Thursday, 10 September 2020

கர்நாடக இசையில் மேற்கத்திய இசையின் தாக்கம்


 

‘தில்லானா மோகனாம்பாள்’ படம் பார்த்தவர்களுக்கு  இந்தக்காட்சி நினைவிருக்கும். மேல் நாட்டவர் சிலர் சிக்கல் ஷண்முக சுந்தரத்திடம் அவரால் நாகஸ்வரத்தில், மேல் நாட்டு இசையை வாசிக்க முடியுமா என்று கேட்கும் போது அவர் 'கா மக ரிகபா ரிகஸா' என்று துவங்கும் ஒரு துள்ளல் இசையை வாசித்து மேல் நாட்டவரிடம் அப்ளாஸ் வாங்குவார்.

அவர் அப்போது வாசித்தது , 'மதுரை மணி நோட்' என்று புகழ் பெற்ற ஒரு ஸ்வரக்கோவை. இதை இயற்றியவர் மதுரை மணி ஐயருடைய குருவாகிய ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர். அவரிடம் இதைக் கற்ற மதுரை மணி ஐயர் தன் கச்சேரிகளில் இதை அடிக்கடி பாடியதில், இதற்கு 'மதுரை மணி நோட்' என்ற பெயரே வந்து விட்டது.

முத்தையா பாகவதர் இந்த மாதிரி சாஹித்யமே இல்லாத ஸ்வரக்கோர்வையை ஏன் உருவாக்கினார்?

பாகவதர் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்ற வாக்கேயக்காரர். அதாவது தானே பாடல்கள் இயற்றி, அவற்றைப் பாடவும் செய்வார். அது மட்டுமன்றி, ஹரிகதை சொல்வதிலும் தேர்ந்தவர். தன் கதைகளுக்கு இடையில் பாடவேண்டிய பாட்டுக்களை அவரே இயற்றி, இசையமைத்துப் பாடுவார்.

ஒரு சமயம், ராமாயண ஹரி கதையின் நடுவே, ராம சீதா கல்யாண ஊர்வலத்தை விரிவாக வர்ணித்த போது, அங்கே பாண்ட் வாத்தியம் கூட வாசித்தார்கள் என்று சொல்லி, இந்த ஸ்வரக்கோர்வையைப் பாடினாராம். அது மக்களை மிகவும் கவர்ந்ததாம்.

உண்மையில், மேற்கத்திய இசை அவர் காலத்துக்கு முன்பே, கர் நாடக சங்கீதத்திற்குள் நுழைந்து விட்டது. 18ம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட அரசர் இரண்டாம் துளஜா மற்றும் அவருடைய மகன் ராஜா சரபோஜி ஆகியோர், மேற்கத்திய இசையின் ரசிகர்களாக இருந்து அதை வெகுவாக ஆதரித்திருக்கிறார்கள். ராஜா சரபோஜி அவ்வப்போது தன் படையுடன் திருவையாற்றுக்குப் போவாராம். அப்போது பாண்ட் வாசிப்போரும் அவருடன் செல்வார்கள். இவர்கள் வாசித்ததை சிறு வயதில் தியாகராஜ ஸ்வாமிகள் கேட்டிருக்கக்கூடும். அவருடைய கீர்த்தனங்களில் ஒரு சில மேற்கத்திய இசையை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளன.

இவற்றில் பிரபலமானவை, சங்கராபரணத்தில் அமைந்துள்ள 

'வர லீல கான லோலா' மற்றும் சுபோஷிணி ( Suposhini)  ராகத்தில் அமைந்துள்ள ' ரமிஞ்சுவாரெவருரா ரகோத்தமா நின்னுவினா' ஆகிய க்ருதிகள். 'வர லீல கான லோலா'  வார்த்தைகளின் சொல்லழகுக்கும், பொருளழகுக்கும் பெயர் பெற்றது. சுபோஷிணியில் அமைந்துள்ள க்ருதிின் மெட்டு, படை வீரர்களின் அணிவகுப்பை நினைவூட்டக்கூடியத

   முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நோட்டு ஸ்வரங்கள் மேற்கத்திய இசையின் தாக்கத்துக்கு நல்ல சாட்சியாக விளங்குகின்றன. அவருக்கு எப்படி மேற்கத்திய இசை அறிமுகம் ஆயிற்று?

இதற்கான  ஆதாரபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், நம்பக்கூடிய வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த துபாஷ் முத்துக்ருஷ்ண முதலியார் சென்னைக்கு அருகில் உள்ள மணலியில் வசித்து வந்தார். அவருடைய வேண்டுகோளின் பேரில், முத்துஸ்வாமி தீக்ஷிதருடைய தந்தையார், மணலிக்குத் தன் குடும்பத்துடன் வந்துவிட்டார். துபாஷின் மகன் சின்னஸ்வாி என்கிற வெங்கட க்ருஷ்ண முதலியாரும் தன் தந்தையாரைப் போலவே இசையை ஆதரித்து வந்தார்.

அப்போது தான் கிழக்கிந்தியக்கம்பெனி மெது மெதுவாக இந்தியாவில் காலூற ஆரம்பித்திருந்தது. இங்கிருந்த சட்ட ஒழுங்கு பராமரிப்பு சரியாக இல்லை என்று எண்ணிய ஆங்கிலேய அதிகாரிகள், வேல்ஸ், ஸ்காட்லாண்ட் மற்றும் அயர்லாந்திலிருந்து படையை வரவழைத்தனர். அப்படைகளுடனே, படைவீரர்களுக்கு, வழிகாட்டவும், மன மகிழ்ச்சி அளிக்கவும் பாண்ட் வாசிப்பவரின் குழுவும் வந்தது. சின்னஸ்வாமிக்கு, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குப் போகும் வாய்ப்புக்கள் அடிக்கடி கிடைத்தன. அவர் முத்துஸ்வாமியையும் தன்னுடனே அழைத்துக்கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறாக, இந்த இரண்டு இளைஞர்களுக்கும், பிரிட்டிஷாருடைய பாண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் வாசித்த மேற்கத்திய இசையைக்கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.  

