Friday, 12 February 2021

உத்தாலக ஆருணி


‘உத்தாலக ஆருணி’ என்னும் மகரிஷி, கி. மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த தத்துவஞானி ஆவார். இவருடைய கருத்துக்கள் ப்ருஹதாரண்ய உபநிஷதத்திலும், சாமவேதத்தின் ஒரு பகுதியாகிய சாந்தோக்ய உபநிஷதத்திலும் காணப்படுகின்றன. இவர் தான் முதன் முதலில் இந்தப் பிரபஞ்சம் வெப்பம் மற்றும் ஒளி, நீர் உணவு ஆகிய மூலக்கூறுகளால் ஆனது என்று கண்டறிந்தார். ‘மிகச்சிறிய துகள்கள் ஒன்றிணைந்து பொருட்களை உருவாக்குகின்றன’ என்னும் இவருடைய கருத்துக்கள் தான் இந்தியாவின் அணுவியலுக்கு வித்திட்டன. பாஞ்சால தேசத்தில் தோன்றியதால், இவர் ‘பாஞ்சாலத்து ஆருணி’ என்றும் சொல்லப்படுகிறார்.

 

இவருடைய ஆசிரமத்தில் கற்ற மாணவர்கள் பலர் மிகச்சிறந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்களில், யாக்ஞவல்க்யர் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். ஆருணியின் மகன் தான் ஸ்வேதகேது. தன் மகனுடன் ஆருணி நடத்திய உரையாடலில் தான் முதன் முதலில் ‘தத்வமஸி’ என்ற மகாவாக்கியத்தை மகரிஷி ஆருணி உபயோகித்தார்.

இவர் நிறைய வேள்விகளை சிறப்புற நடத்தியமையால், 'வாஜஸ்ரவா' என்று புகழப்பட்டார். இவருக்கு நசிகேதன் என்ற மகனும் உண்டு. (சென்ற இதழில் நசிகேதனைப்பற்றிப் படித்திருப்பீர்கள்).

 

 

இவரைப்பற்றிய குறிப்பு மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில் காணப்படுகிறது. ஒரு மாணவன் எவ்வளவு குருபக்தியுடன் இருக்க வேண்டும் என்பதற்கும், குருவின் வார்த்தையே வேதவாக்காகக் கொள்ள வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக ஆருணியின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

 

அந்தக் காலத்தில் குருகுல வாசம் செய்து தான் அனைவரும் கல்வி பெற வேண்டும். பசுமையான சூழலில், எந்த விதமான குறுக்கீடும் இன்றி, மாணவர்கள் அமைதியான மன நிலையுடன் கல்வி கற்றனர். தன் மாணவர்களைத் தங்கள் மகன்களைப் போல் தான் ஆசிரியர்கள் நடத்தி வந்தனர்.

சிறுவன் ஆருணி தௌம்யர் என்ற ரிஷியின் மாணவனாக குருகுல வாசம் செய்து வந்தான். அது மழைக்காலம். இடைவிடாது பெய்த மழையால் தன் வயல் வரப்புகள் பாதிப்படையாமல் இருக்கின்றனவா என்று பார்த்து வருமாறு ஆருணியை குரு தௌம்யர் அனுப்பினார். வயலுக்குச் சென்று பார்த்த போது, அதிக விசையுடன் பாய்ந்த நீரால், வயலின் வரப்புகளில் விரிசல் ஏற்பட்டு, வெளியில் இருந்து அதிவேகமாக  நீர் வயலினுள்ளே வந்து கொண்டிருந்ததை ஆருணி கண்டான். இப்படியே விட்டால், நீரில் பயிர்கள் மூழ்கி அழிந்து விடும் என்பதை உணர்ந்து கொண்டான். உடனே அந்த விரிசலை அடைக்க முயன்றான்.

எவ்வளவோ முயன்றும், ஆருணியால் அந்த விரிசலை அடைக்க முடியவில்லை. தனது குரு நாதரின் பயிர்களை எவ்வாறேனும் காப்பாற்றி விடவேண்டும் என்ற உறுதியில், வேறு வழியின்றி அந்த விரிசலின் மேலேயே படுத்துக்கொண்டு, தன் உடலாலேயே நீரை உள்ளே வராமல் தடுத்தான், ஆருணி. இரவு முழுவதும் அப்படியே படுத்திருந்தான்.

அதிகாலையில், ஆருணி ஆசிரமத்துக்குத் திரும்பவில்லை என்பதைக் கவனித்த தௌம்யரிஷி, தன் பிற சீடர்களுடன் ஆருணியைத்தேடிப் புறப்பட்டார். வயல் இருந்த இடத்தில் ஆருணியைக் காணவில்லை. அவர் உரக்க, “மகனே ஆருணி! நீ எங்கேயிருந்தாலும், உடனே இங்கே வா!” என்று குரல் கொடுத்தார்.

வெகுதொலைவில் இருந்து ஆருணி பதில் குரல் கொடுத்தான். “குருவே! நம் நிலத்தின் வரப்பில் ஏற்பட்ட விரிசலால் நீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது. அதை நிறுத்த முடியாததால் நான் இங்கே படுத்துக்கொண்டு, நீரை உள்ளே வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எழுந்து வந்தேன் என்றால், நீர் பாய்ந்து வயலில் உள்ள பயிர்கள் வீணாகி விடும். ஆகவே என்னால் அங்கு வர முடியாது. என்னை மன்னியுங்கள்.”

அந்தக் குரலைக்கேட்ட தௌம்யர் ஆருணி இருந்த இடத்துக்கு ஓடினார். அங்கே, இரவு முழுவதும், நடுக்கும் குளிரில், இரவின் தனிமையில், தனது வயலைக் காத்துக்கிடந்த தன் அன்புக்குரிய மாணவனைப் பார்த்தார். அவர் உள்ளம் நெகிழ்ந்தது.

“மகனே! எழுந்திரு! இனி நான் பார்த்துக் கொள்கிறேன். இன்றிலிருந்து நீ ‘உத்தாலக ஆருணி’ என்று அழைக்கப்படுவாய் (‘உத்தாலகன்’ என்றால் ‘எழுப்பப்பட்டவன்’ என்று பொருள்.) உன்னுடைய திடமான குருபக்தியால் என் மனதை நெகிழ்த்தி விட்டாய். அனைத்து வேதங்களும், சாஸ்திரங்களும், உன் வாக்கில் ஒளிரும். உனக்கு அளவற்ற செல்வமும், மரியாதையும், பெரும்புகழும் இவ்வுலகில் கிடைக்கும்” என்று ஆசீர்வதித்து, அன்புடன் ஆருணியைத் தழுவிக்கொண்டார்.

குருவின் வார்த்தை பொய்க்குமா என்ன? ஆருணி பிற்காலத்தில் பல நல்ல மாணாக்கர்களை உருவாக்கி, மிகவும் புகழுடன் வாழ்ந்தார். 

( Originally published in the Bharatiya Vidya Bhavan's bulletin - March -2020)

No comments:

Post a Comment