந்திருந்தால், நான் நிச்சயம் இறந்திருப்பேன். நான் உங்களைக் கொல்வதற்காக வந்தேன். ஆனால், நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். நான் இனி வாழ் நாள் முழுவதும், நீங்கள் விரும்பினால், உங்களுக்கு அடிமையாக உழைப்பேன். என் மகன்களையும் உங்களுக்கு சேவகம் செய்ய வைப்பேன். என்னைமன்னியுங்கள்!"
இதைக்கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ந்தார். ஒரு விரோதி நண்பனானான் என்பதில் அவருக்கு மிகவும் நிம்மதி. அவனுடைய சிகிச்சைக்காக அரண்மனை வைத்தியரை அனுப்பி வைப்பதாகவும், அவனுடைய சகோதரனிடமிருந்து எடுத்துக்கொண்ட சொத்துக்களைத் திரும்பக் கொடுப்பதாகவும் வாக்களித்தார்.
பிறகு, அந்த மனிதனிடமிருந்து விடை பெற்று, அரசர் அந்த சாதுவைத் தேடிக்கொண்டு வீட்டின் முன் புறம் சென்றார். போவதற்கு முன் மீண்டும் ஒரு முறை அவரிடம் தன் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்று முயற்சிக்க நினைத்தார்.
வீட்டின் வெளியே, சாது மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, முன் தினம் அமைத்த பாத்திகளில், விதைகளை விதைத்துக் கொண்டிருந்தார்.
மன்னர் அவரை நெருங்கி, " கடைசி முறையாகக்கேட்கிறேன்; தயவு செய்து எனது கேள்விகளுக்கு விடை கூறுங்கள், ஐயா!" என்று வேண்டினார்.
உட்கார்ந்த படியே மன்னரை நிமிர்ந்து பார்த்து சாது சொன்னார், " உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் கொடுக்கப்பட்டுவிட்டனவே!" என்று.
"எப்படி? எப்பொழுது? என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார், மன்னர் .
" உங்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் என் மேல் இரக்கப்பட்டு, எனக்கு உதவியாக நிலத்தைக் கொத்தாமல், உங்கள் வழியில் போயிருந்தால், அந்த மனிதன் உங்களைத் தாக்கியிருப்பான். ஆகவே, மிகவும் முக்கியமான நேரம் நேரம் எதுவென்றால், நீங்கள் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்த நேரம் தான். நான் தான் அப்போதைக்கு மிகவும் முக்கியமான மனிதன். எனக்கு உதவி செய்தது தான் நீங்கள் செய்திருக்க வேண்டிய முக்கியமான வேலை."
" பிறகு, அந்த மனிதன் நம்மை நோக்கி ஓடி வந்த போது, உங்களுக்கு மிகவும் முக்கியமான நேரம், அந்த மனிதனுடைய காயத்துக்குக் கட்டுப்போட்ட நேரம். ஏனென்றால், நீங்கள் அதைச் செய்யாதிருந்திருந்தால் உங்களுடன் சமாதானம் செய்து கொள்ளாமலேயே, அவன் இறந்திருப்பான். ஆகவே, அப்போது, அவன் தான் உங்களுக்கு மிகவும் முக்கியமான மனிதன். அவனுக்காக நீங்கள் செய்த உதவி தான் உங்களுக்கு மிகவும் முக்கியமான செயல்."
ஆகவே, நினைவு வைத்துக்கொள்ளுங்கள்! ஓரே ஒரு நேரம் தான் முக்கியமானது. அது 'இப்பொழுது'. அது ஏன் முக்கியம் என்றால், அப்போது மட்டும் தான், நம்மால் எதையாவது செய்ய முடியும். நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், யாருடன் இருக்கிறோமோ அவர் தான் நமக்கு அப்போதைக்கு மிக முக்கியமான மனிதர். ஏனெனில், எதிர் காலத்தில், வேறு யாருடனாவது நமக்கு சம்பந்தம் இருக்குமா என்று யாருக்கும் தெரியாது. நமக்கு மிகவும் முக்கியமான செயல் எதுவென்றால், நாம் யாருடன் இருக்கிறோமோ, அவருக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்வது. ஏனென்றால், அதற்காகத்தான், நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்."
அரசருடைய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது. நமக்கும் தான்!
Image: Count Leo Tolstoy
Courtesy: Internet
Image may contain: 1 person, beard and closeup



No comments:

Post a Comment