 

மிகுந்த இனிமையும், லயமும் நிறைந்த இந்த அயல் நாட்டு இசை அவர்களை மிகவும் கவர்ந்தது. முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கோ அதன் தாக்கம் மகத்தானதாக அமைந்தது. முத்துஸ்வாமி இந்த பிரிட்டிஷ் நாட்டுப்புற இசையின் மெட்டுக்களில் பாடக்கூடிய  ஏறக்குறைய 40 சம்ஸ்க்ருத  ஸ்லோகங்களை இயற்றியுள்ளார்.  இவைகள் தீக்ஷிதரின் நோட்டு ஸ்வர சாஹித்யங்கள் அல்லது ‘European Airs’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் எல்லாம் தீக்ஷிதரின் முத்திரையான 'குருகுஹ' என்ற வார்த்தையும் காணப்படுகிறது

' சக்தி ஸஹித கணபதிம்', 'ஷ்யாமளே மீனாக்ஷி', ' ராம ஜனார்த்தன', 'கமலாஸன வந்தித, ' ஜகதீஷ குருகுஹ', ' பாஹிமாம் ஜானகீவல்லப', ' ராமசந்த்ரம் ராஜீவாக்ஷம்', 'வந்தே மீனாக்ஷி' ஆகியவை மிகவும் பிரபலமானவை.

இவருடனே இருந்த இவருடைய சகோதரர் பாலுஸ்வாமி தீக்ஷிதர் மேற்கத்திய வயலின் இசையால் கவரப்பட்டு வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார். அது மட்டுமன்று. கர்நாடக இசையில், வயலின் இசையை நுழைக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்தார். ின்னர், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் சீடரும், தஞ்சை நால்வர் என்று பெயர் பெற்ற சங்கீத மேதைகளில் ஒருவருமான வடிவேலு அவர்கள், வயலின் இசையில் மிகச்சிறந்த மேதைமை பெற்றது மட்டுமன்றி, கர்நாடக இசை மேடைகளில், வயலின் இசையை இடம் பெறச்செய்யப் பெரிதும் முயன்றார்.

அவருடைய முயற்சி எவ்வளவு பெரிய வெற்றி என்பதை இன்றைய கர்நாடக சங்கீதக்கச்சேரி மேடைகளில் பார்க்கலாம் . வயலின் துணையாக இல்லாத வாய்ப்பாட்டுக்கச்சேரியே இன்று இல்லை எனலாம்.

 

Muthaiah Bhagavathar

Thyagaraja Swamy

Muthuswamy Dikshithar


References:

(<https://indianraga.wordpress.com/2007/10/25/british-raj-and-indian-classical-music/>)

