Saturday, 6 March 2021

வால்மீகி ராமாயணத்தேன் துளிகள்

ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் நம்மில் பலர் அறியாத செய்திகள் நிறைய உள்ளன. அவை மிகவும் சுவையானவை மட்டும் அல்ல. மனித மனத்தின் ஆழங்களை மிக அழகாக விளக்குவதாகவும் அமைந்துள்ளன.

சமீபத்தில் மறைந்த பன்னாஞ்சே ( Bannanje Govindacharya ) கோவிந்தாச்சார்யா என்பவரது 'வால்மீகி ராமாயண சிந்தனெ' என்னும் கன்னட உபந்நியாசம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகப்பெரிய கல்விமானாகிய அவர் பேச்சுக்களைக் கேட்கும் போது Oliver Goldsmith என்னும் கவிஞர் 'The village schoolmaster' என்ற கவிதையில் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது,

"And still they gaz’d, and still the wonder grew,

That one small head could carry all he knew.”

அவர் கூறிய அனேக சுவையான செய்திகளில் இருந்து சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

நாமெல்லாம் தசரதன் கைகேயிக்கு இரண்டு வரங்கள்  கொடுத்திருந்தான் என்று அறிந்திருக்கிறோம். ஆனால், அவன் அதற்கு முன்னமே, கைகேயியின் தந்தைக்கு ஒரு வாக்கு கொடுத்திருக்கிறான். முதல் பட்டத்தரசியான கௌசல்யாவுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்பதனால் இன்னொரு திருமணம் செய்து கொள்ள விரும்பி கேகய தேசத்து இளவரசியான கைகேயியை மணம் பேச அங்கு செல்கிறான்.

(கேகயம் எம்பது ஆஃகானிஸ்தான் என்கிறார் கோவிந்தாச்சார்யா அவர்கள். கௌசல்யா, கோசல தேசத்து இளவரசி. ஆகவே கௌசல்யா என்று குறிப்பிடப்படுகிறாள். கேகய தேசத்து இளவரசி கைகேயி என்று குறிப்பிடப்படுகிறாள். அவர்களுக்குத்தனிப்பட்ட பெயர்கள் இருந்தனவா என்றே தெரியவில்லை. மூன்றாவதாக மணம் செய்து கொண்ட சுமித்திரை இளவரசி அல்ல. ஆகவே அவளுக்குத் தனிப்பட்ட பெயர் உண்டு.)

திருமணப் பேச்சுவார்த்தையின் போது, மகாபாரதத்தில் சத்யவதியின் தந்தையார் போட்ட நிபந்தனையையே கைகேயியின் தந்தையும் போடுகிறார்.  வெகு காலமாக குழந்தைகள் இல்லாததால், இனி பிறக்காது என்ற எண்ணமா, இல்லை, பிறந்தாலும் கௌசல்யாவுக்குப் பிறக்காது என்ற எண்ணமா, இல்லை, கைகேயியின் பேரழகில் ஏற்பட்ட மயக்கமா—ஏதோவொன்றோ, எல்லாமுமாகவோ சேர்ந்து, கைகேயிக்குப் பிறக்கும் மகனே நாட்டை ஆளுவான் என்று வாக்குக்கொடுத்து அவளைத் திருமணம் செய்து கொண்டு வருகிறான், தசரதன். கைகேயி மேல் அவனுக்குத் தீராத காதலும், மோகமும் இருந்தது. ஆனால், அவளுக்கும் குழந்தை பிறக்கவில்லை. அதன் பின் வந்த சுமித்திரைக்கும் பிறக்கவில்லை. ஆகவே புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது  யாககுண்டத்தில் இருந்து  அக்னி தேவன் ஒரு கலசத்தில் பாயசத்தைக் கொடுத்து அதை அவன் மனைவிகளுக்குக் கொடுக்குமாறு பணிக்கிறான்.

தான் கைகேயியின் தந்தைக்குக்கொடுத்த வாக்கை தசரதன் மறக்கவே இல்லை. ஆனால் கைகேயியின் பிடிவாத குணமும், தான் என்ற ஆணவமும், தசரதனுக்குக் கவலையை உண்டாக்குகின்றன. அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பட்டம் கட்ட அவன் மனம் ஒப்பவில்லை. பார்க்கப்போனால், அந்த பாயசத்தை அவளுக்கு மட்டும் கூட தசரதன் கொடுத்திருக்கலாம். இல்லையென்றால், மூவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்திருக்கலாம். அவனுக்கு ஒரே குழப்பம்! கௌசல்யைக்கு ஒரு பாதியைக் கொடுத்தவன் மீதியுள்ளதில் பாதியை இரண்டாவது மனைவியான கைகேயிக்கு அல்லவா கொடுத்திருக்கவேண்டும்! சுமத்திரைக்கு நாலில் ஒரு பங்கைக்கொடுக்கிறான். மீதியுள்ளதையாவது கைகேயிக்குக் கொடுத்திருக்கலாமே! அதிலும் பாதியான எட்டில் ஒரு பங்கைத்தான் அவளுக்குக்கொடுக்கிறான். மீண்டும் மீதியுள்ளதை சுமித்திரைக்குக்கொடுக்கிறான். இப்படியாக, கௌசல்யைக்கு ராமனும், அடுத்ததாக சுமித்திரைக்கு லட்சுமணனும், பின்னர் கைகேயிக்கு பரதனும், அதன் பின்னர், சுமத்திரைக்கு சத்ருக்னனும் பிறக்கின்றனர்.

