ஒரு ஊரில் ஜாபாலா என்றொரு ஏழைப்பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு மகன். எப்போதும் உண்மையே பேசுவது என்ற கொள்கையில் திடமாக இருந்த அவள் தன் மகனுக்கு 'சத்ய காமன்' என்று பெயரிட்டு, அன்புடன் வளர்த்து வந்தாள். 'சத்ய காமன்' என்றால் 'உண்மையின் மேல் பற்றுக் கொண்டவன்' என்று பொருள்.
அவனுக்கு எட்டு வயதானபோது அவன்
தன் தாயிடம் வந்து, 'அம்மா! எனக்கு பிரம்ம வித்யை கற்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
நான் ஒரு குருவைத் தேடிச் செல்கிறேன்' என்று கூறினான்.
'அப்படியா, குழந்தாய்! குரு எதைக்கேட்டாலும்
உண்மையையே சொல்' என்று கூறி, ஆசீர்வதித்து அனுப்பினாள், ஜாபாலா.
சத்யகாமன் பல நாட்கள் நடந்து
'ஹரித்ருமத கௌதமர்' (Haridrumata Gautama) என்ற பெயர் கொண்ட ரிஷியிடம் வந்து சேர்ந்தான்.
அவரை வணங்கி, 'குருவே! நான் பிரம்ம வித்யை கற்க வேண்டும். என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு
அருள் புரிய வேண்டும்' என்றான்.
கௌதமர் அவனிடம், 'மிக்க மகிழ்ச்சி,
குழந்தாய்! உன் கோத்திரம் எது? உன் தந்தையார் பெயர் என்ன?' என்று கேட்டார்.
சத்யகாமன் குருவை வணங்கி, 'குருவே!
என் தாயாரின் பெயர் ஜாபாலா. அவரிடம் என் தந்தையாரைப் பற்றிக் கேட்ட பொழுது, 'நான் பல
வீடுகளில் வேலை செய்திருக்கிறேன். நீ உருவானதற்குக் காரணம் யார் என்று என்னால் நிச்சயமாகக்
கூற முடியாது' என்று சொன்னார்' என்றான்.
இந்தப் பதிலால் சற்று துணுக்குற்றாலும்,
உடனே சமாளித்துக் கொண்டு கௌதமர் கூறினார், 'இப்படித் தயங்காமல் உண்மை பேசும் உனக்கு,
நிச்சயம் ப்ரம்ம வித்யை கற்கும் தகுதி இருக்கிறது. நான் உன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்.
இன்றிலிருந்து உன் பெயர் 'சத்யகாம ஜாபாலா!' என்று கூறி ஆசிரமத்துக்குள்ளே அழைத்துச்சென்றார்.
அவனுக்கு முதலில் தியானம் செய்யும்
முறையைக் கற்றுக்கொடுத்தார். சத்யகாமனும் ஆர்வத்துடன்
கற்றுக்கொண்டு, மிகுந்த ஈடுபாட்டுடன் தியானம் பயில ஆரம்பித்தான்.
சில நாட்கள் கழித்து, குரு அவனை
அழைத்து, பலவீனமாக இருந்த 400 பசு மாடுகளைக் கொடுத்து, இவற்றை ஓட்டிக்கொண்டு காட்டுக்குப்போ.
அங்கேயே அவைகளுக்குப் புல்லும், உனக்குக் கனி கிழங்குகளும் கிடைக்கும். இவை நாளடைவில்
எண்ணிக்கையில் பெருகும். இவற்றின் எண்ணிக்கை 1000 ஆனவுடன் திரும்பி வா' என்றார்.
மறு பேச்சின்றி, சத்யகாமன் மாடுகளை
ஓட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றான்.
முதலில் காட்டில் தனியே இருப்பது
கொஞ்சம் கடினமாக இருந்தது. போகப்போக, அதுவே பழகி விட்டது. நிம்மதியான வாழ்க்கை. நல்ல
பசும்புல்லை உண்டு மாடுகள் வலிமையடைந்தன. அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போயிற்று.
சத்யகாமன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. எப்போதும் தியானித்துக்கொண்டும்,
பாடல்களைப் பாடிக்கொண்டும், காலம் கழித்தான்.
பல மாதங்கள் சென்றன.