<http://maddy06.blogspot.in/2010/09/nottuswara-muthuswamy-dikshitars.html>




Friday, 7 August 2020

வெரோனாவில் இரு கனவான்கள்

Two Gentlemen of Verona' என்ற இந்தக்கதையின் தலைப்பு ஷேக்ஸ்பியரின் நாடகங்களுன் ஒன்றன் தலைப்பு. அந்தக்கதைக்கும் இதற்கும் சம்பந்தம் தலைப்பில் மட்டும் தான்.
இத்தாலி நாட்டில், ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள வெரோனா என்னும் நகரத்தில் தான் சந்தித்த இரண்டு சிறுவர்களைப் பற்றிய இந்தக்கதையை எழுதியவர் A.J.Cronin. இதுவும் பாடப்புத்தகத்தில் இருந்த கதை தான். இதை வகுப்பில் படித்த போது, மாணவர்கள் உணர்ச்சிக் குவியலாக மாறியதை நான் இன்னும் மறக்கவில்லை. இந்தச்சிறார்களை, 'கனவான்கள்' என்று கதாசிரியர் ஏன் அழைக்கிறார் என்பது கதையைப்படித்து முடித்தால், விளங்கும்.
வெரோனாவில் இரு கனவான்கள்
நாங்கள் ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தின் வழியே காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரண்டு சிறுவர்கள் எங்கள் வண்டியை நிறுத்தினார்கள். அவர்கள் சிறு சிறு கூடைகளில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.
என்னுடைய டிரைவர் சொன்னார், "இவர்களிடம் வாங்காதீர்கள். வெரோனாவுக்குப் போனால், இதை விட மலிவாகக் கிடைக்கும். அதுவுமல்லாது......" என்று பாதியில் நிறுத்தினார்.
கசங்கிய உடைகளுடன், இருந்த அவர்களிடம் வாங்க அவருக்கு விருப்பம் இல்லை. அந்த இருவரில் ஒருவன் ஒரு பழைய ஜெர்ஸியும், காக்கி ட்ராயரும் போட்டுக்கொண்டிருந்தான். இன்னொருவன் தன் ஒல்லியான உடம்பை ஒரு படைவீரனுடைய உடையால் சுற்றியிருந்தான். ஆனாலும், பழுப்பு நிற உடலுடனும், கலைந்த தலைமுடியுடனும், ஆர்வம் நிறைந்த பார்வையுடனும் இருந்த அந்த சிறுவர்கள் ஏதோ விதத்தில் எங்களைக் கவர்ந்தார்கள்.
அவர்களுடன் பேசியதில் அவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்தது. பெரியவன் ஜாக்கோப்போவுக்கு (Jacopo)13 வயது. காரின் கைப்பிடி அளவு உயரமே இருந்த அவனுடைய தம்பி நிக்கோலாவுக்கு (Nicola)12.
அவர்களிடம் இருந்ததிலேயே பெரிய கூடையை, வாங்கிக்கொண்டு, நாங்கள் நகரத்தை நோக்கிப் பயணப்பட்டோம்.
அடுத்த நாள் காலை, நாங்கள் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த போது அருகிருந்த சதுக்கத்தில் அமைந்திருந்த நீரூற்றுக்கு அருகே, அந்தச் சிறுவர்கள் இருவரும் குனிந்த படி, ஷூ பாலிஷ் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களையே சிறிது நேரம் கவனித்தோம். பிறகு, அவர்கள் முன் இருந்த கூட்டம் குறைந்தவுடன், அவர்களிடம் சென்றோம்.
எங்களைப் பார்த்ததும் அவர்கள் எங்களை நட்புடன் வரவேற்றார்கள்.
" நீங்கள் பழ வியாபாரம் செய்வதாக அல்லவோ நினைத்தேன்", என்றேன்.
" நாங்கள் பலவும் செய்கிறோம், ஐயா!" என்று நிக்கோலா பதில் சொன்னான்.
நாங்கள் எங்கள் ஷூக்களை பாலிஷ் செய்து கொள்வோமா என்று, நம்பிக்கையுடன் எங்களைப் பார்த்தான்.
" நாங்கள் இங்கு வரும் பார்வையாளர்களுக்கு நகரத்தைச் சுற்றிக் காண்பிக்கவும் செய்வோம். ஜூலியட்டின் கல்லறை போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம்."
" சரி! அப்படியானால், எங்களைக் கூட்டிச் செல்லுங்கள்!"
நாங்கள் பல இடங்களையும் சுற்றிப் பார்த்த போது அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர்கள் மேல் ஒரு ஆர்வத்தையும் அக்கறையையும் ஏற்படுத்தியது.
அவர்கள் குழந்தைத்தனமாகவும் வெகுளியாகவும் தான் இருந்தார்கள். ஜாக்கொப்போ ஒரு அணிலைப்போலத் துறு துறுவென்றிருந்தான். நிக்கோலாவின் முகத்தில் எப்போதும் ஒரு மனதைக்கவரும் புன்னகை. ஆனாலும் அவர்கள் இருவர் முகத்திலும் அவர்கள் வயதை மீறிய ஒரு முதிர்ச்சி இருந்தது.
அங்கு தங்கியிருந்த அந்த வாரத்தில் நாங்கள் அவர்களை அடிக்கடி சந்தித்தோம். அவர்கள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தார்கள். அமெரிக்கன் சிகரெட் ஒரு பாக்கெட் வேண்டுமா? ஓப்பெரா (Opera) வுக்கு டிக்கெட் வேண்டுமா? ஒரு நல்ல ரெஸ்டாரண்டின் பெயர் தெரிய வேண்டுமா? எதுவானாலும் அவர்களைக்கேட்டால் போதும்.
எந்த வேலையையும் செய்வதில் அவர்கள் காட்டிய விருப்பமும், ஈடுபாடும் எங்களை மிகவும் கவர்ந்தது.
அந்தக் கோடையில், எரிக்கும் வெய்யிலில், அவர்கள், ஷூக்களை பாலிஷ் செய்தார்கள், பழங்களை விற்றார்கள், செய்தித்தாள்களை விற்றார்கள், டூரிஸ்டுகளை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள், மேலும் என்ன வேலை சொன்னாலும் செய்தார்கள்.
காற்று பலமாக வீசிக்கொண்டிருந்த ஒரு இரவில், நாங்கள் அவர்களை அந்த சதுக்கத்துக்கருகே, ஒரு மின்கம்பத்துக்கடியில், கற்கள் பாவிய ஒரு மேடையில் பார்த்தோம். வேறு யாருமே அங்கில்லை.