ராமனுக்குத்தான் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது தசரதனது பேரவா. அவன் கைகேயியின் தந்தைக்கு அளித்திருந்த வாக்கைப்பற்றி அறிந்தவர்கள், அவனைத்தவிர மூன்றே பேர் ––கைகேயியின் தந்தை, சீதையின் தந்தையாகிய ஜனகர், தசரதனின் மந்திரியும் தேரோட்டியுமான சுமந்திரன். அந்த ஒப்பந்தத்தின் போது அவர்கள் அங்கு இருந்தார்கள்.

தசரதன் தன் வாக்கை நினைவில் வைத்திருந்தானே அன்றி, அதை நிறைவேற்றும் எண்ணமோ, விருப்பமோ அவனுக்கு இல்லை. கைகேயி கூட, ராமனிடம் மிகுந்த அன்பு பூண்டிருந்தாள். அவளுக்குக்கூட, தன் மகனுக்குப் பட்டம் கட்டுவதாகத் தன் கணவர் கொடுத்திருந்த வாக்கு பற்றித்தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், தசரதனுக்கு ஒரே கவலை. தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும், தனக்குப்பிரியமானவனும், பொது மக்களின் பேராதரவை நிறைய பெற்றிருப்பவனுமான ராமனுக்குப்பட்டம் கட்டினால், நாட்டுக்கு நல்லது என்பது அவன் எண்ணம்.

நியாயமாக இந்த நிகழ்ச்சிக்கு நாள் குறிக்க அவன் குலகுரு வசிஷ்டரைக் கேட்டிருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல நாள் பார்த்துக் கொடுத்திருந்தால், அந்த நாளில் அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் போயிருக்காது. ஆனால், தசரதன் அதைச்செய்யவில்லை.

ராமனின் 27ம் பிறந்த நாளன்று, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நகரமே அலங்கரிக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டான். மாலையில் சபையைக்கூட்டினான். சபையோரிடம் தனக்கு வயதாகி வருவதால், தன் மகனுக்குப்பட்டம் கட்டி விட்டுத்தான் ஓய்வு எடுத்துக்கொள்ள அவர்களிடம் அனுமதி கேட்டான். அவர்கள் ராமன் மேல் இருந்த பேரன்பால், முழு மனதுடன் அனுமதி கொடுத்தனர். உடனே, அடுத்த நாளே பட்டாபிஷேகம் என்று அறிவித்தான்.

சில நாட்கள் கழித்து பட்டாபிஷேகத்தை வைத்துக் கொண்டிருக்கலாமே! அப்போது பரதனும், சத்ருக்னனும், கேகய நாட்டுக்குப் போயிருந்தார்கள். அவர்கள் வரும் வரை காத்திருக்க தசரதன் விரும்பவில்லை. அதைவிட ஆச்சரியம் –– ராமனின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்று அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அழைப்பு போயிருக்கிறது ––  ஆனால், கைகேயியின் தகப்பனாருக்கோ, பரத சத்ருக்னருக்கோ, அழைப்பு இல்லை. அது மட்டும் இல்லை. சீதையின் தந்தையாரான ஜனகருக்கும் அழைப்பு இல்லை. ஏனென்றால், அவர்கள் இருவருக்கும், தசரதன் கொடுத்த வாக்கு பற்றித்தெரியும். பட்டாபிஷேக நேரத்தில் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைத்தான் தசரதன்.

அது மட்டுமா? தான் செய்வது குற்றம் என்று நன்கு உணர்ந்திருந்ததால், கைகேயியிடம் இந்த செய்தியைச் சொல்வதை, முடிந்த வரை தள்ளிப்போட்டான். அவள் கூட மகிழ்ச்சியுடன் சம்மதித்திருப்பாள். ஆனால், அவள் திருமணம் ஆகி வரும் போதே, அவளுடனே வந்த அவளுடைய தாதி மந்தரைக்குத் தனக்குப் பிரியமான கைகேயியின் மகன் பரதன் தான் அரசன் ஆக வேண்டும் என்ற ஆசை. இதற்காகப் பலவாறாக எடுத்துச்சொல்லி கைகேயியின் மனத்தை மாற்றுகிறாள். என்ன செய்ய வேண்டும் , என்னவெல்லாம் கேட்கவேண்டும் என்பதெல்லாம் கூட அவள் தான் கைகேயிக்குச் சொல்கிறாள்.