ஒரு நாள் ஒரு காளை அவனருகே வந்து,
'சத்யகாமா! எங்கள் எண்ணிக்கை 1000 ஆக ஆகி விட்டது. எங்களை உனது குருவின் ஆசிரமத்துக்கு
அழைத்துப்போ. அதற்குள் நான் ப்ரம்ம வித்யையில் நாலில் ஒரு பகுதியை உனக்கு உபதேசிக்கிறேன்'
என்று கூறி, 'ப்ரம்மம் தான் கிழக்கிலிருந்து மேற்கிலும், வடக்கிலிருந்து தெற்கிலுமாக
எங்கும் நிறைந்து ஒளிர்கிறது. இதை நீ அறிந்து
கொள். இன்னொரு பகுதியை அக்னி உனக்கு உபதேசிப்பார்' என்றது.
காளையை வணங்கி உபதேசத்தை ஏற்றுக்கொண்ட
சத்யகாமன், மாடுகளை ஆசிரமத்தை நோக்கி ஓட்டிக்கொண்டு சென்றான். மாலை ஆனவுடன் ஒரு இடத்தில்
தங்கி, மாடுகளுக்கிடையே அமர்ந்து, குளிருக்காகத் தீயை மூட்டினான்.
உடனே, அக்னி
அவன் முன் வந்தார், 'சத்யகாமா! நானும் ப்ரம்ம வித்யையின் இன்னொரு பகுதியை உனக்கு உபதேசிக்கிறேன்.
இந்தப்பூமியும், அதன் சுற்றுப்புறமும், இந்த வானமும், கடலும், எல்லாமே ப்ரம்மம் தான்.
ப்ரம்மம் என்பது எல்லையும் முடிவும் அற்றது. அடுத்த பகுதியை ஒரு அன்னப்பறவை உனக்கு
உபதேசிக்கும்' என்று சொல்லி மறைந்தார்.
மறு நாள், மீண்டும்
மாடுகளுடன் ஆசிரமத்தை நோக்கி நடந்த சத்யகாமன் மாலை ஆனவுடன் ஓரிடத்தில் தங்கி, குளிருக்காகத்
தீ மூட்டினான்.
அப்போது ஒரு
அழகான அன்னப்பறவை பறந்து வந்து அவன் முன் வந்து அமர்ந்தது.
'சத்யகாமா!
ப்ரம்மம் தான் சூரியன். ப்ரம்மம் தான் சந்திரன், ப்ரம்மம் தான் வாழ்வின் ஒளி. இதை நீ
உணர்ந்து கொள். மீதமுள்ள பகுதியை ஒரு பறவை உனக்கு உபதேசிக்கும்' என்று கூறி அது பறந்து
விட்டது.
அதே போல், மறு
நாள் மாலை, தீ மூட்டியவுடன் ஒரு ஊதா நிறப்பறவை அவன் முன்னே வந்து அமர்ந்தது,
'சத்யகாமா!
ப்ரம்மவித்யையின் முடிவுப்பகுதியை நான் உபதேசிக்கிறேன். ப்ரம்மம் தான் மூச்சு. ப்ரம்மம்
தான் கண். ப்ரம்மம் தான் காது. ப்ரம்மம் தான் மனம். ப்ரம்மம் இவற்றில் தான் நிலை கொள்கிறது.'
எல்லாவற்றிலும் நிலத்திருப்பது ப்ரம்மம் தான்.' என்று சொல்லிப்பறந்து சென்று விட்டது.
அவரை வணங்கிய
சத்யகாமன், 'குருவே! தங்கள் மூலமாகவும் நான் ப்ரம்மத்தை அறிய விரும்புகிறேன். எனக்கு
உபதேசம் செய்யுங்கள்' என்று வேண்டினான்.
'ஆகட்டும்,
குழந்தாய்!' என்று கூறி, குரு ப்ரம்மத்தைப் பற்றி, முழுவதுமாக உபதேசித்தார். 'தன்னை
முழுமையாக அறிபவனே ப்ரம்மத்தை அறிந்தவன். நீ எல்லையற்றவன், ஒளி மயமானவன், நீ எங்குமிருப்பவன்'
என்பதை உணர்ந்து கொள்வது தான், மிகவும் உன்னதமான ப்ரம்மவித்யை' அது உனக்குக்கிட்டி
விட்டது.' என்று கூறி சத்யகாமனை ஆசீர்வதித்தார்.
பின்னாட்களில்,
சத்யகாம ஜாபாலா, மிகவும் புகழ் பெற்ற ரிஷியாக விளங்கிப் பலருக்கும், ஞானம் கிடைக்க
உதவினார்.
(சத்ய காமா ஜாபாலாவின் வரலாறு,
சாந்தோக்ய (Chhaandhogya)உபநிஷதத்தில் காணப்படுகிறது. இந்த வரலாறு, உண்மையில் தீவிர
நாட்டம் இருந்தால், பரம்பொருளைக் கூட உணரலாம் என்பதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு.)
No comments:
Post a Comment