சாய்ந்து படுத்துக் கொண்டிருந்த நிக்கோலா எங்களைப் பார்த்ததும், நிமிர்ந்து உட்கார்ந்தான். விற்காத செய்தித்தாள்களின் ஒரு கட்டு அவன் காலடியில் இருந்தது. தன் அண்ணனின் தோளில் தலை வைத்து ஜாக்கோப்போ தூங்கிக் கொண்டிருந்தான். நேரம் நடு இரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
"இன்னும் ஏன் தூங்கப்போகவில்லை, நிக்கோலா?"
"பாடுவா (Padua) வில் இருந்து வரும் கடைசி பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறோம், ஐயா! அந்த பஸ் வந்ததும், எல்லா செய்தித்தாள்களும் விற்று விடும்."
"நீங்கள் இவ்வளவு பாடு பட வேண்டுமா? மிகவும் களைத்திருக்கிறீர்களே!"
"நாங்கள் சலித்துக்கொள்வதில்லையே, ஐயா!"
ஆனால், மறு நாள், அந்த சதுக்கத்துக்கருகில், என்னுடைய ஷூக்களை பாலிஷ் செய்து கொள்ளப்போன போது, நான் சொன்னேன், "நிக்கோலா! நீயும் ஜாக்கோப்போவும் தொடர்ந்து உழைப்பதைப் பார்த்தால், உங்களிடம் ஓரளவு பணம் இருக்க வேண்டும். நீங்கள் நல்ல துணி உடுத்துவதில்லை. மிகக் குறைவாகத்தான் சாப்பிடுகிறீர்கள். உங்கள் பணத்தை வைத்துக் கொண்டு என்ன தான் செய்கிறீர்கள்?"
வெய்யிலில் இருப்பதனால், பழுத்த நிறமாயிருந்த அவன் முகம், சங்கடத்தால் சிவந்து, பின்னர் வெளுத்தது. அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
"அமெரிக்கா போவதற்காக பணத்தை சேமிக்கிறீர்களோ?"
"அமெரிக்கா போகவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது, தான். ஆனால், இப்போதைக்கு எங்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன."
"அப்படி என்ன திட்டங்கள் ?"
"வெறும் திட்டங்கள் தான், ஐயா!" என்று மெதுவாகச் சொன்னான். இதைப்பற்றி, மேலும் அவன் பேச விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
நான் சொன்னேன், "நாங்கள் திங்கட்கிழமை எங்கள் ஊருக்குத் திரும்பிப் போகிறோம். போவதற்கு முன், உனக்கு ஏதாவது வேண்டுமென்றால், சொல்."
நிக்கோலா 'ஒன்றும் வேண்டாம்' என்பது போலத் தலையை அசைத்தான். ஆனால் அதற்குள் ஜாக்கோப்போ சொன்னான், "ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் போலேட்டா (Poleta)வுக்குப் போவோம். எப்பொழுதும் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போவோம். நீங்கள் அன்புடன் கேட்பதனால், சொல்கிறேன்- முடிந்தால் நீங்கள் எங்களை உங்கள் காரில் அனுப்பலாம்."
என் டிரைவருக்கு நான் ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமையன்று விடுமுறை கொடுத்திருந்தேன். ஆனாலும், சொன்னேன்,
"நானே, உங்களை அங்கு அழைத்துப் போகிறேன்."
நிக்கோலா அவனுடைய தம்பியை எரிச்சலுடன் முறைத்துக் கொண்டிருந்தான்.
"உங்களுக்கு ஏன் ஐயா வீண் சிரமம்?"
"ஒரு சிரமமும் இல்லை."
அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு, மனமில்லாமல், " சரி" என்றான்.
அடுத்த நாள் மதியம், நாங்கள் ஒரு குன்றின் மேல் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தை நோக்கிப் பயணப்பட்டோம்.
ஏதோவொரு சிறிய வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும் என்று நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால், ஜாக்கோப்போ வழி காடிய படி போனதில், சிவப்புக் கூரையுடன், உயரமான கருங்கல் சுற்றுச்சுவருக்கு நடுவே இருந்த ஒரு பெரிய
தனி பங்களாவுக்கு முன் வண்டியை நிறுத்தினேன். என்னால் நம்பவே முடியவில்லை. வண்டி நின்றவுடனேயே இருவரும் அதிலிருந்து குதித்தார்கள்
"நாங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்ள மாட்டோம், ஐயா! மிஞ்சிப்போனால், ஒரு மணி நேரம் ஆகும். நீங்கள் வேண்டுமானால், இந்த கிராமத்திலுள்ள ஒரு கஃபேக்குப்போய், ஏதாவது குடிக்கலாமே!" என்று சொல்லிக்கொண்டே ஓடிப்போய், அந்தக்கட்டடத்துக்குள் மறைந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, நான் அவர்களைப்பின் தொடர்ந்தேன்.
பக்கவாட்டில் ஒரு கம்பி போட்ட நுழைவாயில் இருந்தது. ஒரு தீர்மானத்துடன் அதில் நுழைந்து அழைப்பு மணியை அழுத்தினேன்.
கண்ணாடி அணிந்த ஒரு இனிமையான முகம் கொண்ட பெண்மணி வந்து கதவைத்திறந்தார். அவர் அணிந்திருந்த நர்ஸ் உடையைப்பார்த்து நான் அதிர்ந்தேன்.
"நான் இப்போது தான் இரண்டு சிறுவர்களை இங்கு கூட்டிக்கொண்டு வந்தேன்" என்றேன்.
"ஓ!"
அவர் முகம் மலர்ந்தது. கதவைத்திறந்து என்னை உள்ளே அனுமதித்தார். "நிக்கோலாவும், ஜாக்கோப்போவும் தானே! நான் உங்களை மேலே அழைத்துச்செல்கிறேன்."
அவர் என்னை ஒரு தாழ்வாரத்தின் வழியே, அந்த ஹாஸ்பிடலுக்குள் அழைத்துச்சென்றார். அந்த பங்களா ஹாஸ்பிடலாக மாறியிருந்தது.
சிறிது சிறிதாகத் தடுக்கப்பட்டிருந்த ஒரு க்யூபிக்கிலின் (cubicle)வாயிலில் நின்ற அந்த நர்ஸ், தன் உதடுகளின் மேல் ஒரு விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி எச்சரித்து விட்டு, ஒரு புன்னகையுடன், அந்த கண்ணாடித் தடுப்பின் வழியே பார்க்கும் படி சொன்னார்.
