Friday, 12 February 2021

நசிகேதன் NACHIKETHA

 


ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை குறிப்பிட்டார், “நசிகேதனைப்போன்ற திடமான நம்பிக்கையுள்ள ஒரு பத்துப் பன்னிரண்டு சிறுவர்கள் எனக்குக் கிடைத்தால், இந்தத் தேசத்தின் எண்ண ஓட்டத்தையும் செயல்பாடுகளையும் என்னால் ஒரு புதிய பாதையில் திருப்ப முடியும்.”

யார் அந்த நசிகேதன்?

மேலே படியுங்கள்!

ஓரு முறை, வாஜஸ்ரவா என்ற ஒரு ரிஷி ஒரு பெரிய வேள்வியை நடத்தி முடித்தபின் தானம் கொடுக்கத் துவங்கினார். அவர், தானம் கொடுத்தவை , வயதான, பால் கறவை நின்று போன பசுக்கள். அவற்றால் ஒரு பயனும் இல்லை. தானம் பெற்றவர்களுக்கோ, பெரிய ஏமாற்றம்.  ஆனால், வாஜஸ்ரவா பெரிய ரிஷி என்பதால், ஒன்றும் பேசாமல் தானத்தைப் பெற்றுச்சென்றார்கள்.

இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான் ரிஷியின் மகனாகிய நசிகேதன். வயதில் மிகச்சிறியவன்; ஆனாலும், கூர்மையான அறிவுள்ளவன்.

அவன் தந்தையிடம் சென்று, ‘தந்தையே! இப்படி, வயதான பசுக்களை நீங்கள் தானம் செய்கிறீர்களே! அது தவறில்லையா?” என்று கேட்டான்.

இதனால் கோபமுற்ற தந்தை, “ உனக்கு மிகவும் தெரியுமா, எப்படிப்பட்ட பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்று?” என்று கேட்டார்.

நசிகேதன் பணிவுடன் சொன்னான், “தந்தையே! நமக்கு மிகவும் பிடித்தவைகளையும், உபயோகமானவற்றையுமே தானம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்” என்றான்.

அதோடு நிற்கவில்லை. “உங்களுக்கு என்னைத்தானே மிகவும் பிடிக்கும். என்னை யாருக்கு தானம் செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டான்.

தந்தை அதைப்பொருட்படுத்தவில்லை. மீண்டும், மீண்டும் அதே கேள்வியை நசிகேதன் கேட்ட போது, ஆத்திரமடைந்த அவர், “உன்னை யமனுக்குத் தானமாகத் தந்தேன்” என்றார்.

ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், உடனே சமாளித்துக்கொண்ட நசிகேதன், “மிக்க மகிழ்ச்சி, தந்தையே! நான் இப்போதே யமலோகம் புறப்படுகிறேன்” என்றான்.

அப்போது தான் தந்தைக்குத் தன் தவறு புரிந்தது. மகனிடம்,  “தெரியாமல் சொல்லிவிட்டேன். நீ யமபுரத்திற்குப்போக வேண்டியதில்லை” என்றார். ஆனால், நசிகேதன் மசியவில்லை.

“தந்தையே! கொடுத்த வாக்கை மீறுவது பாவம்.  நான் போகிறேன்” என்று கூறித் தன்னந்தனியாக யமபுரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

பசி, தாகம், எதையும் பொருட்படுத்தாமல்  நடந்து சென்று யமபுரத்தை அடைந்தான். அங்கிருந்த காவலாளிகளிடம் தான் யார் என்பதையும் எதற்கு வந்திருக்கிறான் என்பதையும் தெரிவித்தான்.

ஆச்சரியப்பட்ட அவர்கள் சொன்னார்கள், “ அப்படியா! யமதர்மராஜா ஊரில் இல்லை. மூன்று நாட்கள் கழித்து வா!” என்று.

நசிகேதன், “அதனால் பரவாயில்லை. நான் இங்கேயே காத்திருக்கிறேன்” என்று கூறி, அங்கேயே இருந்தான்.