கைகேயி முதலில், மறுக்கிறாள்; தயங்குகிறாள்; தன்னால் முடியுமா என்று மயங்குகிறாள். அவளுடைய பலங்களை எல்லாம் எடுத்துச்சொல்லி, அவளை முழுமையாக மாற்றி விடுகிறாள் மந்தரை.

பின்னர் நடந்த கதை நமக்குத்தெரியும். கைகேயியைச் சந்திக்கச்சென்ற தசரதன் அவளுடைய நிபந்தனைகளைக்கேட்டு நடுங்கிப்போகிறார். தன் உயிர் நிலைத்திருக்காது என்று கெஞ்சுகிறார். அப்போதும் அவள் அசைவதில்லை. ‘நான் விதவையாக வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரால் தடுக்க முடியும்?’ என்கிறாள்.

இப்படிப்பட்ட கல் நெஞ்சம் கொண்டவளாக கைகேயியால் எப்படி மாற முடிந்தது?

வால்மீகி சொல்கிறார், அந்த இரக்கமற்ற குணம், அவளுடைய இரத்தத்தில் கலந்திருக்கிறது, என்று.

இது என்ன புதுக்கதை?

கைகேயியின் தந்தையார் பெயர் அஸ்வபதி. அவர் ஒரு சமயம் ஒரு ரிஷியை சந்தித்த போது அந்த ரிஷி, அவருக்கு ஒரு அபூர்வ கலையைக் கற்பித்தார். அதைக் கற்ற பின்னர் அஸ்வபதிக்குத் தன்னைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்றவை எழுப்பும் ஒலியின் பொருள் புரிய ஆரம்பித்தது.

ஆனால், ரிஷி ஒரு நிபந்தனை இட்டிருந்தார் ––  ‘உனக்கு இந்த சக்தி இருக்கிறது என்னும் விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. நீ புரிந்து கொண்டதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது. மீறி, சொன்னால், உன் உயிரை இழக்க நேரிடும்.’ ஆர்வ மிகுதியால் அஸ்வபதி அப்படியே செய்வதாக வாக்களித்து அந்தக்கலையைக் கற்றுக்கொண்டார்.

ஒரு நாள், தன் மனைவியுடன் தோட்டத்தில் இருந்த போது ஒரு பறவையோ, பூச்சியோ எழுப்பிய ஒலியைக்கேட்டு அவர் களுக்கென்று சிரித்து விட்டார்.  அவர் மனைவி ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டாள். அவர் ஏதோ சொல்லி மழுப்ப முயன்றார். அவள் கோபித்துக்கொண்டு சண்டை போடத்தொடங்கினாள். வேறு வழியின்றி, தனக்கு இருக்கும் சக்தியைப்பற்றி அவளுக்குச் சொல்லி, அந்த ஒலியைக்கேட்டு தான் சிரித்தேன் என்றார். ‘சிரிக்கும் படி அது என்ன சொல்லிற்று?’ என்று கேட்டாள். ‘அதைச்சொல்ல முடியாது’ என்றார். ‘அதைத்தெரிந்து கொள்ளாவிட்டால் என் மண்டை வெடித்து விடும்’ என்றாள். ‘சொன்னால் என் உயிர் போய்  விடும்’ என்றார். ‘எப்படியும் ஒரு நாள் போகப்போகிற உயிர் தானே! என் விருப்பத்தை நிறைவேற்றி விட்டுப்போகட்டுமே!’ என்றாள். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அஸ்வபதி அங்கிருந்து சென்று விட்டார்.

தனக்கு இந்தக்கலையைக் கற்பித்த ரிஷியிடம் சென்று தன் பிரச்சினையைக் கூறினார். ரிஷி சொன்னார், ‘ சொல்லாதே! உன் மனைவி மிகவும் பிடிவாதம் பிடித்தாள் என்றால், அவளை வீட்டை விட்டு அனுப்பி விடு’ என்றார்.

மறு நாளும் அஸ்வபதியின் மனைவி ‘நேற்று எதற்காகச் சிரித்தீர்கள் என்று சொல்லுங்கள்’ என்று ஆரம்பித்தாள். இதைச்சொல்லா விட்டால், இனி மேல் என்னுடன் பேசவே வேண்டாம்’ என்றாள். அஸ்வபதி, ‘மிகவும் நல்லது. நீயும் இனி அரண்மனையில் இருக்க வேண்டாம். சென்று விடு’ என்று அவளை அவளுடைய வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

அந்த இரக்கமற்ற பெண்ணின் மகள் தான் கைகேயி. தாயின் அன்பின்றி, தன் தாதியான மந்தரையால் வளர்க்கப்பட்ட கைகேயி, தன் தாயைப்போல் இரக்கமில்லாமல் இருந்ததிலும், மந்தரையின் பேச்சைத் தட்ட முடியாத நிலையில் இருந்ததிலும் ஆச்சரியம் இல்லை அல்லவா?

 

 

 


No comments:

Post a Comment