அந்த இரண்டு சிறுவர்களும் ஒரு இருபது வயதுப்பெண்ணின் படுக்கையின் இரண்டு புரமும் உட்கார்ந்திருந்தார்கள். தலையணைகளின் துணையோடு உட்கார்ந்திருந்த அந்தப்பெண்ணின் முகம் அழகாக இருந்தது. மென்மையான புன்னகையுடன் அவர்கள் நிறுத்தாமல் பேசுவதை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பார்த்தவுடனேயே, அவள் அவர்களுடைய சகோதரி என்பது உருவ ஒற்றுமையில் தெரிந்தது. அவள் அருகே இருந்த ஒரு மேஜையின் மேல் ஒரு மலர்ச்சாடியும், சில பழங்களும், புத்தகங்களும் இருந்தன.
"நீங்கள் உள்ளே போகவில்லையா?" என்று கேட்டார், நர்ஸ். "லூஸியா உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவாள்".
நான், "வேண்டாம்" என்று தலையாட்டி விட்டுத் திரும்பி விட்டேன். ஒரு குடும்பமாக, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, நான் குறுக்கிட விரும்பவில்லை.
ஆனால், படிகளில் இறங்கி வந்த போது, அந்த நர்ஸிடம் அவர்களைப்பற்றி அவருக்குத் தெரிந்ததை எல்லாம், சொல்லும் படி வேண்டினேன்.
அவர் ஆர்வத்துடன் சொல்லத்தொடங்கினார்.
"இந்த ஒரு சகோதரியை விட்டால், அவர்களுக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை. அவர்களுடைய தாயார் முன்னமே இறந்து விட்டிருந்தார். பிரபல பாடகரான அவர்களுடைய தந்தையார், போரில் கொல்லப்பட்டார். ஒரு குண்டு வீச்சில், அவர்களுடைய வீடு முழுவதுமாக இடிந்து, அவர்கள் தெருவுக்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அது வரையில், வசதியான, நல்ல நாகரீகமாக வாழ்ந்த குடும்பம் அது. லூஸியாவே ஒரு பாடகியாவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாள். போதிய உணவு இல்லாமலும், தாங்க முடியாத குளிரிலும் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
அவர்கள் வீட்டின் இடிபாடுகளில் இருந்து பொறுக்கிய சில பொருட்களை வைத்துக்கொண்டு, தலைக்கு மேல் ஏதொவொரு நிழல் கிடைக்குமாறு அவர்களே அமைத்துக்கொண்டு, எப்படியோ, உயிருடன் இருந்து வந்தார்கள்.
மூன்று ஆண்டுகள் ஜெர்மானியர்கள் அந்த நகரத்தை வசப்படுத்தியிருந்த போது, இது தான் அவர்களுடைய நிலைமை. அந்தச்சிறுவர்களுக்கு ஜெர்மானியர்கள் மேல் தீவிர வெறுப்பு வளர்ந்து வந்தது. அவர்களுக்கு எதிராக அங்கே ஒரு இயக்கம் உருவான போது அதில் அவர்கள் தான் முதலில் சேர்ந்தார்கள்.
ஒரு வழியாகப்போர் ஓய்ந்து, அமைதி திரும்பியபின், அவர்களுடைய அன்புச் சகோதரியிடம் திரும்பி வந்தார்கள். அடி மேல் அடி! அவள் நிலைமை இன்னும் மோசம்! அவளுக்கு முதுகுத்தண்டில் டியூபர்குலோஸிஸ் வந்து அவள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள்."
சற்று நிறுத்தி விட்டு அந்த நர்ஸ் தொடர்ந்தார். " இவ்வளவு துன்பத்தைக் கண்டு, இவர்கள் துவண்டு விட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்?"
இந்தக்கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிருக்கவில்லை.
"அவர்கள் தங்கள் சகோதரியை இங்கே அழைத்துக் கொண்டு வந்து, அவளை இங்கு சேர்த்துக்கொண்டு சிகிச்சை அளிக்குமாறு வேண்டினார்கள். இங்கு ஒரு வருடமாக இருக்கிறாள். அவள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஒரு நாள், அவள் நிச்சயம் நடப்பாள்; பாடவும் செய்வாள். என்ன, இப்போது மிகவும் கஷ்டமான காலம். உணவு கிடைப்பதே அரிதாக இருக்கிறது. மிகவும் விலை அதிகமும் கூட. நாங்கள் கட்டணமில்லாமல், இந்த ஆஸ்பத்திரியை நடத்த முடியாது. ஆனால். ஒவ்வொரு வாரமும், லூஸியாவின் சகோதரர்கள் தவறாமல் பணம் கட்டி விடுகிறார்கள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி சம்பாதிக்கிறார்கள் என்று எனக்குத்தெரியாது. இப்போதெல்லாம், வெரோனாவில் வேலை கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனால், அவர்கள் எதைச்செய்தாலும், நன்றாகச்செய்கிறார்கள்".
"உண்மை தான்!" என்று நான் ஒத்துக்கொண்டேன். "இதை விட நன்றாக அவர்கள் செய்ய முடியாது."
அந்தச்சிறுவர்கள் வரும் வரை காத்திருந்து அவர்களை மீண்டும் நகரத்துக்குக் கொண்டு விட்டேன். அவர்கள் என் அருகில், ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்துகொண்டு வந்தார்கள். நானும், ஒன்றும் பேசவில்லை. அவர்களுடைய ரகசியத்தை, பத்திரமாக அவர்கள் காப்பாற்றியதாக நினைத்துவிட்டுப் போகட்டுமே!
அவர்களுடைய நேர்மை என்னை மிகவும் கவர்ந்தது. போரால் அவர்களுடைய உற்சாகத்தை உடைக்க முடியவில்லை. சுய நலமில்லாத அவர்களுடைய அந்த உழைப்பு, மனித வாழ்க்கைக்கு ஒரு உன்னதத்தையும், மனித சமுதாயத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் கொடுத்தது.
Image: A.J.Cronin
Courtesy: Internet
Image may contain: 1 person, closeup