அவனுக்கு உணவு, நீர் முதலியனவற்றைக் காவலாளிகள் கொண்டு வந்தார்கள். ஆனால், “யமதர்மராஜாவைப் பார்க்காமல் எதையும் உண்ண மாட்டேன்” என்று சொல்லிவிட்டான் நசிகேதன்.

மூன்று நாட்கள் கழித்து யமதர்மராஜா வந்தார். ஒரு சிறுவன் தன் வாயிலில் அமர்ந்திருப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டார். அவன் மூன்று நாட்களாக உணவும் நீரும் இன்றி, அவருக்காகக் காத்திருப்பதை அறிந்த அவர், மிகவும் வருந்தினார். பின்னர், “குழந்தாய்! உன் திடசித்தத்தை மெச்சுகிறேன். நீ உன் நாட்டிற்கே திரும்பிப்போ. உன்னை மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக, உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். எது வேண்டுமோ, கேள்!” என்றார்.

இதனால் மிகவும் மகிழ்ந்த நசிகேதன், “என் தந்தையார் என் மீது கோபமாக இருக்கிறார். அவர் முன் போலவே என் மீது அன்பு செலுத்த வேண்டும்” என்றான்.

“அப்படியே ஆகட்டும். உனது இரண்டாவது வரமாக என்ன வேண்டும்?” என்றார் யமதர்மராஜா.

“சொர்க்கத்தை ஒருவன் அடைவதற்கான வழிமுறைகள் என்ன என்று எனக்குத்தெரிவிக்க வேண்டும்” என்றான்.

இதைக்கேட்ட யமதர்மராஜா அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் தான் கொடுத்த வாக்கை மீற முடியாமல், அவன் கேட்டதையெல்லாம் விளக்கிக்கூறினார். அவன் மிகவும் கவனத்துடன் அவர் சொன்னதைக்கேட்டு நன்றாகப்புரிந்து கொண்டதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.

“குழந்தாய்! உனது மூன்றாவது வரத்தைக்கேள்!” என்றார்.

சற்றே யோசித்த நசிகேதன்,”ப்ரபோ! மரணம் என்றால் என்ன? மரணத்திற்குப்பின் ஆத்மாவுக்கு என்ன நேரிடுகிறது? எனக்கு இவற்றை விளக்க வேண்டும்” என்றான்.

இதைக்கேட்ட யமதர்மராஜாவின் திகைப்புக்கு அளவே இல்லை. ஒரு சிறுவன் கேட்கும் கேள்வியா இது?

 “குழந்தாய்! வேறு ஏதாவது கேள்! நாடு வேண்டுமா? செல்வம் வேண்டுமா? அதிகாரம் வேண்டுமா? எதுவாயினும் கேள். தருகிறேன். உன் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது,” என்றார்.

“அது இல்லையென்றால், எனக்கு வேறெதுவும் வேண்டாம். நீங்கள் தான் வரம் கேட்கச்சொன்னீர்கள். பரவாயில்லை. நான் போகிறேன்” என்றான்.

யமதர்மராஜாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல், இது வரை யாருக்கும் தெரியாத,  மரணத்தைப்பற்றிய ரகசியங்களை அவனுக்கு விளக்கினார்.

மிகவும் நன்றியுடன் அவரை வணங்கி விடைபெற்றுத் தன் நாட்டை அடைந்த நசிகேதன், தன் தந்தையின் அன்பை மீண்டும் பெற்று, கல்வி கேள்விகளில் சிறந்து, மிகுந்த புகழுடன் வாழ்ந்தான்.

மூலம்: ‘கடோபனிஷதம்’ (katthopanishad)

ஹிந்தியில் உள்ள கதையைத்தழுவித் தமிழில், ரமாதேவி

( Originally published in the Bharatiya Vidya Bhavan's bulletin - February -2020)

No comments:

Post a Comment