தொப்பி

 பல ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறுமிக்கு C B S E ஹிந்தி பாடம் எடுக்கும் போது இந்தக் கதையைச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

நடு நடுவே, அற்புதமான பழமொழிகளும், ரசிக்கும் படியான சொற்றொடர்களும், பாயசத்தில் வரும் முந்திரிப் பருப்பைப்போல் சுவை கூட்டும் விதமாக இந்தக்கதை சொல்லப்பட்டிருந்த அழகு என்னைக் கவர்ந்தது. சிறுவர்களுக்கான கதை தான் என்றாலும், இடையிடையே, நாட்டு நடப்பையும் கிண்டல் அடித்த விதம் நம்மை அறியாமல் புன்னகையை வரவழைக்கும். 'Topi' என்ற தலைப்புக்கொண்ட இந்தக்கதை ஸ்ருஞ்சய் (Srinjay) என்பவரால் எழுதப்பட்டு எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கீழே உள்ளது மொழிபெயர்ப்பு அல்ல. 90% மூலத்துக்கு உண்மையாக உள்ள, retold story எனலாம்.
தொப்பி
சிட்டுக்குருவிகள் இரண்டு, ஜோடியாக ஒரு மரத்தின் மேல் அன்புடன் வாழ்ந்து வந்தன. காலையில், சூரியன் உதித்தவுடன் இரண்டும், சேர்ந்தே, எழுந்திருக்கும், சேர்ந்தே, இரை தேடப்போகும், சேர்ந்தே, சிரிக்கும், சேர்ந்தே, எங்கும் திரியும். சூரியன் மறையும் நேரம் ஆனால், மீண்டும் அந்த மரக்கிளைக்கு வந்து ஓய்வெடுக்கும். நாள் முழுவதும், பார்த்தது, கேட்டது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் பெண்குருவி தன் இணையிடம் சொன்னது, " இந்த மனிதர்களைப் பார்த்தாயா? எவ்வளவு அழகாக உடை அணிகிறார்கள்! அது அவர்களுக்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது?"
ஆண்குருவி சொன்னது, " ஐயே! நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்! தங்கள் அழகை அவர்கள் உடையணிந்து மறைத்துக் கொள்கிறார்கள்! நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! நீ ஒரு புடவை கட்டிக்கொண்டால், நன்றாகவா இருக்கும்?"
"அதை விடு! அவர்கள் அழகுக்காக மட்டும் உடை அணிவதில்லை. குளிரிலிருந்தும், வெப்பத்திலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும் தான் உடை அணிகிறார்கள்."
"உனக்குப் புரிவதேயில்லை! இப்படி உடை அணிந்து பழகியதனால், அவர்களால், வெப்பம், குளிர் எதையுமே தாங்க முடிவதில்லை. அது மட்டுமா? உடையினாலேயே, அவர்களின் பணம், சமூக அந்தஸ்து எல்லாம் தெரிந்து விடுகிறதே! மனிதர்களுக்குள் வேற்றுமை தான் வளர்கிறது. வேலை செய்வதற்காக இருக்கும் கைகளையும், கால்களையும், கையுறைகளையும், காலுறைகளையும் அணிந்து ஒரு வேலையும் செய்ய முடியாதவைகளாகச் செய்து விடுகிறார்கள்! அழகான தலை முடியைக்கூட, தொப்பி அணிந்து மறைத்துக்கொண்டு விடுகிறார்கள்!"
படபடவென்று பேசி, ஆண்குருவி தன் அபிப்பிராயத்தை வலியுறுத்த முயற்சித்தது.
ஆனால், பெண்குருவி மசியவில்லை.
"அவர்கள் அணியும் தொப்பி தான் எவ்வளவு அழகாக இருக்கிறது? எனக்கும் ஒரு தொப்பி அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது!"
" இதென்ன, புதுப்பிரச்சினை! தொப்பி என்றால் சும்மாவா? ஒருவர் தலையில் இருக்கும் தொப்பிக்காக எவ்வளவு அல்லல் பட வேண்டி இருக்கிறது! எத்தனையோ பேர் தலைக்குத் தொப்பி போட்டால் தான் அவர்கள் தங்கள் தலையில் இருக்கும் முடியும்! நீ இந்த ஆசையெல்லாம் படாதே! சொல்லி விட்டேன்!"
ஆண் குருவி கொஞ்சம் அறிவாளி! ஆகவே அதில் உள்ள பிரச்சினைகளைப் பார்த்தது. ஆனால், பெண்குருவிக்குப் பிடிவாதம் அதிகம். தனக்கென்று ஒரு தொப்பியைப் பெற்று விடவேண்டும் என்பதே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று நினைக்கத் தொடங்கியது.
மறு நாள், இரண்டும் இரை தேடக்கிளம்பின. குப்பைகளைக் கிளறிக்கொண்டிருந்த போது, பெண் குருவி ஒரு பருத்தி
உருண்டையைப் பார்த்தது. அதற்கு ஒரே ஆனந்தம்! " கிடைத்து விட்டது! கிடைத்து விட்டது!" என்று கூவிக்கொண்டே ஆண் குருவியை நோக்கிப் பறந்து வந்தது. அதன் மூக்கில் ஒரு பருத்தி உருண்டை!
" என்ன கிடைத்து விட்டது?" என்றது ஆண் குருவி. அந்தப் பருத்தி உருண்டையைக்காட்டி, "தொப்பியின் ஒரு பகுதி கிடைத்து விட்டது! " என்றது பெண்குருவி.
கல கலவென்று சிரித்த ஆண்குருவி, " இப்படித்தான் ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவனுக்கு, குதிரைவண்டிக்காரன் கையில் இருந்து விழுந்து விட்ட சவுக்கு கிடைத்ததாம். "சவுக்கு கிடைத்தாயிற்று. இனி, குதிரையும், வண்டியும் தான் பாக்கி!" என்றானாம், என்றது.
பெண் குருவிக்கு சிரிப்பு வரவில்லை.
"பார்த்துக்கொண்டே இரு! நான் எப்படி தொப்பிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று பார்!" என்றது.
அந்தப்பருத்தி உருண்டையை எடுத்துக்கொண்டு குருவி பருத்தியை சுத்தம் செய்பவனிடம் பறந்து சென்றது.
"பருத்தியை சுத்தம் செய்யும் அண்ணா! பருத்தியை சுத்தம் செய்யும் அண்ணா! இந்தப்பருத்தியில் இருந்து கொட்டைகளை நீக்கிக் கொடேன்!" என்று கேட்டது.
பருத்தியை சுத்தம் செய்பவனோ வயதானவன். குளிர் காலம் வேறு! கிழிந்து போன கம்பளியைப் போர்த்திக்கொண்டு, நடுங்கிக் கொண்டே கத்தினான், " நீ இங்கிருந்து போகிறாயா, இல்லையா! நான் ராஜாவுக்கு வேண்டி, புது ரஜாய்க்காக பருத்தியை சுத்தம் செய்ய வேண்டும். உனக்கு ஓசியில் வேலை செய்யவெல்லாம் முடியாது."
"கோபித்துக்கொள்ளாதே அண்ணா! நான் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிக்கொள்ள மாட்டேன். இந்தப் பருத்தியை சுத்தம் செய்த பின் கிடைக்கும் பஞ்சில் பாதி உனக்கு, பாதி எனக்கு!" என்றது.
அவன் சந்தோஷமாக அந்தப்பருத்தியை நன்றாக சுத்தம் செய்து, பாதியைத் தான் எடுத்துக்கொண்டு, மீதியைக் குருவிக்குக் கொடுத்தான்.
அதை வாங்கிக்கொண்டு நூல் நூற்பவனிடம் குருவி செல்ல விரும்பியது. இப்போது ஆண் குருவிக்கும் நம்பிக்கை வந்து, அதுவும், தன் இணையுடன் சேர்ந்து நூல் நூற்பவனின் வீட்டுக்குச்சென்றது.
நூல் நூற்பவனுக்கு மிகவும் வயதாகி, முதுகு வளைந்து போய் இருந்தது. " நூல் நூற்கும் அண்ணா! நூல் நூற்கும் அண்ணா! இந்த சுத்தம் செய்த பஞ்சை நூலாக நூற்றுத் தருகிறாயா?" என்று கேட்டது, பெண் குருவி.
இந்தக் குருவியின் வேண்டுகோளைக் கேட்ட நூல் நூற்பவனுக்கு மிகவும் கோபம் வந்தது. " போங்கள், இங்கிருந்து! எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் ராஜாவுக்கு ஒரு புது அங்கிக்காக நூல் நூற்க வேண்டும். எனக்கு இலவசமாக வேலை செய்ய நேரம் இல்லை." என்று சொல்லி, அவைகளைத் துரத்தினான்.
" இங்கு எல்லாருமே ராஜாவுக்காகத்தான் வேலை செய்வீர்களா?" என்று கேட்டது, பெண்குருவி.
" நீ எந்த தேசத்திலிருந்து வருகிறாய்? இது கூடத் தெரியாதா? இங்கு எல்லாரும் ராஜாவுக்காகத்தான் உழைக்க வேண்டும். அவருக்கு வேண்டியவர்களுக்காகவும் தான்."
" கோபித்துக்கொள்ளாதே, அண்ணா! நாங்கள் கூலி கொடுக்காமல் வேலை வாங்க மாட்டோம். நீ இதில் இருந்து நூற்கும் நூலில் பாதியை எடுத்துக்கொள். மீதியை எங்களுக்குக் கொடு" என்றது அந்தக்குருவி.
"அட! இந்த அளவு கூலியை யாருமே கொடுத்ததில்லையே!" என்று மகிழ்ந்து, நூல் நூற்பவன் மிகவும் நேர்த்தியாக, சர்க்காவில் நூல் நூற்றுத் தந்தான்.அடுத்து இரண்டும் நெசவு நெய்பவனிடம் சென்றன. " நெசவு நெய்யும் அண்ணா! நெசவு நெய்யும் அண்ணா! என்னிடம் இருக்கும் நூலைத் துணியாக நெய்து தருகிறாயா? என்று கேட்டது, பெண் குருவி.
" நான் ராஜாவுக்காக, ஒரு புது உடைக்கு வேண்டித் துணி நெய்ய வேண்டும். இப்போது ராஜாவின் ஆட்கள் வந்து விடுவார்கள். என்னால் முடியாது" என்று சொல்லிவிட்டுத்தன் வேலையைத்தொடர்ந்தான் நெசவாளி.
"நாங்கள் ஒன்றும் சும்மா வேலை செய்யச்சொல்லவில்லை, அண்ணா! நெய்த துணியில் பாதியை நீ எடுத்துக்கொள். மீதியைக் கொடுத்தால் போதும்" என்றன குருவிகள்.
உடனே, நெசவாளி, அந்த நூலில், அழகாகத்துணி நெய்து கொடுத்தான்.
முக்கால் தூரம் கடந்தாகி விட்டது. அடுத்து, தையல்காரனிடம் போக வேண்டும்.
தையல்காரன் மிகவும் களைத்திருந்தான்.
"தையல் கார அண்ணா! தையல் கார அண்ணா! கொஞ்சம் இந்தத் துணியில் ஒரு தொப்பி தைத்துக்கொடேன்" என்றன குருவிகள்.
அவனுக்குச் சரியான கோபம் வந்தது. " இங்கே பாருங்கள்! அரசருடைய ஏழாவது ராணிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு நான் நிறைய புது உடைகள் தைக்க வேண்டும்' என்றான். மேலும்,
"எல்லாரும் வேலை தான் வாங்கிக்கொள்கிறார்கள். கூலி ஒருவரும் கொடுப்பதில்லை" என்று சலித்துக்கொண்டான்.
" நாங்கள் கூலி கொடுக்காமல் ஏமாற்ற மாட்டோம், அண்ணா! இந்தத் துணியில் இரண்டு தொப்பி தைத்து ஒன்றை நீ வைத்துக்கொள். ஒன்றை மட்டும் எங்களுக்குக் கொடு" என்றன.
தையல்காரனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி! உடனே கத்தரிக்கோலை எடுத்து, அந்தத்துணியை அளந்து வெட்டினான். ஊசி நூலை எடுத்து, அழகாக இரண்டு தொப்பிகள் தைத்தான். அது மட்டுமல்ல. அதன் மேல் ஐந்து குஞ்சலங்களையும் பொருத்தினான்.
அந்தத் தொப்பி கைக்குக் கிடைத்ததும், பெண் குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. " என் தொப்பியைப்பார்! அதில் உள்ள குஞ்சலங்களைப்பார்!" என்று கூத்தாட ஆரம்பித்தது.
"உண்மையில், நீ ராணி மாதிரி தான் இருக்கிறாய்" என்று புகழ்ந்தது ஆண் குருவி.
" ராஜா மாதிரி என்று சொல், என் ராஜாவே! எனக்கு ஈடாக ஒரு ராஜா உண்டா?" என்று பெருமிதத்துடன் பேசிய பெண் குருவிக்கு திடீரென்று, அந்த தேசத்து ராஜாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது.
குருவி அரண்மனையைச் சென்றடைந்த போது, ராஜா திறந்த வெளியில் உடம்புக்கு எண்ணெய் தடவி மாலிஷ் செய்து கொண்டிருந்தான். ஒரு சேவகன் அவனுடைய தலைக்கு எண்ணெய் தடவித் தேய்த்துக் கொண்டிருந்தான். ஒருவன் அவன் கை விரல்களுக்கு சொடக்கு எடுத்துக்கொண்டிருந்தான். ஒருவன் ராஜாவின் கால்களுக்கு எண்ணெய் தடவி நீவி விட்டுக் கொண்டிருந்தான். ராஜாவுக்கு சற்று தூரத்தில் போய் உட்கார்ந்த குருவி, " ஐயே! ராஜாவுக்குத் தொப்பியே இல்லை! எனக்குக் குஞ்சலத்தொப்பி இருக்கிறதே! என்று கூவியது.
சத்தம் கேட்டுத் திரும்பிய ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்! இதென்ன! குருவியின் தலையில் தொப்பி இருக்கிறதே!
குருவியோ, "ராஜாவுக்குத் தொப்பியே இல்லை! எனக்குக் குஞ்சலத்தொப்பி இருக்கிறதே! என்று கூவிக்கொண்டே இருந்தது.
அதைக்கேட்ட ராஜா, " யாராவது சீக்கிரம் என்னுடைய தொப்பியைக்கொண்டு வாருங்கள்" என ஆணையிடவும், அடுத்த நிமிடம், அவருடைய தொப்பி வந்தது. தொப்பியைத் தலையில் அணிந்து கொண்ட ராஜா, குருவியைப்பார்த்து, " இதோ, பார்! என்னிடமும் தொப்பி இருக்கிறதே!" என்றான்.
' ஐயே! அது வெறும் தொப்பி! என் தொப்பியில் ஐந்து குஞ்சலங்கள் இருக்கின்றனவே!" என்றது குருவி.
ராஜாவுக்கு மிகவும் கோபம் வந்தது. " என்னைப்போய் ஒரு குருவி கிண்டல் செய்வதாவது! அந்தக்குருவியைப்பிடித்து அதன் கழுத்தை நெறித்து அதைத்தூர எறியுங்கள்! அந்தத்தொப்பியை என்னிடம் கொடுங்கள். அதைக்காலால் எட்டி உதைக்கிறேன்." என்றான் ராஜா.
அங்கிருந்த மந்திரி மிகவும் பணிவுடன் சொன்னார், " அதைக் கொன்று நம் கையை அழுக்காக்கிக் கொள்வானேன், மகாராஜா! அதன் தொப்பியை மட்டும் பிடுங்கி விடலாம்" என்றார். மன்னர் "சரி" என்று சொல்லவே ஒரே பாய்ச்சலில் அதன் தொப்பியைப் பிடுங்கி ராஜாவிடம் கொடுத்தான், ஒரு சேவகன்.
அதைக்காலால் நசுக்கி எறியத்தான் நினைத்தான் ராஜா. அதற்குள் அதன் தரமும், அழகும், நேர்த்தியான வேலைப்பாடும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன.
" இவ்வளவு அழகான தொப்பியை என் ராஜ்ஜியத்தில் யார் தைத்தது? என்று கேட்டான்.
உடனே அவனது ஆட்கள் தேடிப்போய் அந்தத்தையற்காரனை அழைத்து வந்தார்கள்.
" மன்னியுங்கள், மகாராஜா!" என்று கெஞ்சிக்கொண்டே வந்தான் தையற்காரன்.
"மன்னிப்பெல்லாம், அப்புறம்! எப்படி நீ இவ்வளவு அழகான தொப்பியைத் தைத்தாய்?" என்று கேட்டான், ராஜா.
" மகாராஜா! குருவி கொடுத்த துணி மிகவும் அருமையாக நெய்யப்பட்டிருந்தது" என்றான்.
" யார் இதற்கான துணியை நெய்தது?" என்று கத்தினான்.
சிறிது நேரத்தில் நெசவாளி பயந்து கொண்டே வந்து சேர்ந்தான்.
அவனிடம் "எப்படி இவ்வளவு நன்றாகத் துணி நெய்தாய்?" என்று கேட்ட போது, " மகாராஜா! குருவி கொண்டு வந்த நூலின் தரம் அப்படி" என்றான்.
இதே மாதிரி, நூல் நூற்றவனை அழைத்துக்கேட்ட போது அவன், குருவி கொடுத்த பஞ்சு மிக நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது"
என்றான்.
பருத்தியைச் சுத்தம் செய்தவனைக் கூப்பிட்டுக்கேட்டால், " எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தால், நான் காரணத்தைச் சொல்கிறேன்" என்றான்.
" பிழைத்துப்போ! உண்மையைச்சொல்!" என்றான், ராஜா.
"பிரபோ! அந்தக்குருவி மிக நல்ல கூலி கொடுத்தது. உடனேயும் கொடுத்தது. கூலி உடனுக்குடன் கிடைத்தால், எந்தத் தொழிலாளியும் மனமார வேலை செய்வான்!" என்று கூறினான்.
" பார்த்துக்கொள், ராஜா! நான், கூலி கொடுத்து இந்தத் தொப்பியைச் செய்வித்திருக்கிறேன், சும்மா இல்லை!" என்று கொக்கரித்தது, குருவி. போதாததற்கு, " இந்த ராஜாவிடம் பணமே இல்லை, ஒரு தொப்பி கூட செய்து கொள்ள முடியாமல், என்னிடம் இருந்து, என் தொப்பியைப் பிடுங்கிக்கொண்டு விட்டான்" என்று கூச்சலிட்டது.
ராஜாவுக்கு பகீரென்றது. தன் கஜானா காலியாக இருப்பது இந்தக்குருவிக்கு எப்படித் தெரிந்தது? எவ்வளவு தான் கடுமையாக வரி வசூல் செய்தாலும், ஆடம்பரமான வாழ்க்கைக்கே எல்லாம் போதவில்லை. கஜானா எப்போதும் காலி தான்.
அதற்குள், இங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, அனேகம் பேர் அங்கே கூடி விட்டனர்.
மந்திரி சொன்னார், " இந்தக்குருவி மகாராஜாவின் மானத்தை வாங்காமல் விடாது போல் இருக்கிறதே!"
ராஜாவுக்கும் அந்த பயம் வந்து விட்டது. "அந்தத்தொப்பியை அந்தக்குருவிக்குத் திருப்பிக்கொடுத்து விடுங்கள்!" என்று ஆணையிட்டான்.
உடனே ஒரு சேவகன், அந்தத் தொப்பியைக் குருவியை நோக்கி எறிந்தான்.
அதைக் கப்பென்று பிடித்து, மீண்டும் அணிந்து கொண்ட குருவி கத்தியது, " இந்த ராஜா, சரியான பயந்தாங்கொள்ளி! என்னைப் பார்த்து பயந்து போய்த் தொப்பியைத் திருப்பித் தந்து விட்டான்" என்று.
"ஐயோ! இந்த வாயாடிக்குருவியின் வாயில் யார் விழுவார்கள்?" என்று கேட்ட ராஜா, தன் தொப்பியைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டான்.
Image : Author - Srinjay
Courtesy: Internet
Image may contain: 1 person, eyeglasses